வியாழன், 31 அக்டோபர், 2019

விவசாயத்திற்கு ஆபத்து... விவசாயத்தை மார்வாடிகளிடம் தாரைவார்க்க ஒப்பந்த விவசாய சட்டம்

தினகரன் : விவசாயிகள் நலன் காப்பதற்காக ஒப்பந்த விவசாயம் என்ற புதிய சட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களும் இந்த திட்டத்தை பரிசீலிக்காதபோது தமிழக அரசு மட்டும் கடந்த 14.2.2019  அன்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து விட்டதால் விரைவில் மசோதா அமல்படுத்தப்பட உள்ளது. இது தமிழக விவசாயத்திற்கு ஆபத்தாக அமையும்  என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.இதுவரையும் விவசாய நிலத்தை தான் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டார்கள். அதுவும் தனியார் நிலங்கள் தான் இதில் ஈடுபடுத்தப்பட்டன. குத்தகைக்கு எடுத்து பருவம் பார்ப்பது என்று கிராமங்களில்  கூறுவார்கள். நிலம் தரிசாக போவதை தடுக்க நில உரிமையாளர்கள் விவசாய கூலித்தொழிலாளர்களிடம் பருவத்திற்கு ஏற்ப ஒப்பந்தம் செய்து குத்தகை வழங்குவார்கள்.


இப்போது குத்தகை முறையை ஒப்பந்த விவசாயம் என்ற புதிய சட்டத்தின் மூலம் தமிழக அரசு அமல்படுத்தப்பட உள்ளது. பயிர் செய்யும் முன்பே தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்ய வழிவகுக்கும் வகையில் இந்த சட்டம்  அமல்படுத்தப்பட உள்ளது. இதில் தானியங்கள், பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாட்டு தீவனங்கள் உள்ளிட்ட 110 விவசாய விளைபொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக கடலை அல்லது நெல் பயிரிடும் முன் விவசாயிகளிடம் பெரு  நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளும். விலையும் முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் விவசாய அறுவடை சமயத்தில் அந்த விலை கொடுத்து அத்தனை விளைபொருட்களையும் பெருநிறுவனங்கள் பெற்றுக்
கொள்ளும்.

அதிக விளைச்சல், விலை வீழ்ச்சி சமயங்களில் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை தடுக்க இந்த சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. அரசின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது மிகவும் நல்ல  சட்டமாகவும், விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டமாகவும் தோன்றலாம். ஆனால் இந்த சட்டம் தமிழக விவசாயத்தை அளிக்கும் மத்திய அரசின் சூழ்ச்சி  திட்டம். இதற்கு தமிழக அரசு  பலியாகிவிட்டது என்று கூறும் விவசாய ஆர்வலர்கள் கருத்தையும் மறுப்பதற்கு இல்லை.

 குத்தகை சட்டம் வந்தால் விவசாய  தானியங்களை அரசு கொள்முதல் செய்வது நிறுத்தப்படலாம். பெருநிறுவனங்கள் வைத்ததே விலை என்ற நிலை உருவாகலாம். அதோடு அதோடு விவசாயிகள் பெரு நிறுவனங்கள் தரும் விதைகளை  மட்டுமே சாகுபடி செய்ய நேரிடும். இதனால் தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாய முறைக்கும், விதைகளுக்கும் ஆபத்து நேரிடும். தமிழக விவசாய முறையே மாறலாம். எனவே மத்திய அரசின் சட்டத்தை பா.ஜ ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல  வேறு எந்த மாநிலமும் பரிசிலிக்காத போது அதை சட்டமாக்கி அமல்படுத்த நினைப்பது நிச்சயம் தமிழக விவசாயத்திற்கு ஆபத்தாக கூட முடியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக