திங்கள், 28 அக்டோபர், 2019

சகோதர படுகொலைகளுக்கு முன்பு ஈழத்தில் .. ராணுவத்தை நோக்கிய பல்முனை தாக்குதல்கள்... மீள்பார்வை .....

மண் மூட்டைகளின் பின்னால் கல்வி
வேதநாயகம் தபேந்திரன் : ”பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்ப பயம் ”
இது இன்றைய நாளில் நாடெங்கும் உள்ள பிரச்சினை.
துப்பாக்கிச் சூடு வரும். செல் குண்டு வரும். இறப்பு வரலாம். ஆனாலும் நாங்கள் பாடசாலைக்கு வருவோம்.
இப்படி ஒரு உறுதிமிக்க மாணவர் சமூகம் இருந்த காலத்தின் , உறுதி தளராத பெற்றோர் வாழ்ந்த காலத்தின் பதிவு இது.
யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் கதை இது.
யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமாக இருந்த காலம். 1984 ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் கோட்டை இராணுவத்தினர் வெளியேற முடியாதபடி போராளி இயக்கங்கள் ஆயுதங்களுடன் காவல் காத்தார்கள்.
பலாலி,வல்வெட்டித்துறை,நாவற்குழி,ஆனையிறவு உட்பட எல்லா முகாம்களிலும் தமிழீழக்கனவோடு போராளி இயக்கங்கள் காவல் காத்த நேரம் அது.
எங்கட பெடியள் என்று தான் மக்கள் அழைத்த காலம். உயிரும் உணர்வுமாக மக்கள் போராட்ட இயக்கங்களுக்குப் பின்னால் திரண்ட காலம்.
இராணுவம் முகாமை விட்டு வெளியேற வந்தால் ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொரு இயக்கம் நின்று சண்டை பிடிப்பார்கள்.
வேற்றுப்பிறிப்பு இல்லாமல் மக்கள் இயக்கங்களுடன் கலந்த காலம். ஒரே குடும்பத்தில் ஒரு தாயின் பிள்ளைகள் வேறுபட்ட இயக்கங்களில் இருந்தாலும் ஒன்றுபட்டு இருந்த காலம்.
யாழ் கோட்டை இராணுவத்தினர் வெளியேற முடியாத நிலை வந்த போது செல் தாக்குதல்,துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
யாழ் பெருநகரத்திற்கு அண்மித்து கோட்டை இருந்ததால் பொதுமக்களது உயிரிழப்பு அடிக்கடி நிகழும்.
யாழ் நகரத்தில் மண் மூட்டைகள் பல இடங்களில் அமைத்து இருப்பார்கள்.
கோட்டையில் செல் குத்தும் சத்தம் கேட்டதும் புளொட் இயக்கத்தினர் சங்கு ஒன்றை பலத்த சத்தமாக ஊதுவார்கள்.

மக்கள் பாதுகாப்புத் தேடி மண் மூட்டை அரணுக்குள் ஒளிந்து கொள்ளுவார்கள்.
யாழ் மத்திய கல்லூரி கோட்டைக்கு நேரெதிரே இருந்தது.
போர் வெம்மை அடிக்கடி பட்டது. பாடசாலையை இடம் மாற்றினால் என்னவென்று கூட சிலர் யோசித்தார்கள்.
ஆனால் மாணவர்களும் பெற்றோர்களும் விடாப்பிடியாக நின்றார்கள். பாடசாலை இந்த இடத்தில் தான் இயங்க வேண்டும்.
மாற்ற வேண்டாம்.
மண் மூட்டைகளை ஜன்னல்கரையோரங்களில் அடுக்கினார்கள். பாடசாலை வளாகத்தில் செல் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க மண் மூட்டை அரண்களை அமைத்தார்கள்.
கல்வியைத் தொடர்ந்தார்கள்.
1986 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு யாழ் கோட்டை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்டு வந்த துப்பாக்கிக் குண்டொன்று உயர்தர வகுப்பில் உயிரியல் விஞ்ஞானம் படித்த பொன் விபுலானந்தன்
( A/L 1988 Batch ) என்ற மாணவனைத் தாக்கியது.
அந்த மாணவன் உயிர் பிரிந்தது. மத்திய கல்லூரிச் சமூகம் கண்ணீர் வெள்ளத்தில் அழுதது. முழுத் தமிழ் மாணவச் சமூகமும் கவலை கொண்டது.
மருத்துவராகக் கூடிய திறமையுள்ள அந்த மாணவனது இழப்பு அளவிடற்கரியது.
ஆனாலும் மாணவர்கள் துவண்டு போகவில்லை. தொடர்ந்தும் பாடசாலைக்குப் போனார்கள் . கற்றார்கள்.
மரணம் வருமென்று தெரிந்தும் இடைவிடாமல் யாழ் மத்திய கல்லூரிக்குச் சென்று படித்த மாணவர்களது உறுதி போற்றுதற்குரியது.
பொன் விபுலானந்தனதும், மாணவர்கள் மண் மூடைகளுக்குப் பின்பாக இருக்கும் படங்களையும் தந்த கல்லூரி நண்பருக்கு நன்றிகள் பல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக