திங்கள், 14 அக்டோபர், 2019

China தமிழ்நாடு - ஃபூஜியன் உறவு. வரலாற்றுப் பின்னணி என்ன?

 திணையகம் : வரலாற்றில் நம் பங்கை அறிவோம்.
வரலாற்றை மீட்போம். தமிழ்நாடு - ஃபூஜியன் உறவு. வரலாற்றுப் பின்னணி என்ன?
மோடிக்கும் ஷி ச்ச்சின்பிங்குக்கும் இடையிலான முறைசாரா சந்தி்ப்பு நடந்தமுடிந்தபின், சில முன்னகர்வுகளை முன்மொழிந்திருக்கிறார்கள். அதில் ஒன்று, தமிழ்நாட்டுக்கும் சீனாவின் தென்கிழக்குக்கரை மாகாணமான ஃபூஜியனுக்கும் (Fujian) இடையில் ஒரு உறவை உருவாக்குவது என்பதாகும்.,
இவ்விரு மாநிலங்களையும் சகோதரி மாநிலங்கள் (sister states) என்று அறிவித்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு - சீன உறவு பற்றி நிறையவே பேசினோம். இப்போது ஷி ச்சின்பிங்கின் ஆர்வத்தின் காரணமாகவே இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.
ஆனால் அத்தனை ஏன் ஃபூஜியனுடன் தமிழ்நாடு உறவு கொள்ளவேண்டும்? அந்தப் பின்னணி இதுதான்.
ஃபூஜியன் மாகாணத்தின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று சுவன்ஜோ (Quanzhou, இதில் Qu என்பதை ச்சு என்று உச்சரிக்கவேண்டும், கு என்று அல்ல). பண்டைய நகரமான சுவன்ஜோவுக்கும் அதன் அண்மை நகரங்களான கான்டன், ஹாங்ஜோ போன்ற நகரங்களுக்கும் தமிழ்நாட்டின் சோழ மண்டலக் கடற்கரை நகரங்களுக்கும் இடையில் ஆயிரமாண்டுகாலத்துக்கும் முன்பிலிருந்தே வர்த்தக உறவுகள் உண்டு.

9-13 நூற்றாண்டுகளில் தமிழ் வணிகர்களின் பயணங்கள் உச்சத்திலிருந்தன. அப்போது சீனாவில் சோங் வம்ச காலமும் தமிழ்நாட்டு பிற்காலச் சோழர் வம்ச காலமும் கிட்டத்தட்ட சமகாலமாக இருந்த ஆண்டுகளில் இது பெரிய அளவுக்கு இருந்தது. அந்தக் காலம் முதல் தமிழ் வணிகர்கள் இந்த தென்கிழக்குச் சீன துறைமுக நகரங்களில் பெரிய அளவுக்கு குடியேறியிருக்கிறார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, அரபியர்கள் உள்பட பல்வேறு நாட்டவரும் இங்கே குடியேறினர். தமக்கான குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக்கொண்டனர்.
பின்பு, சோங் வம்ச காலம் முடிந்து குப்ளாய்கானின் தலைமையிலான (இவர் செங்கிஸ்கானின் பேரர்) யுவான் வம்ச சாம்ராஜ்ய காலத்திலும் தமிழ் வணிகர்களுக்கும் சீன அரசுக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருந்திருக்கிறது. உலக வரலாற்றிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடொன்றை ஆண்டவன் குப்ளாய்கான்தான் என்று கூறுகிறார்கள்.
1200களில் சுவன்ஜோவிலுள்ள தமிழ் வணிகர்கள் அரை டஜனுக்கும் மேற்பட்ட சிவ, விஷ்ணு கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். குறிப்பாக சம்பம்தப் பெருமாள் என்பவர் திட்டமிட்டு கட்டிய ஒரு சிவன் கோயில் குப்ளாய்கானின் பெயரால், அவரது நலனுக்காக கட்டப்பட்டது என்று சில வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இந்தக் கோயில் கட்ட குப்ளாய்கான் நிதி உதவி அளித்தான் என்றும் இந்தக் கோயிலுக்கே திருக்கானீச்சுவரம் என்று பெயர் உண்டு என்றும் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படாத தகவல்கள் கூறுகின்றன. இதற்கான இப்போதுள்ள ஒரே சான்று தமிழ், சீன இருமொழிகளில் இங்கே கிடைத்துள்ள ஒரு கல்வெட்டுதான். (இணைத்திருக்கிறேன்).
இந்தக் கல்வெல்ட்டின் முழு படிவம் என்னிடம் இல்லை. இதில் செக்சேய் கான் என்று குறிப்பிடப்பட்டிருப்பது குப்ளாய்கான்தான். அவரது பல பெயர்களில் இதுவும் ஒன்று.
குப்ளாய்கானின் ஆட்சிக்காலத்தில்தான் அவரது மார்க்கோபோலோ தன் புகழ்பெற்றப் பயணத்தை மேற்கொண்டார். தென் சீனக் கடலிலிலிருந்து தமிழ்நாட்டுக்கும் வந்தார். தமிழகத்திலிருந்து வந்த நூற்றுக்கணக்கான கப்பல்கள் சுவன்ஜோ, ஹாங்ஜோ பகுதிகளில் காணப்பட்டதை அவரும் வேறு பல பயணிகளும்கூட தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சுவன்ஜோவில் பெளத்த, இஸ்லாமிய வழிபாட்டிடங்களும் உண்டு. நரசிம்மர் கோயில் ஒன்றும் இருந்திருக்கிறது. இவை அனைத்துமே கால ஓட்டத்தில் பொலிவிழந்து சிதைந்துபோயின.
ஒரு காலத்தில் கிழக்குலகின் அலெக்சாண்ட்ரியா என்று கருதப்பட்ட சுவன்ஜோ இன்று ஒரு வரலாற்று இடுகாடு. அந்த நகரத்தில் உள்ள சுவன்ஜோ கடல்வழி வர்த்தக மியூசியத்தில் இது போன்ற கோயில்களின் சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஃபூஜியான் மாகாணம் இன்று சீனாவில் தொழிலுற்பத்திக்கு மிகவும் பெயர்பெற்ற இடமாக இருக்கிறது. இன்றைய அதிபர் ஷி ச்சின்ப்பிங் ஃபூஜியனின் கவர்னராக சில ஆண்டுகள் இருந்தார். அப்போது அவர் அந்த மியூசியத்துக்கும் சென்றிருக்கிறார் என்று விவரங்கள் கூறுகின்றன.
மோடி - ஷி சந்திப்பின் தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையிலான பண்டைய பட்டுப்பாதை தொடர்பு பற்றி, ஷிதான் மோடிக்கு எடுத்துச்சொல்லியிருக்கிறார் என்பது சீன செய்தி ஏஜென்சியான ஷின்ஹூவா செய்திக்குறிப்பிலிருந்து உற்றறிய முடிகிறது. சீனாவின் இந்த தமிழ்க்காதல் எதுவரை செல்லும், யாருக்கு பலளனிக்கும் என்பதையெல்லாம் காலம்தான் முடிவுசெய்யவேண்டும். ஆனால் ஷி விவரமறியாமல் மாமல்லபுரத்துக்கு வரவில்லை என்பது மட்டும் உறுதி.
ஆனால் இவ்விரு நாகரீகங்களுக்கும் இடையிலான உறவை நாம் நமது கண்ணோட்டத்திலிருந்தும் நலனிலிருந்தும் மீட்டெடுப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.
இத்துடன் இணைக்கப்பட்ட இந்தப் புகைப்படத்துக்குப் பின் - சுவன்ஜோ கல்வெட்டுக் காட்சி - ஒரு சம்பவம் உண்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கிலிருந்தும் சுமார் 200 புத்தகப் பதிப்பாளர்கள் கலந்துகொண்ட, சீனாவின் ஷான்தோங் மாகாணத் தலைநகரமான ஜினான் நகரப் புத்தக் கண்காட்சியில் ஆழி பதிப்பகம் கலந்துகொண்டது. அப்போது தமிழ் தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவந்த பல நூல்களை கண்காட்சிக்கு வைத்திருந்தோம். அந்தக் கண்காட்சியில் இந்தக் கல்வெட்டுப் படத்தைத்தான் பெரிய அளவுக்கு பேனராக அச்சிட்டு வைத்திருந்தோம். வருவோர் போவோருக்கெல்லாம் இந்த கதையை நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம்.
2016 இலிருந்து மூன்று முறை சீனாவுக்கு பெய்ஜிங் உலகப் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளுக்குச் சென்று வருகிறேன். ஆழி பதிப்பகத்துக்காகவும் எங்கள் மொழிபெயர்ப்புச் சேவை தொடர்பாகவும் இந்தப் பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்
அந்த நிகழ்வுகளில் ஒரு தமிழ்ப் பதிப்பாளர் என்று கூறி என்னை அறிமுகப்படுத்திக்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இந்தியா என்றால் இந்தி என்று மட்டுமே கிட்டத்தட்ட எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பதிப்புத்துறையில் இருந்த பல சீனர்களுக்கு தமிழ் என்கிற சொல்லே புதிதாக இருந்தது. பல சமயங்களில் தமிழ் என்ற சொல்லின் சீனப் பெயரை மொபைல் போனில் காட்டி படிக்கச்சொல்லி புரியவைப்பேன். பெய்ஜிங், ஜினான், ஹெஃபய் ஆகிய மூன்று நகரங்களில் மூன்று பதிப்புசார் நிகழ்ச்சிகளில் சீன - தமிழக உறவுகள் பற்றி பேசியிருக்கிறேன் (இதையெல்லாம் அவ்வப்போது முகநூலில் எழுதியிருக்கிறேன்).
இப்போது இந்திய, சீன ஊடகங்களில் தமிழ்நாடும் ஃபுஜியனும் சுவன்ஜோவும் மாமல்லபுரமும் பேசுபொருளாக ஆகிவிட்டன. மகிழ்ச்சி!
தமிழ்நாடு - ஃபூஜியன் உறவு பற்றி இப்போது பேசியிருப்பது அப்படியே நீடிக்காது. இந்திய அரசுக்கு இதில் நிச்சயமாக ஆர்வம் இருக்காது. தமிழ்நாட்டரசுக்கு இது குறித்து நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்காது. வழக்கம் போல தமிழ்கூறு நல்லுலகம்தான் இந்த முயற்சியை தன் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
தமிழர்கள் உலகத்தின் கடந்த காலத்தில் தங்களுக்கு இருந்த இடம், உலகத்தின் எதிர்காலத்தில் தங்களுக்கு வேண்டிய இடம், இப்போது நமக்குள்ள "இடம்" - ஆகியவை பற்றியெல்லாம் ஒரு புரிதல் பெறவேண்டும்.
- ஆழி செந்தில்நாதன் அவர்களின் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக