ஞாயிறு, 13 அக்டோபர், 2019

வள்ளலார் எப்படி இருப்பார்? நேரில் பார்த்தவர்கள் சொன்னது

vவள்ளலார் எப்படி இருப்பார்? நேரில் பார்த்தவர்கள் சொன்னது என்ன? அதிசயப்பிறவி #2 nakkheeran.in - கதிரவன் வ
ள்ளலார் காலத்தில் வாழ்ந்தவர்களின் நிழற்படங்கள் காணக்கிடைக்கின்றன.  19ம் நூற்றாண்டில் வள்ளலாருடன் வாழ்ந்தவர்களின் நிழற்படங்களையும் பார்க்க முடிகிறது.   அப்படியிருக்கையில், வள்ளலாரின் ஒரே ஒரு நிழற்படம் கூட ஏன் இல்லாமல் போனது?  இப்போது சிலைகளிலும், சித்திரங்களிலும் இருப்பதை போன்றுதான் வள்ளலார் இருந்தாரா?
இளவயது முதலாக தவ வலிமையினால் வள்ளலார் பிரணவ தேகம் என்கிற ஒளிஉடலை பெற்றிருந்தார்.   அவர் நடந்தால் காலடித்தடம் பதியாது.  அவரின் நிழலும் நிலத்தில் விழாது.   கள்ளிமுள்ளிலும் நடந்து செல்வார்;எதுவும் ஆகாது.  அப்படிப்பட்ட ஒளி உடல் எப்படி ஒளிப்படத்தில்(நிழற்படம்) பதிவாகும். அதனால்தான் வள்ளலாரைப்பற்றிய நிழற்படங்கள் எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள்.   வடலூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களில் வள்ளலாருடன் தங்கியிருந்தபோது நெருங்கிப்பழகிய காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை எழுதியுள்ள, ‘’இராமலிங்க சுவாமிகள் சரித்திர சுருக்கம்’’என்னும் நூலிலும் இவ்வாறே இருக்கிறது.

ஒளிஉடல் பெற்ற துறவியின் உருவம் பதிவாகவில்லை என்றால், வள்ளலாரை நிழற்படம் எடுக்கும் முயற்சிகள் நடந்துள்ளதா? இதுவும் ச.மு.கந்தசாமிப்பிள்ளையின் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது.

வள்ளலாரை நிழற்படம் எடுத்துவிட வேண்டும் என்று பலரும் முயன்றார்கள்.   ஆனால், ஒருமுறை கூட அவரின் உருவம் பதிவாகவில்லை.  இது தொழில்நுட்ப பிரச்சனை என்று கருதி, சென்னையில் இருந்து பிரபல நிழற்படக்கலைஞர் மாசிலாமணி முதலியாரை வரவழைத்து படம் எடுக்கச்சொன்னார்கள்.  அவர், எட்டுமுறை படம் பிடித்தும் ஒன்றில் கூட வள்ளலாரின் உருவம் பதிவாகவில்லை.  ஒன்பதாவது முறையாக முயன்று பார்த்தபோது,  வள்ளலாரின் உடை மட்டும் மங்கலாக பதிவாகியிருந்தது.  கொஞ்சம்கூட அவரின் உருவம் பதிவாகவில்லை.   இது தொழில்நுட்ப பிரச்சனை இல்லை.  ஒளிஉடல் என்பதால் பதிவாகவில்லை என்று அன்பர்கள் நினைத்தார்கள்.   

வள்ளலாரின் உருவம் இயற்கையாகவே பதிவாகவில்லையா? இல்லை, தனக்கு இருந்த சக்தியினால் தன் நிழல் விழாமல் அவர் பார்த்துக்கொண்டாரா?  உருவ வழிபாட்டை முற்றிலும் வெறுத்தவர் வள்ளலார்.  உருவ வழிபாடு கூடாது;அருட்பெருஞ்ஜோதியே கடவுள் என்று வலியுருத்தி வந்த வள்ளலாருக்கு, எங்கே தனது உருவத்தையும் வைத்து வழிபட்டுவிடுவார்களோ என்ற பயம் வந்தது.   அந்த பயத்தினால்தான் தன் உருவம் நிழற்படத்தில் பதிவாகாமால் பார்த்துக்கொண்டார். ஆனாலும், இதை உணராத அன்பர்கள் தங்களின் முயற்சியை தொடர்ந்தார்கள்.   படம்தானே எடுக்கமுடியவில்லை. அவரை சிலைவடித்துவிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.  பண்ருட்டியில் இருந்து குயவரை அழைத்து வந்து, வள்ளலாரை காட்டி, இதே போல் சிலை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கேட்டனர்.  அவரும்  மண்ணால் ஆன வள்ளலாரின் சிலை வடித்து, அதற்கு வண்ணமடித்து கொண்டு சென்றார்.  இதைக்கண்டு திடுக்குற்ற வள்ளலார், இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என நினைத்தார்.   குயவர் அந்த சிலையை கொடுத்தபோது,  அதை வாங்கி பார்த்தவர்,  ’’பொன்னான மேனி மண்ணாயிற்றே’என்று கூறி புன்னகைத்துக்கொண்டே, கைகளில் இருந்து நழுவவிட்டார். கீழே விழுந்து உடைந்ததும் குயவர் வருந்தினார்.  தவறி விழுந்து உடைந்ததாக எல்லோரும் பதறினார்கள்.  வள்ளலாரோ அகமகிழ்ந்தார்.

அப்படியும் அன்பர்கள் விட்டபாடில்லை.  அடுத்த முயற்சிக்கு ஆயத்தமானார்கள்.   ஓவியர்களைக்கொண்டு வள்ளலாரின் உருவத்தை வரைந்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள்.   அப்படி சில ஓவியர்கள், வள்ளலாரை நேரில் கண்டு வரைந்த ஓவியங்கள்தான் இன்று வள்ளலாரின் உருவமாக இருக்கிறது.   இந்த சித்திரங்களை வைத்துதான் பின்னாளில் வள்ளலார் சிலைகள் வடிக்கப்பட்டன.  

வள்ளலாரின் சித்திரங்கள் மூன்று விதமாக இருக்கின்றன.  இதில், எது உண்மையான வள்ளலாரின் உருவம் என்ற சந்தேகம் எழாமல் இருக்காது.  அமர்ந்த நிலையில் நீண்ட மீசையுடன் இருந்த ஓவியம் கருங்குழி வேங்கட ரெட்டியால் வீட்டில் இருந்தது.  நின்ற நிலையில் மெல்லிய மீசையுடன் இருக்கும் ஓவியம், ஆடூர் சபாபதி குருக்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தது.  மெல்லிய மீசையுடன், இலேசான தாடியுடன், சோகமாக இருக்கும் ஓவியம் வேட்டவலம் ஜமீன் மாளிகையில் இருந்தது.  

கருங்குழியில் இருந்த ஓவியம்
k

கருங்குழியில் இருந்த ஓவியம்தான் வள்ளலாரின் உண்மையான உருவம் என்கிறார் மூத்த சன்மார்க்கி மு. பாலசுப்பிரமணியம்.   ‘’ வள்ளலார் கதையை எழுதுவதற்காக 1960 ம் ஆண்டு வடலூர் சென்றேன். அப்போது மேட்டுக் குப்பத்தில், வள்ளலாரை நேரில் கண்ட ஒரு வயதானவர் இருப்பதை கேள்விப்பட்டேன்.  அந்தப் பெரியவரைச் சந்தித்து,  வள்ளலாரைப் பற்றி நிறைய செய்திகளை அவரிடம் கேட்டறிந்தேன்.  அந்த சந்திப்பில், வள்ளலாரின் உருவம் எப்படி இருந்தது என்று கேட்டேன்.  அதற்கு அவர், ‘’கருங்குழியில் வைக்கப்பட்டுள்ள உருவம் தான் அவரது உண்மையான தோற்றம்.  ஒரு ஓவியர் அவரைப் பார்த்து வரைந்த படம் அது. அந்தப் படத்தில் மீசை இருக்கும். இடுப்பில் சாவிக் கொத்து இருக்கும். அவரது உண்மை உருவம்  அதுதான் என பெரியவர் சொன்னார்’’என்று பாலசுப்பிரமணியம் தனது,  ‘’வள்ளலார் வாழ்கிறார்’’ என்ற புத்தகத்தில்  பதிவு செய்துள்ளார். 

வேட்டவலம் ஜமீன் மாளிகையில் இருந்த ஓவியம்
வ்

வள்ளலாரின் சமரச சன்மார்க்க ஆய்வில் ஈடுபட்டு அது குறித்த பல்வேறு நூல்களை எழுதியிருக்கும் பா.கமலக்கண்ணனோ,  வேட்டவலம் ஜமின் மாளிகையில் இருக்கும் படமே வள்ளலாரின் உண்மை உருவமாக இருக்கும் என்று  சொல்கின்றார்.  

வள்ளலாரோடு 1849 முதல் 1874 வரையிலும் 25 ஆண்டுகள் உடனிருந்த தொழுவூர் வேலாயுத முதலியார் அடிகளாரின் மறைவுக்கு பின்னர், 1882ல் சென்னை பிரம்ம ஞான சபா துணைத்தலைவர் ஜி.முத்துசாம் செட்டியார் முன்பாக, கும்பகோணம் ஆராவமுது ஐயங்கார், மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் ஆகியோரை சாட்சியாக வைத்துக்கொண்டு, அளித்துள்ள வாக்குமூலத்தில் வள்ளலார் எப்படி இருப்பார் என்பதை  கூறியுள்ளார்.

நடுத்தரமான உயரத்துடன் இருப்பார்.   மெலிந்து, எலும்புகள் தெரியும்படி இருந்தாலும் உறுதியான உடல்.  எந்நேரமும் சுறுசுறுப்புடன் இருப்பார்.  ஓய்வு என்பதே அவர் அகராதியில் கிடையாது. பரந்த, கூரிய, ஒளிவீசும் கண்கள், மாநிற மேனி, நீளமான மூக்கு. இறுதிக்காலங்களில் தலைமுடியை நீளமாக வளரவிட்டிருந்தார். அமைதியான அந்த முகத்தில் ஒரு மெல்லிய சோகம் எப்போதும் இழையோடிக்கொண்டிருக்கும் என்று வேலாயுத முதலியாரின் வாக்குமூலத்தின் மூலம் அறிய முடிகிறது.  இதை வைத்துப்பார்த்தால், கருங்குழியில் உள்ள ஓவியம்தான் ஒத்துப்போகிறது என்றும்,  வேட்டவலம் ஜமீனில் இருந்த ஓவியம்தான்  ஒத்துப்போகிறது என்றும் சொல்லப்படுகிறது.

வள்ளலாரின் உண்மை உருவம் இதுதான் என்று  கூறுவதற்கு வழி இல்லை என்றாலும்,  உருவ வழிபாடு கூடாது என்று சொன்னவரின் உருவம் எப்படியிருக்கும் என்று அலசுவது அவசியமில்லைதான்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக