செவ்வாய், 1 அக்டோபர், 2019

மோடிக்கு சு.சாமி : பொருளாதார வல்லுனர்களை பயமுறுத்துவதை மோடி நிறுத்த வேண்டும் !

Subramanian-Swamy-Legal-Action-Rafale-Deal-Jetதினமணி : விரும்பத்தகாத உண்மையை கேட்பதற்கான "மனநிலையை" வளர்த்துக் கொள்ளவும், பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து விரட்ட விரும்பினால் தனது அரசாங்கத்தின் பொருளாதார வல்லுநர்களை "பயமுறுத்துவதை" நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திங்கள்கிழமை அறிவுறுத்தினார். இதுதொடர்பாக புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், மோடி அரசாங்கத்தில் மிகச் சிலரால் மட்டுமே தனித்து செயல்பட முடியும். அவர்களிடம் எது தேவை, தேவையில்லை என்பதை முகத்திற்கு நேராகச் சொல்லபவர்களை பிரதமர் மோடி ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அவர் இன்னும் அந்த மனநிலையை வளர்த்துக்கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.
நமது பொருளாதாரம் குறுகிய காலத்துக்கும், நடுத்தர காலத்துக்கும், நீண்ட காலத்துக்கும் செயல்படும் விதமான திட்டம் தற்போது தேவைப்படுகிறது. ஆனால், அதுபோன்ற ஒரு கொள்கை இன்று நம்மிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல், பிரதமரிடம் உண்மையை உரக்கச் செல்ல அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

அதே நேரத்தில் பிரதமர் மோடி, ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் உஜ்வாலா போன்ற சிறிய திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஆனால் பொருளாதார முன்னேற்றத்துக்கு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பலதரப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது.
1991-ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள மன்மோகன் சிங் தலைமையிலான நிதி அமைச்சகத்தின் மூலமாகத் தான் பி.வி.நரசிம்ம ராவின் "புத்திசாலித்தனமாக" செயல்பட்டார். எனவே பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பிரதமரைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நிதி அமைச்சராக இருந்ததைப் போலவே பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்கால் எதுவும் செய்ய முடியவில்லை.
1991-ல் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் 95 சதவீத வெற்றி நரசிம்ம ராவ்-ஐ சேரும். எனவே மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்-க்கு அடுத்த குடியரசு தினத்தில் பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும்.
ஹார்வர்ட் பொருளாதாரப் பல்கலை.யில் தோல்வியுற்ற ஒரு மாணவன் என்பதை தவிர முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
வருமான வரியை ஒழிப்பதற்கான எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். இதனால் நமது வீட்டிலும், நாட்டிலும் சேமிப்பு உயர்ந்து, சிறந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் வரி மதிப்பீடுகளுடன் தொடர்புடைய ஊழலையும் குறைக்கும்.
நேர்மையான வரி செலுத்துவோர் மத்தியில் கூட அவர்கள் வருமானவரி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழல் பெருகும் அபாயம் ஏற்படும்.
பணக்காரர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் வரி செலுத்துவதில் இருந்து விலகி இருக்கும்போது, ​​நடுத்தர மக்கள் தான் அதிக நுகர்வு திறன் காரணமாக பொருளாதாரத்தின் முக்கியமானவர்களாக இருந்தபோதிலும் அதிகபட்ச வரிச்சுமையை தாங்குகின்றனர் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக