செவ்வாய், 19 நவம்பர், 2019

அமெரிக்காவில் 2 லட்சம் இந்திய மாணவர்கள்; சேர்க்கை.. ,சீனாவுக்கு அடுத்தபடியாக



indian-sent-over-202k-students-to-us-in-2018-19-second-largest-after-china-report.hindutamil.in : சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் குவியும் இந்திய மாணவர்கள்; ஓராண்டில் 2 லட்சம் பேர் சேர்க்கை

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா, சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து ‘2019 Open Doors Report on International Educational Exchange’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க வர்த்தகத் துறையின் தகவல்படி, சர்வதேச மாணவர்கள், சுமார் ரூ.3.2 லட்சம் கோடியை அமெரிக்கப் பொருளாதாரத்துக்காகப் பங்களித்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.5% அதிகமாகும்.
சீனா முதலிடம்
தொடர்ந்து 10-வது ஆண்டாக சீனா, அமெரிக்காவுக்கு மாணவர்களை அனுப்பும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. 2018-19 ஆம் கல்வியாண்டில் மட்டும் சீனாவில் இருந்து 3,69,548 மாணவர்கள் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.

அதே நேரத்தில் இந்தியா 2,02,014 மாணவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் கொரியா 52,250 மாணவர்களை அனுப்பி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. சவுதி அரேபியா 37,080 மாணவர்களுடன் நான்காவது இடத்திலும் கனடா 26,122 மாணவர்களை அனுப்பி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
இந்தியா மற்றும் சீன மாணவர்கள் மட்டும், சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகள்
சர்வதேச மாணவர்களில் 51.6% பேர், 2018-19 ஆம் கல்வியாண்டில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் கணிதம் மற்றும் கணினி அறிவியலைத் தேர்ந்தெடுப்பவர்களின் விகிதம் 9.4% ஆக உயர்ந்துள்ளது. அடுத்த இடத்தில் வணிகம் மற்றும் மேலாண்மைத் துறை உள்ளது.
அதேபோல சர்வதேச மாணவர்கள் மத்தியில் அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் துறையாக 21.1% விருப்பத்துடன் பொறியியல் துறை உள்ளது. எனினும் அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் முதல் முறையாகப் பதிவு செய்யும் மாணவர்களின் சதவீதம் 0.9 குறைந்துள்ளது''.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக