வியாழன், 10 அக்டோபர், 2019

நில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்கள்!


மின்னம்பலம் : நில மீட்புப் போரின் கால் நூற்றாண்டு நினைவுத் தடங்கள்! டி.எஸ்.எஸ்.மணி . அக்டோபர் 10, பஞ்சமி நில மீட்பு இயக்கத் தியாகிகள் நாள்
1994ஆம் ஆண்டு (ஜெயலலிதா ஆட்சி) இதே நாளில், தோழர்கள் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் செங்கல்பட்டில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். செங்கல்பட்டு முக்கியச் சாலையில், மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு அது நடந்தது.
திருக்கழுக்குன்றம் அருகே காரணை கிராமத்தில் ஆங்கிலேயரால் ஆதி திராவிட நிலமற்ற விவசாயிகளுக்கு இனாமாக நிபந்தனை அடிப்படையில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் நிபந்தனைகளை மீறி மாற்றாரால் வாங்கப்பட்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் கிடந்ததை காரணை கிராமத்தைச் சேர்ந்த வணிகவரித் துறை அலுவலகத்தில் வேலைசெய்து வெளியே வந்த தீபன் சக்கரவர்த்தி கையிலெடுத்தார்.

வணிகவரித் துறையில் அப்போது நிலுவையிலிருக்கும் வரி பாக்கிகள் பற்றி ஆராய ஓர் உயர்நிலைக் குழு அமைத்தார்கள். அதில் தீபன் சக்கரவர்த்தியும் இருந்தார். அதில் நிலங்கள் பற்றியும் பஞ்சமி நிலங்கள் பற்றியும் கணக்கு இருப்பதை தீபன் கவனித்தார்.
தங்கள் ஊரான காரணையிலும் பஞ்சமி நிலம் இருப்பதையும் அந்நிலம் தனது தந்தை பெயரிலும் தனது பெயரிலும் இருப்பதையும் காண்கிறார். அதே நேரம், தங்கள் ஊர் அருகே உள்ள பஞ்சமி நிலத்துக்கு வைணவக்கடவுள் பெயருள்ள பெரிய காவல் துறை அதிகாரி பெரிய சாலை ஒன்றைப் போடுவதைக் கண்டு துணுக்குற்றார். அதையொட்டியே தீபனுக்கு பஞ்சமி நிலம் என்ற ஆவண ஆதாரங்கள் கிடைத்தன.
இதுபோலவே தமிழகமெங்கும் பஞ்சமி நிலங்கள் கொடுக்கப்பட்டதும் தமிழகமெங்கும் நிபந்தனைகளை மீறி அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆங்கிலேயரால் கொடுக்கப்பட்ட நில ஆவணங்களுடன் அக்கறையுள்ளவர்களை அவர் அணுகினார்.

‘அசஃபா’ (ASAFAA) என்ற ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்த ஊழியர் சங்கத் தலைவர் தோழர் லட்சுமி நரசிம்மன் அந்தப் பிரச்சினையை, தோழர் ஜான் தாமஸ் வசம் கொண்டுவந்தார். அவர்கள் இருவரும் அந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்த நக்சல்பாரி இயக்கமான சிபிஐ (எம்.எல்) கட்சியிடம் கொண்டுசென்றனர். சிபிஐ (எம்.எல்) கட்சிக்கு அன்று மாவட்ட அமைப்பாளராக தோழர் தேவராஜ் இருந்தார். அவருடன் தோழர் ராகவராஜ் பணியாற்றி வந்தார்.
தோழர் ராகவராஜ் புரட்சிகர இயக்கத்தின் முன்னோடியாக அங்கே வேலை செய்து வந்தார். அவரது அணுகுமுறையில்தான் அனைத்து தோழர்களும் அணி திரண்டனர். முக்கியமாக அம்பேத்கர் பாசறை என்ற அமைப்பை நிறுவி தோழர் செல்வராஜை அதற்குத் தலைவராக நியமித்தார்கள். அவருடன் தோழர் சவுமிய நாராயணனும் தீவிரமாகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பஞ்சமி நில ஆவணங்களை எடுத்துக்கொண்டு, தோழர் ஜான் தாமஸ் மூலம் அங்கேயிருந்த மாமண்டூரில் உள்ள தொண்டு நிறுவனமான சாம் அமைப்பை அணுகினார்கள்.
அந்த அமைப்புக்கு, கத்தோலிக்க குரு அருட்திரு மார்ட்டின் தலைமை தாங்கினார்.
ஆங்கிலேயன், ஆதி திராவிடர்களின் நிலமற்ற நிலைமையைக் கண்டு, அவர்களுக்குக் கொடுத்ததே பஞ்சமி நிலங்கள். அவற்றை பிறர் பிடுங்கிக் கொள்ளக் கூடாதே என்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் அவற்றைக் கொடுத்திருந்தனர். அதைத்தான் வசதியான மாற்று சமூகத்தவரும் காவல் துறை அதிகாரிகளும் கைப்பற்றியிருந்தனர். அவற்றை மீட்கவே தீபன் சக்கரவர்த்தி அந்தப் போராட்டத்துக்கு விதை போட்டார். எம்.எல் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் பலரும் தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் அவர்கள் தலித் தோழர்களுடன் சேர்ந்து அந்த நிலப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையிலெடுத்தனர்.

இடதுசாரிச் சிந்தனையாளர்களைப் பொறுத்தவரை, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோட்பாட்டை பஞ்சமி நில மீட்பு என்ற சட்ட ரீதியிலான வழியிலேயே சாதிக்கப் போராடினார்கள். அப்போதுதான், ஒரு தந்திரத்தைக் கையாண்டு, சர்ச்சைக்குள்ளான பஞ்சமி நிலத்தில் அம்பேத்கர் சிலையைக் காரணையில் நிறுவினார்கள். அதை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் கீழ் காவல் துறை அப்புறப்படுத்தியது.
அதை எதிர்த்தே செங்கல்பட்டு துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு 1994ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அணி திரண்டனர். மக்களை நோக்கி காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் குண்டடிப்பட்டு ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இரண்டு தோழர்கள் பலியாகினர். ஊடகவியலாளர் தோழர் ஜேம்ஸ் அந்தத் துப்பாக்கிச்சூடு படங்களை எடுத்து, பின்னாட்களில் புகைப்படக் காட்சியாக வைக்க உதவினார்.
அந்த நிகழ்ச்சி நாடெங்கும் காட்டுத்தீயெனப் பரவியது. போராட்டக்காரர்களைக் காவல் துறை தேடியது. கிடைத்தவர்களை அடித்து உதைத்தது. தோழர் தேவராஜ் கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போதுதான் நானும் தோழர்களுடன் அந்தப் போராட்டத்தில் இரண்டறக் கலந்தேன்.
சென்னைக்குத் தப்பிவந்த தலைவர்களுக்கு, அகில இந்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் (AICUF) அக்கறையுள்ள ஊடக நண்பர்களும் அடைக்கலம் கொடுத்தனர். கடைசியாக பிணை எடுத்து தோழர்கள் மீட்கப்பட்டனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வே.கருப்பன், வேலூர் ஜெ.ஜெயகரன் ஜோசப் ஆகியோர் தலைமையில் தோழர்கள் ஓர் இயக்கத்தை அமைத்தனர். தோழர்கள் ஆர்.கே.சாமிநாதன், எஸ்.நடராசன் இணைந்து கொண்டார்கள் .
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவும் தோழர் ஷீலு தலைமையில் இணைந்து கொண்டது. ‘தலித் போராட்டக் கூட்டுக் குழு மற்றும் பஞ்சமி நில மீட்பு இயக்கம்’ என அதற்குப் பெயர் வைத்தார்கள். குமரியிலிருந்து, சென்னை வரை அம்பேத்கர் ஊர்தி பயணம் முன்னெடுக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகளும் அதில் இணைக்கப்பட்டார்கள்.
மாநிலமெங்கும் பஞ்சமி நிலங்கள் கணக்கு பார்க்கப்பட்டன. வருவாய்த் துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், சட்டமன்றத்திலேயே பஞ்சமி நிலங்கள் நிபந்தனைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அறிவித்தார். இன்று பல்வேறு சிறு அமைப்புகளும், சில தொண்டு நிறுவனங்களும் பஞ்சமி நில மீட்பு பற்றிப் பேசி வருகின்றன.
25 ஆண்டுகள் கழித்து அந்தத் துப்பாக்கிச்சூட்டை இன்று நாம் நினைவுகொள்வோம். இன்னமும் மாநிலமெங்கும் பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லையே என்ற செய்தியை உரக்கக் கூறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக