ஞாயிறு, 20 அக்டோபர், 2019

எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கிய "மலைக்கள்ளன்": சிறையில் பிறந்த கதை!

;பாண்டியன் சுந்தரம் : எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய
"மலைக்கள்ளன்": சிறையில் பிறந்த கதை! காங்கிரஸ்காரர் கதைக்கு வசனம் எழுத மாட்டேன் என்ற கலைஞர்! டி.எம்.எஸ். எம்ஜிஆருக்குப் பாடத் தொடங்கிய படம்- தத்துவப் பாடலோடு!
1954-ஆம் ஆண்டு ஜுலை 22-ஆம் தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது.
இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிரதாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான். அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும்." தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா","தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு","கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" இந்த வரிகளைக் கொண்ட கவிதைகளைத் தந்தவர்தான் நாமக்கல் கவிஞர்.

வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ராஜாஜி தலைமையில் ஊர்வலத்தில் பங்கேற்று நடந்து சென்றார் நாமக்கல் கவிஞர். "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று நாமக்கல்லார் எழுதிய பாடலை ஊர்வலத்தில் பங்கேற்றோர் பாடியபடி வேதாரண்யம் நோக்கிச் சென்றனர்.அனைவரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.சேலத்தில் நாமக்கல் கவிஞரோடு ஒரே அறையில் அடைக்கப் பட்டிருந்தார் ஆந்திராவைச் சேர்ந்த புலுசு சாம்பசிவம்.
நாமக்கல் கவிஞர் 'கத்தியின்றி ரத்தமின்றி' பாடல் தந்த வரவேற்பால் சிறையில் கவிதைகளாக எழுதித் தள்ளிக்கொண்டு இருந்தார். புலுசு சாம்பசிவம் கவிஞரை "என்னங்க எப்பப் பார்த்தாலும் கவிதைகளையே எழுதித் தள்றீங்க? ஒரு கதை எழுதப்படாதா.." என்று கேட்க, அதை ஏற்று சிறையில் கதை எழுத ஆரம்பித்தார் கவிஞர்.1932- இல் அப்படித் துவங்கி எழுதி முடிக்கப்பட்ட கதைதான் 'மலைக்கள்ளன்'
"மலைக்கள்ளன்” – தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
ஸ்ரீராமுலு நாயுடு ஆறு மொழிகளில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி இருந்தார். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப்படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியைப் பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.ஆனால் எடுக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் "மலைக்கள்ளன்” ஒன்றுதான்‌.
அது மட்டும் அல்ல. முதன்முதலாக ஜனாதிபதியின் சிறந்த படம் என்ற பரிசினை வென்ற முதல் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி”க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே “மலைக்கள்ளன்” படத்திற்கும் இசை அமைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்கக் கவிஞர் எழுதினார்.
அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.
அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் “கொஞ்சும் கிளியான பெண்ணை” என்ற பாடலை சிவாஜிக்காகப் பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்குப் பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்பிராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்க, அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்குப் பாடவைத்தார் சுப்பையா நாயுடு.
பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..
டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் – அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – நம் நாட்டிலே – சொந்த நாட்டிலே"
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக – எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது...?
“சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி – இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.”
"மலைக்கள்ளன்" படத்தை ஸ்ரீராமுலு நாயுடு தயாரிக்க முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கலைஞர் கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். "நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், அதை இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.
இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரைச் சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியம்(வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.
உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார். (1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)
கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார். கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய இனிய நடையில் எழுதியிருந்தார்.
எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர்; ஆனால் டூயட் பாடல் இல்லை. எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது. மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.எம்ஜிஆர் அண்ணன் சக்ரபாணி காவல்துறை அதிகாரியாக நடித்தார்.
பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.
மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார். எல்லா மொழிக் கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். "மலைக்கள்ளன்" 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றது
இந்தியில் ஆசாத் என்ற பெயரில் வெளியான படம் வசூலை அள்ளிக் குவித்தது.1955-இல் வெளியான பம்பாய் சினிமா பத்திரிகை இப்படி எழுதியது: "கோவையிலிருந்து எஸ்.எம்.எஸ்.நாயுடு வந்து, திலீப்குமாரை அழைத்துப் போனார். மூன்று மாதங்கள் கழித்து 17 டப்பாக்களில் படச்சுருளை படமாக்கி எடுத்து வந்து திரையிட்டார்.பின் இங்கிருந்து வண்டி வண்டியாக பணத்தை அள்ளிக் கொண்டு போய்ச் சேர்ந்து விட்டார்."
உண்மைதான்.மலைக்கள்ளன் பட்சிராஜா பட நிறுவனத்தை பண மழையால் நிரப்பித்தள்ளி விட்டது. ஆனால் கதை எழுதிய நாமக்கல்லார் வறுமையின் கோரப் பிடியிலேயே சிக்கித் தவித்தார்.அப்போது டி.கே.சண்முகம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர்.அவரை அழைத்த ராஜாஜி," உனக்கு வரும் சம்பளத்தை அப்படியே கவிஞர் குடும்பத்துக்குத் தா" என்று கூறுமளவு சிரம வாழ்க்கை வாழ்ந்தார் கவிஞர்." மலைக்கள்ளன்" பெரிய அளவில் பணம் தரா விட்டாலும் கவிஞர் குடும்பத்துக்கு ஒரு நன்மை தந்தது.கவிஞரின் மகன் ரா.பாலு உதவி இயக்குனராக அதுமுதல் செயல்பட ஆரம்பித்தார்..அதன் மூலம் குடும்பம் நடத்த வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக