செவ்வாய், 29 அக்டோபர், 2019

சுஜித்தை மீட்க ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை: ஸ்டாலின்

சுஜித்தை மீட்க ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை: ஸ்டாலின்மின்னம்பலம் : ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப் பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்றன. எனினும், 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் உயிரிழந்த நிலையில் இன்று (அக்டோபர்
29) அதிகாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்டான். இதனையடுத்து, சுஜித்தின் உடல் ஆம்புலன்சில் வைத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பாத்திமாபுரம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் நடுக்காட்டுப்பட்டிக்குச் சென்றார். சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாலை வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். இதுபோலவே கே.என்.நேரு, திருச்சி சிவா, செந்தில் பாலாஜி மற்றும் கரூர் எம்.பி ஜோதிமணி, திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சுஜித்தின் வீட்டுக்குச் சென்று அவனது பெற்றோரையும் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக வந்தேன். 80 மணி நேரம் குழந்தையை மீட்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மீட்புப் பணியில் அரசு மெத்தனத்தோடு செயல்பட்டது. 36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும். அமைச்சர்களும், சில அதிகாரிகளும் தொலைக்காட்சிக்கு பேட்டியளிப்பதற்கு காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணிகளில் காட்டவில்லையோ என்ற ஏக்கம் அனைவருக்கும் உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “இந்த சம்பவம் நடந்த உடனேயே தேசிய பேரிடர் மீட்புப் படையை அழைத்திருக்க வேண்டும். ராணுவப் படையையும் அழைத்திருக்க வேண்டும். ஏன் அழைக்கவில்லை என்பது கேள்விக் குறியாகியுள்ளது” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அரசை குறைசொல்ல வேண்டும் என்பதற்காக இதனை சொல்லவில்லை. இனி இதுபோன்ற சம்பவம் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் என்றும் தெரிவித்தார்.
ஸ்டாலினைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று சுஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக