வெள்ளி, 11 அக்டோபர், 2019

கொழும்பை அதிரவைத்த UNP ரணில் கட்சி பொதுக்கூட்டம் .. வெற்றியை உறுதிசெய்த மக்கள் கூட்டம்?


hindutamil.in/ : மக்கள் வெள்ளத்தில் கொழும்பை அதிர வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக்கூட்டம்: சஜித் பிரேமதாசாவுக்கு வலுக்கும் ஆதரவு ராமேசுவரம் . இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் ஐந்து லட்சம் கலந்து கொண்டதால் கொழும்பு நகரமே வியாழக்கிழமையன்று ஸ்தம்பித்தது.
இலங்கையில் அதிபர் தேர்தல் நவ. 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜ பக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கோத்தபய ராஜபக்சவுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை தெரிவித்துள்ளன.
இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலும் தனது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது அதிபர் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வியாழக்கிழமை கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் நடைபெற்றது. இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச பேசியதாவது:
இந்த அதிபர் தேர்தல் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து தரப்பு மக்களின் குரலுமாக நாம் வெற்றி பெறுவோம். உலகுடன் போட்டியிட்டு முதல்தர நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான புதிய சிந்தனை, புதிய தொழிநுட்பம், புதிய இலக்குகளுடன் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
மனித உரிமைகளை பலப்படுத்தும் நாடாகவும், உற்பத்திகளை உருவாக்கும் நாடாகவும், ஏற்றுமதியில் அதிக அக்கறை செலுத்தும் நாடாகவும் நாம் உருவாக்குவோம். இளைய சமுதாயம், தொழிலாளர்கள், பெண்கள் என அனைவரையும் இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்க வேண்டும். அதை விடுத்து ஒரே குடும்பம் மட்டுமே (ராஜபக்சே குடும்பம்) இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்கக்கூடாது.
நாம் உருவாக்கும் புதிய இலங்கையில் ஊழல், மோசடிகள், குற்றங்கள் இருக்காது. அரச சொத்துக்களை சூறையாட இடமளிக்க மாட்டோம். உங்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தலைமைத்துவத்தை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.
இந்தக் கூட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவின் முதலாவது பிரச்சார கூட்டம் புதன்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையை விட கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகும்.
எஸ். முஹம்மது ராஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக