புதன், 27 நவம்பர், 2019

கொழும்பு அம்பாள் கபே ..நாராயணசாமி ..கொழும்பில் 27 cafeக்கள் கல்பனா தியேட்டர்....கொடிகட்டி பறந்த தொழிலதிபர் ... பாஞ்சாலங்குறிச்சியை ...

மணி ஸ்ரீகாந்தன்-  tamilvamban. blogspot.com: :  இலங்கையில் சைவ உணவகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற பொருளை எடுத்துக் கொண்டால் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான எந்தவொரு ஆய்வும் மேற் கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
தினசரி இலட்சக்கணக்கான மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான உணவுகளை வழங்கும் சேவையை 'சைவக்கடைகள்' ஆற்றி வருகின்றன.
தமிழ் மக்களுடனும் தமிழ் உணவு கலாசாரத்துடனும் தவிர்க்க முடியாத ஒரு பிணைப்பை சிங்கள மக்கள் மத்தியில் சைவ உணவகங்கள் ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையல்ல. தோசையும் வடையும் இன்று சிங்களவர்களின் உணவாகவும் மாறிப்போனதற்கு சைவ உணவகங்கள் காரணமாக இருந்துள்ளன.
கறிகளுக்கு, சைட்டிஷ்களுக்கு சைவ உணவகங்கள் கட்டணம் அறவிடுவதில்லை என்பதாலும், ஏனைய உணவகங்களுடன் ஒப்பிடும்போது சைவ உணவகங்களில் விலை மலிவு என்பதாலும் அவற்றுக்கான மவுசு குறையவே இல்லை. நிர்வாகம் சரியாக செய்தால் சைவ உணவகம் நடத்தி யாரும் நஷ்டப்படுவதில்லை.

சைவ உணவகங்கள் பற்றி ஆய்வு செய்தால், நூல் எழுதினால் நாராயணசாமியைத் தவிர்த்துவிட்டு அதைச் செய்ய முடியாது. அதன் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருப்பவர். அவரை பகிரங்க உலகுக்கு அறிமுகம் செய்யும் வகையிலேயே இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
கொழும்பு ஆமர் வீதி சந்தியில் அமைந்திருக்கும் அம்பாள் கபே உணவகத்தை பார்த்திருப்பீர்கள். அந்தக்கடையில் நடுநாயகமாக நெற்றியில் திருநீற்றுப் பட்டையோடு ஐயங்கார் பாணியில் ஒரு பெரியவர் அமர்ந்திருப்பார். அவரை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?...
அவர் பெயர் நாராயணசாமி.
சினிமா, வர்த்தகம் என பல்துறை வித்தகராக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு பெரிய மனிதர். நம் நாட்டில் ஒரு காலத்தில் வைரசாக பரவி இருந்த ஜெக்பொட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக விளங்கியவர் இவர்தான். கொழும்பில் மட்டும் தனக்கு 300 ஜெக்பொட் சென்டர்கள் இருந்ததாக ஒத்துக்கொள்ளும் இவர், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸதான் ஜெக்பொட் சென்டர்களுக்கு சாவு மணி அடித்தவர் என்கிறார்.

மணவை தம்பி, நாராயணசாமி, மற்றும் கிங்ஸ்லி செல்லையா.
கிரிலப்பனையில் இருந்து பின்னர் 83 கலவரத்தில் எரியூட்டப்பட்ட கல்பனா தியேட்டர் உட்பட 27 அம்பாள் சைவ ஹோட்டல்களுக்கு சொந்தக்காரராக விளங்கிய அவரை ஒரு காலை வேளையில் ஆமர் வீதி அம்பாள் உணவகத்தில் சந்தித்துப் பேசினோம்.

இப்போது 83 வயதில் உடல் தளர்ந்து நடை தளர்ந்து காணப்பட்டாலும் தினமும் காலையில் எழுந்து எட்டரை மணிக்கெல்லாம் ஆமர்வீதி அம்பாள் உணவகத்துக்கு வந்து விடுகிறார்.

தான் ஹோட்டலுக்கு வந்த பிறகுதான் ஹோட்டல் வேலை சூடு பிடிக்கிறது என்பது அவரின் நம்பிக்கை.

"இந்த வயதான காலத்தில் நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கலாமே! ஏன் இப்படி வந்து கஷ்டப்படுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

"என் உடம்பு மட்டும்தான் பலவீனம் அடைந்திருக்கிறது. மனதளவில் நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்" என்று கம்பீரமாக பதில் சொல்கிறார் நாராயணசாமி.
இ-வ: எம்.பீ.பாலன்,நாராயணசாமி,ஸ்ரீசங்கர்,(கண்ணாடி),முன்னால் அமைச்சர் திருச்செல்வம்,ஹெலன் குமாரி,உதயகுமார்.
"இப்போ நீங்கள் பார்க்கிற நாராயணசாமிக்கும் அப்போ இருந்த நாராயணசாமிக்கும் ரொம்ப வித்தியாசம். அந்தக்காலத்தில் காலையில் எழுந்த உடன் ஒரு முக்கால் போத்தல் அடித்துவிட்டுத்தான் பல் விளக்குவேன். உடல் பயிற்சி செய்வேன். என்னைப்போல ஆட்டுரலில் உட்கார்ந்து மணிக்கணக்கில் மாவாட்ட யாருக்கும் வராது" என்று பழைய நினைவுகளில் மூழ்குகிறார் நாராயணசாமி.

தமிழகத்தில் பாஞ்சாலங்குறிச்சி கயத்தாறு பக்கத்தில் உள்ள ஊரைச் சேர்ந்தவர். சிறுவயதில் தொழிலாளியாக கொழும்புக்கு வந்தவர் தனது 14வது வயதில் கொழும்பு செட்டியார் தெருவில் இருந்த கிருஷ்ண கபே ஹோட்டலில் பரிமாறுபவராக பணியாற்றி இருக்கிறாராம்.
றைகம் கீழ் பிரிவு ஆலய நிர்மாண பணிகளின் போது
நாராயணசாமி மற்றும் கடைசியாக உடன் வருபவர்
கந்தையா மாஸ்டர்
"மாவாட்டுவது, பத்திரம் கழுவுவது, மேசையை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் நான் செய்திருக்கிறேன். சைவ உணவகம் ஒன்றில் எனக்குத் தெரியாத வேலையே கிடையாது. அப்போது எனக்கு அந்த ஹோட்டலில் மாதச் சம்பளம் 30 ரூபா தந்தாங்க. ஐந்து வருஷம் தொடர்ச்சியாக அங்கே வேலை செய்திருக்கிறேன். சம்பள உயர்வு எல்லாம் எனக்குக் கிடையாது. அப்போது விலைவாசி ரொம்பவும் குறைவு.

இப்போ மின்சாரத்தில் ஓடும் ஆட்டுக்கல் 18 ஆயிரம். ஆனா அப்போது பெரிய ஆட்டுக்கல் 13 ரூபாவுக்கு விற்கப்பட்டது. அதில ஐந்து கிலோ உளுந்து போட்டு ஆட்டலாம். தோசை ஒன்று 5 சதத்திற்கும், மசால் தோசை 10 சதத்திற்கும் விற்கப்பட்டது. இப்போ மசால் தோசையின் விலை 130 ரூபா. அந்தக்காலத்தில் எனது ஹோட்டல்களில் பசும்பாலில்தான் டீ போடுவார்கள். அதற்காகவே பேலியாகொடை, கிரிபத்கொடை, மாவலை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று பால் பண்ணைகளை அமைத்திருந்தேன். சுமார் 1200 பசுமாடுகள் இருந்தன. மாடுகளின் உணவுக்காக ஒரு பசும்புல் தோட்டமும் எனக்கு இருந்தது. அதோடு குருநாகலில் 118 ஏக்கரில் ஒரு தென்னந் தோட்டமும் இருந்தது"  என்று தன் வர்த்தக எல்லைகளை விபரித்துச் சென்றபோது, இவர் சாமானியர் அல்ல, அக்காலத்தில் ஒரு பெரும் தொழிலதிபராக இருந்தவர் என்பது புரிந்தது. அப்போ நீங்க ஒரு பெரிய முதலாளிதான் என்று அவரிடம் கூறியபோது, சாடை காட்டி இல்லை என்றார்.

"தொழிலாளி இல்லை, உழைப்பாளி என்பதே சரியான அடையாளம்" என்ற போது உழைப்பால் உயர்ந்தவராக எம்முன் விஸ்வரூபம் எடுத்தார் நாராயணசாமி. இப்போது சைவ உணவகங்களில் பல இயந்திரங்கள் வந்து விட்டன. புதிய சமையல் நுணுக்கங்கள், சமையல் தொழில்நுட்பங்கள் வழக்கத்துக்கு வந்து விட்டன. எனவே அன்றைய தோசை, இட்லி, சாம்பாரின் சுவையை விட இன்றைய தோசை, இட்லியின் சுவை, செய் நேர்த்தி அதிகம்தானே? என்று கேட்டோம்.

"இல்லை.. அன்றைய சுவை இப்போது இல்லை. ஏனென்றால், அன்றைக்கு நாங்கள் வாங்கிய உளுந்து, அரிசி, வெங்காயம், பருப்பு போன்ற மூலப் பொருட்கள் இரசாயனங்கள் கலக்காதவை, இல்லையா? இன்றைக்கு எல்லாம் இரசாயனம் கலந்தவையாகி விட்டன. மெஷின் பட்டு மாதிரி மாவாட்டினாலும் அன்றைக்கும் விழுது மாதிரி வரும்வரை நாங்களும் மாவாட்டிய பின்னர்தான் வடை, தோசை சுடுவோம். ஆகவே, அன்றைக்கு பண்டங்கள் சுவையாகவும் தரமாகவும் இருந்தன" என்கிறார் நாராயணசாமி.

நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மஞ்சள் குங்குமம்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான இவர் அந்தப் படத்திற்கு 4 இலட்சம் ரூபா முதலீடு போட்டிருக்கிறார். அன்றைய திகதியில், 70 களின் ஆரம்பப் பருவத்தில், இது ஒரு பெரிய தொகை. ஆனால் போட்ட பணம் திரும்பக் கிடைக்கவில்லை.

"மஞ்சள் குங்குமத்தை ஆரம்பத்தில் கிங்ஸ்லி செல்லையாதான் தயாரித்தார். பிறகு அவர் கை விட்டுவிட நான் தொடர்ந்தேன். படத்தில் இலாபம் பார்க்கும் நோக்கில் நான் அதை செய்யவில்லை. எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. அதற்காக செய்தேன். பருத்தித்துறை கடற்கரையில் நான் பேசுவது மாதிரி ஒரு சீன் எடுத்தோம். படத்திற்கு போட்ட முதலீட்டில் பாதிதான் வந்தது. அதன் பிறகு சினிமா படம் எடுப்பதை பெரிய அளவில் செய்யலாம் என்று தீர்மானித்தேன்.
எம். ஜி. ஆரை கதாநாயகனாக போட்டுப் படம் எடுத்தால் நிறைய காசு பார்க்கலாம் என்று நினைத்து அவரோடு பேசினேன். அதற்கு எம். ஜி. ஆரும் சம்மதித்தார். ஆனால் அவர் ஒரு கண்டிஷன் போட்டார். இந்திய படத்திற்கான இந்திய உரிமையை தான் எடுத்துக்கொள்வதாகவும் மற்ற நாடுகளுக்கான உரிமையை என்னை எடுத்துக்கொள்ளும்படியும் சொன்னார். நானும் சம்மதித்தேன். ஆனால் அப்போதிருந்த இலங்கை அரசு அதற்கு அனுமதி தரவில்லை. அதனால் திட்டத்தைக் கைவிட வேண்டியதாயிற்று" என்று தன் சினிமா அனுபவம் பற்றிப் பேசினார் நாராயணசாமி.

நாராயணசாமியின் வர்த்தக எல்லை கொழும்பையும் தாண்டி, சிலாபம், நீர்கொழும்பு, இரத்தினபுரி, இங்கிரிய ஆகிய பகுதிகளிலும் விஸ்தரித்துக் கிடந்தது. இங்கெல்லாம் அவரது சைவ உணவகங்கள் இயங்கின.

"இங்கிரிய நகரில் அப்போ சுமார் 40 தமிழ் கடைகள் இருந்தன. அந்தக்காலத்தில் நாகமணி அண்ணாச்சி, வீரப்பெருமாள் உள்ளிட்டோர் பெரிய வர்த்தகர்களாக விளங்கினார்கள். 83 க்குப் பிறகு அவை இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமாயின. அந்தப் பகுதியில் இருந்த கந்தையா மாஸ்டர் எனக்கு ரொம்பவும் நெருங்கிய நண்பர்... எங்கள் இருவருக்குமான நட்பு நீண்டகாலமாக இருந்து வந்தது" என்று தமது பழைய ஞாபகங்களை அசை போடும் நாராயணசாமிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அதில் ஒரு மனைவி இறந்து விட்டாராம். ஒருவர் கொழும்பில், மற்றவர் தமிழகத்தில். அந்தக்காலத்தில் ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது கௌரவத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். அதைக் குறிப்பிட்டு கேட்டோம்.

"இல்லை... அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒருவனுக்கு மூன்று மனைவிகள் அமைவது அந்த ஆணின் உடல்வாகு, மனவலிமை மற்றது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வளவுதான்" என்றார் பட்டென.

தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று நாராயணசாமியிடம் கேட்டோம்.

முயற்சி, நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது, திட்டமிடல், சிக்கனம் என்று நச்சென்று பதில் சொன்னார்.

பெரு வாழ்வு வாழ்ந்து முடித்துவிட்ட நாராயணசாமிக்கு ஒரே ஒரு மனக்குறை. உடல் தளர்ந்து விட்டதே, நடக்க சிரமப்பட வேண்டியிருக்கிறதே என்பதுதான் அது. 83 வயதுவரை வாழ்பவர்கள் இன்று எத்தனைபேர்? எம்மைப் பொருத்தவரை அவர், வயதுக்கான தளர்ச்சியைத் தவிர, நன்றாகத்தான் இருக்கிறார். உயரங்களைத் தொட்ட, எல்லைகளை விஸ்தரித்துக் கொண்ட, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய நிறைவான வாழ்க்கை.

ஆனால் இதை அவர் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எம்முடன் பேசிக் கொண்டிருந்த நாராயணசாமி, அம்பாள் கபேயை நோட்டம் விடுகிறார். சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அங்கும் இங்குமாக பார்க்கவே, ஒரு பணியாளரை பார்வையால் நிறுத்தி,

"அவருக்கு என்ன வேணும்னு கேளு" என்கிறார்.

இந்த வயதிலும் அவர் இரத்தத்தில் ஊறிப்போன வயிறாற உணவிடும்  குணம் உயிரோட்டத்துடன் அவருள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக