வியாழன், 31 அக்டோபர், 2019

மகா புயல் - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கும்: வானிலை மையம்!

மகா புயல் - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கும்: வானிலை மையம்!
 மின்னம்பலம் : அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை மற்றொரு புயல் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே சமயத்தில் இரு புயல்கள் உருவாகியிருப்பது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் வட கிழக்கு பருவ மழைத் தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி அருகே அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் மற்றொரு புயல் உருவாகியிருப்பதாகவும் அதற்கு மகா என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயலானது இன்று (அக்டோபர் 31 ) தீவிர புயலாக மாறும். இதனால் காற்றின் வேகம் மணிக்கு 95 கி.மீ. முதல் 115 கி.மீ. ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் உள்ள கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக சில பாதிப்புகளும் ஏற்படலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மின் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளில் பிரச்சனைகளை இந்த புயல் உருவாக்கும். பப்பாளி, வாழை போன்ற மரங்கள் அதிகளவு சேதமடையலாம், குடிசை வீடுகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள மகா புயலால் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வர்தா புயலின் போது தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி என 25 மாவட்டங்களில் கன மழை மற்றும் மிகக் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக