செவ்வாய், 8 அக்டோபர், 2019

அதிரவைக்கும் கேரள ‘சீரியல் கில்லர்’ பின்னணி! வீடியோ


அதிரவைக்கும் கேரள ‘சீரியல் கில்லர்’ பின்னணி!minnambalam : வடக்கு கேரளாவின் கோழிக்கோட்டிலிருந்து 34 கி.மீ தூரத்தில் உள்ள கூடத்தாயி என்ற கிராமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்த தொடர் கொலைகளின் திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கு பொதுமக்களை மட்டுமின்றி வழக்கை விசாரிக்கும் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இக்கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் கடந்த 2002 முதல் 2016 வரை தொடர்ந்து மரணித்து வந்துள்ளனர். இதுகுறித்து இக்குடும்ப உறுப்பினர் ரோஜோ அளித்த புகாரின்பேரில் அனைவரும் ஒரே மாதிரி இறந்தது தெரியவந்தது. சினிமாவை மிஞ்சும் இந்தத் தொடர் கொலைகளின் பின்னணி கேரளம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிரவைத்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியைச் சேர்ந்தவர் டாம் தாமஸ். இவர் மனைவி அன்னம்மா. இவர்களது பிள்ளைகள் ராய் தாமஸ், ரோஜோ தாமஸ். ராய் தாமஸின் மனைவி ஜோலி. குடும்பத்தின் மூத்த மருமகள். டாம் தாமஸின் சகோதரர் மகன் சாஜூ. சாஜூவின் மனைவி சிலி. அன்னம்மாவின் சகோதரர் மேத்தீவ். அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்தக் குடும்பத்தில் அன்னம்மா சொல்வதுதான் சட்டம். அன்னம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சே இல்லை. இதனால் மூத்த மருமகள் ஜோலியால் எதுவும் தன்னால் செய்ய முடியாத நிலை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இந்தக் குடும்பத்தில் ஒருவர் ஒருவராக உயிரிழந்துள்ளனர். 2002 ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்னம்மா இறந்தார். 2008 ஆகஸ்ட் 26 அன்று அவரது கணவர் டாம் தாமஸ் உயிரிழந்தார். 2011 செப்டம்பர் 30ஆம் தேதி ஜோலியின் கணவர் ராய் தாமஸ் உயிரிழந்தார். 2014 பிப்ரவரி 2 அன்று, அன்னம்மாவின் சகோதரர் மேத்தீவ் இறந்தார். 2014 மே 5 அன்று சாஜூவின் இரண்டு வயது குழந்தை அல்பைன் உயிரிழந்தார். 2016 ஜனவரி 11 சாஜூவின் மனைவி சிலீ உயிரிழந்திருக்கின்றார்.
அன்னம்மாவின் இரண்டாவது மகன் ரோஜோவுக்கு அடுத்தடுத்து நடந்த தொடர் மரணங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 2016ஆம் ஆண்டு இதுதொடர்பாக கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதில் தான் அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது.
அதாவது இந்தக் கூட்டுக் குடும்பத்தில் அன்னம்மா வைத்ததுதான் சட்டம் என்றிருந்த நிலையில் ஜோலி, அதிகாரத்துக்காக முதலில் மாமியார் சாப்பிடும் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். அப்போது ஜோலி மட்டுமே உடனிருந்துள்ளார். அன்னம்மா வாந்தி எடுத்ததும் அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடித்திருக்கிறார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அன்னம்மா இறந்துவிட்டார். அடுத்தது சொத்துக்காக மாமனார் டாம் சாப்பிட்ட கிழங்கில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். அப்போதும் ஜோலி மட்டுமே உடனிருந்திருக்கிறார். டாமும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். வீட்டிலிருந்த முதியவர்கள் இறந்த பிறகு மூத்த மருமகளான இவர் அனைத்து அதிகாரங்களையும் கையிலெடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஜோலியின் சில நடவடிக்கை பிடிக்காததை அவரது கணவர் ராய் கண்டித்துள்ளார். இதனால் மாமியார், மாமனாரைக் கொன்றதை போலவே தனது கணவரையும் விஷம் வைத்துத் தீர்த்துக் கட்டியுள்ளார். ஆனால் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடம்பில் விஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மேத்தீவ்வுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஜோலியின் அடுத்த கொலை திட்டம் மேத்தீவ் மீது திரும்பியுள்ளது. அவரையும் சயனைடு வைத்து தீர்த்துக்கட்டியுள்ளார்.
இதற்கிடையில், டாம் தாமஸின் சகோதரர் மகன் சாஜூ மீது ஜோலிக்கு ஒரு கண் இருந்துள்ளது, எப்போது சாஜூ குறித்து பெருமையாகப் பேசி வந்துள்ளார். இதையடுத்து சாஜூவின் மகள் மற்றும் குழந்தையையும் அதே பாணியில் கொன்றுள்ளார், இவர்கள் அனைவரும் இயற்கையாகவே இறந்தனர் என அனைவரும் நினைத்து வந்துள்ளனர்.
அனைவரும் இறக்கும்போது அவர்களுடன் ஜோலி மட்டுமே இருந்ததால் சந்தேகமடைந்த ரோஜோ காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து அனைவரது உடல்களும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ததில் ஆறு பேரும் சயனைடு சாப்பிட்டு ஒரே மாதிரியாக இறந்தது தெரியவந்திருக்கிறது.

தொடர்ந்து ஜோலியை கைது செய்த போலீசார் , இந்தக் கொலைகளை அவர் மட்டும் தனியாகச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகித்துள்ளனர். ஜோலியின் போன் கால்கள், அக்கம்பக்கத்தினர் வாக்குமூலம் போன்றவற்றைச் சேகரித்ததிலும்,
அவரிடம் நடத்திய விசாரணையிலும் சயனைடு கொடுத்து உதவி செய்த மேத்தீவ் மற்றும் பிராஜி குமார் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தாங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது சாஜூ மற்றும் ஜோலி வசித்து வந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்திருக்கின்றனர். ஆனால், இந்தக் கொலைகளில் சாஜூ சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஜோசப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு ஜோலி மீது எந்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாகத் தனது மகளுக்குச் சொத்துகள் பிரித்துத் தரப்படவில்லை. அவர் மாமனார் வீட்டில் கஷ்டப்பட்டார் என்பது மட்டுமே தெரிந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் குறித்து ராய் - ஜோலி தம்பதியினரின் மகன், “கற்பனை செய்யவோ, புரிந்துகொள்ளவோ முடியாத விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கின்றன. குற்றம் எப்போதும் குற்றம்தான். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜோலி கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு அரசியல்வாதியைச் சந்தித்ததாக அவரது உறவினரான ரேஞ்சி தெரிவித்துள்ளார்.
சொத்து, அதிகாரம், கள்ளக்காதல் என ஒரு கூட்டுக் குடும்பத்தையே ஒரு பெண் கொடூரமாகக் கொன்றிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக