வெள்ளி, 4 அக்டோபர், 2019

படிக்கவே தேவையில்லை என்று கூறும் சிறுவர்கள் ... கல்விக்கு எதிராக நச்சு கருத்துக்களை பரப்பும் சீமான் ரங்கராஜ் பாண்டே வகையறா....

 சிறுவன் : தமிழ்நாட்டுல காமராஜர்.கலைஞர்,எம்ஜியார்.அம்மா யாருமே காலேஜுக்குப் போவல. பெரிய முதல் அமைச்சர் ஆவலியா? தெண்டுல்கருன்னு ஒருத்தர் கிரிக்கெட் ஆடுறாராமே.கோடி கோடியா சம்பாதிக்கிறார்னு கேள்விப்பட்டேன். அவரும் பத்தாம் கிளாசு தானாம்மே..பிஹார்ல பியூன் வேலைக்கு டாக்டருக்கு படிச்சவங்க்ய எல்லாம் அப்ளிகேசன் போட்டாங்களாமே? அதுக்கு நாங்க பரவாயில்லதான?
Rebel Ravi : இளமையில் கல் ! எங்கள் வீட்டுக்கருகில் ஒரு பெரும் கட்டடம்
எழும்பிக் கொண்டிருந்தது. பலர் கற்களைத் தூக்கியும், மண்சுமந்தும், கட்டைகளைத் தூக்கியும், சிமெண்ட் மூட்டைகளோடு் மாடிப் படிகள் ஏறியும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு இது என்னவோ உழைப்பாய்த் தெரியவில்லை.
அந்த கட்டடத்தினைச் சுற்றி வந்தேன். அங்கே கல் இறக்கி விட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை என்னருகில் வரும்படி அழைத்தேன். அவன் எதுக்கு என சாடையில் கேட்டான். சும்மாதான் வா என்றேன். தயங்கித் தயங்கி வந்தான்.
டீ சாப்பிடலாம் வர்றியா என்றேன். வேல நேரத்தில வெளிய போனா அடிப்பாங்க்ய என்றான். சரி வேல முடிஞ்சதும் வர்றியா என்றேன்..ஒரு வித தயக்கத்துடன் ஒப்புக்கொண்டான்.
அவன் வரும் வரையில் அங்கே என்ன நடக்கிறது எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நிறைய சிறுவர்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வறுமையோடு போராடிக் கொண்டிருப்பதாய் எனக்குத் தோன்றியது. குற்ற மனப்பான்மையாகவும் இருந்தது. பளிங்குக் கற்களை ஒரு சிறுவன் மெஷின் கொண்டு அறுத்துக் கொண்டிருந்தான். அதன் பொடித்துகள்கள் நேரடியாக அவனது மூக்குக்குள்ளும், வாய்க்குள்ளும் போவதை பொருட்படுத்தாமல். இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் முப்பது வயதிற்குள் இறந்து விடுவதாக நான் படித்திருந்தேன். எந்த வித பாதுகாப்புமின்றி கல் சுமந்து பல மாடி ஏறும் சிறுவர்களைப் பார்த்த போது, இளமையில் கல்( சின்ன வயசிலேயே படி) எனப் பெரியவர்கள் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு இவர்கள் கல் தூக்குகிறார்களோ என்று கூடத்தோன்றியது.
ஒரு வழியாக சூரியன் கூட ஓய்வெடுக்கச் சென்று விட்டான். தொழிலாளர்கள் வருத்தப் பட்டும் பாரம் சுமந்து கொண்டிருந்தார்கள். ஏனோ இளைப்பாறுதல் தர ஏசு வரவேயில்லை.
சிறுவன் மிகவும் களைத்துப்போய் விட்டான். முகம், கை கால் கழுவிக்கொண்டு, வேறு துணி உடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான். ’அண்ணே போலாம் வாங்க’ என்றான்.
நாங்கள் நடந்து ஒரு டீக்கடையில் அமர்ந்தோம். நான் டீயும் பஜ்ஜியும் சொல்லிவிட்டு அவனருகில் சென்று அமர்ந்தேன்.
என்னா மேட்டரு? என நேரடியாக விஷயத்திற்கு வந்தான். உன்ன பேட்டி எடுக்கப் போறேன் என்றேன். விழுந்து விழுந்து சிரிச்சான். எண்ணே நா என்ன தமன்னா வா’ இல்ல தோனியா..என்னப்போயி என மீண்டும் சிரிச்சான். பரவாயில்லையே, இவனுக்கு சிரிக்கவும் தெரிகிறது தோணி, தமன்னா கூடத் தெரிகிறதே என எண்ணிக் கொண்டேன்.
ஏன் தம்பி நீ படிச்சிருந்தா இப்படிக் கஷ்டப் பட வேண்டாமில்ல? என்றேன். டீயை உறிஞ்சிக் கொண்டே அவன் தலையாட்டினான். ‘எனக்கு அப்பிடித் தோணலண்ணே. எனக்கு பத்து வயசாவுது தெனம் 150 ரூவா சம்பாதிக்கிறேன். உனக்கு என்ன வயசு? என்றான். 16 என்றேன். நீ எவ்வலவு சம்பாதிக்கிறே? உனக்கு காலேஜுக்குப் போற காசு கூட உங்கப்பாதான் குடுத்திருப்பாரு,இல்ல? என்றான்.
இருக்கலாம் தம்பி ஆனா நான் ஸி.ஏ ஆயிட்டா, நான் நாலு பரம்பரைக்கு சம்பாதிப்பேன் என்றேன். படிச்சா தா தம்பி பெரிய ஆளு ஆவ முடியும் என்றேன்.
அண்ணே,நீங்க படிச்சவங்க. உங்க அளவுக்கு எனக்கு அறிவு இல்ல. ஆனா எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், தமிழ்நாட்டுல காமராஜர்.கலைஞர்,எம்ஜியார்.அம்மா யாருமே காலேஜுக்குப் போவல. பெரிய முதல் அமைச்சர் ஆவலியா? தெண்டுல்கருன்னு ஒருத்தர் கிரிக்கெட் ஆடுறாராமே.கோடி கோடியா சம்பாதிக்கிறார்னு கேள்விப்பட்டேன். அவரும் பத்தாம் கிளாசு தானாம்மே..பிஹார்ல பியூன் வேலைக்கு டாக்டருக்கு படிச்சவங்க்ய எல்லாம் அப்ளிகேசன் போட்டாங்களாமே? அதுக்கு நாங்க பரவாயில்லதான சார்...என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. எவ்வளவு தவறான முறையில் செய்திகள் இந்தச் சிறுவனை சேர்ந்துள்ளது. தம்பி நீயா இந்த வேலைக்கு வந்தியா,இல்ல அம்மா அப்பா கட்டாயப் படுத்தினாங்களா என்றேன். எங்க குலத்தொழிலே இது தான் சார். இஸ்கூலுக்குப் போய்ப் பார்த்தேன். ஒண்ணும் புடிக்கல. கல் தூக்க வந்துட்டேன்.கை நெறய பணம் கெடைக்குது’ என்றான்.
இந்த வேலைக்கு வர்றவங்க ரொம்ப நாள் உயிரோட இருக்கறதில்ல, தெரியுமில்ல என்றேன். அதனால என்ன சார். இருக்கறவரைக்கும் இருப்போம் என்றான், பஜ்ஜியைத் தின்று முடித்து. எழுந்து கொள்ளும் தோரணையில், ‘ வேற ஏதாச்சும் கேள்வி இருக்கா சார்? என்றான். எல்லா கேள்விக்கும் இவன் எடக்கு முடக்காகத்தான் பதில் அளிக்கப் போகிறான் என்று எண்ணிய படி நானும், ‘ இல்ல தம்பி. அவ்வளவுதான் என்றேன்’. அப்ப வரட்டா என்று கூறியபடி, எனக்கு முன்னே போய், டீக்கடை கல்லாவில் என்னுடைய டீக்கும் அவனே காசு கொடுத்து விட்டு, ஓடிப்போனான்...
நான் மெல்ல நடக்க ஆரம்பித்தேன், சிந்தித்தவாறே. ஏன் உலகம் இப்படி மாறி விட்டது? இந்தியாவில் இப்படி என்றால், பிரிட்டனில் நடந்த கலவரத்தின் போது எல்லா கடைகளையும் சூறை யாடிய கலவரக் காரர்கள் புத்தகக் கடைகளில் மட்டும் நுழையவில்லை என்றும் கேள்விப்பட்டேன்...
படிப்பது என்ன வீண் வேலையா? புரியவில்லை.
ரெபெல்ரவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக