புதன், 30 அக்டோபர், 2019

குழந்தை சுஜீத் உடல்... பொய் சொல்லும் அரசு!

குழந்தை சுஜீத் உடல்... பொய் சொல்லும் அரசு!
மின்னம்பலம: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆறு இஞ்ச் என்ற சின்னஞ்சிறு அகலம் கொண்ட ஆழ் துளைக் கிணற்றில் இரண்டு வயது பாலகன் சுஜித் விழுந்துவிட்டான் என்ற செய்தி அக்டோபர் 25 ஆம் தேதி இரவு செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதுமே தமிழகம் முழுக்க தீபாவளி கொண்டாட்டத்தை மீறிய ஒரு கவலை படரத் தொடங்கியது.
தீபாவளிக் கொண்டாட்டத்தை தள்ளி வைத்த தமிழகம்
தீபாவளி விசாரிப்புகளை விட பொது இடங்களில் சுஜித் பற்றிய விசாரிப்புகளே அதிகமாகியின. 25 ஆம் தேதி இரவு ஆறு முதல் 10 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித்தை பார்க்க முடிந்திருக்கிறது. கிராமத்தினர் எல்லாம் கூடி நின்றனர்,. அம்மா குழியின் மேல் நின்று சுஜீத்து சுஜீத்து... என்று நீண்ட நெடில் குரலெடுத்துக் கதறினார். கீழேயிருந்து அம்மா அம்மா என்ற சுஜீத்தின் குரலும் சன்னமாகக் கேட்க சுற்றியிருந்த ஊர் மக்கள் மனதெல்லாம் கனத்துப் போனது.
விஜயபாஸ்கரின் யோசனை
அந்த ஆழ்துளைக் கிணறு ஆறு இஞ்ச் என்ற மிகச் சிறிய அளவு என்பதால் வேறு நபர்களை விட்டும் இறங்கிக் காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்துவிட அவர்களாலும் அந்த மிகக் குறுகிய அகலம் கொண்ட குழிக்குள் மீட்புப் பணிகளை செய்ய முடியவில்லை.

மதுரையில் இருந்து வந்த போர்வெல் நிபுணர்கள் குழுவினர் உடனடியாக ஏர்லாக் மூலம் குழந்தையை மேலும் குழிக்குள் இறங்காமல் தடுத்து நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி மென்மையான பஞ்சு போன்ற எல் வடிவம் கொண்ட ஏர் லாக் கருவி உள்ளே இறக்கப்பட்ட அது குழந்தையின் ஒரு கையை மட்டுமே கவ்வியிருக்கிறது. இன்னொரு கையையும் ஏர்லாக் மூலம் பிடிக்க முயற்சி செய்ய அது முடியாமல் போனது. அன்று இரவே கலெக்டர், பின் அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், எம்பி. ஜோதிமணி என பலரும் வர, மீட்புப் பணியை எவ்வாறு நடத்துவது என்ற ஆலோசனை நடைபெற்றது. குழிக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு குழந்தையின் சுவாசம் தடைபடாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த மதுரை டீமிடம், ‘ஏர் லாக் மூலம் குழந்தையை மேலே தூக்கிடலாம். கையில எதுவும் காயமானாலும் சிகிச்சை கொடுத்துக்கலாம்’ என்று சொல்ல, அதற்கு அவர்கள், ‘இல்லை...இப்போது ஒரு கையை மட்டும்தான் லாக் பண்ணியிருக்கோம். தூக்கினால் சரியாக வராது. குழி குறுகலாக இருப்பதால் சாத்தியமில்லை. மேலும் கீழே இறங்காமல் வேண்டுமானால் தடுக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்கள்.
குழந்தை தலையில் மண்
அதன் பிறகே பக்கத்திலேயே இன்னொரு குழியைத் தோண்டி அதில் இருந்து இந்த குழிக்குள் வந்து குழந்தையை மீட்கலாம் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. ராட்சச பொக்லைன் கொண்டு பக்கத்தில் குழி தோண்டியிருக்கிறார்கள். ஏற்கனவே மழை பெய்த பூமி. ஈரப் பொசபொசப்பு அதிகமாக இருந்தால் பக்கத்தில் குழிதோண்டிய அதிர்வு, ஆழ்துளைக் கிணற்றில் பரவ 15 அடி ஆழத்தில் இருந்த சுர்ஜித்தின் தலையில் மண் சரிந்து விழுந்திருக்கிறது. அப்போதே எல்லாரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
பக்கத்தில் தோண்டப்பட்ட குழியும் பாறை தட்டுப்பட்டால் சில அடிகள் தூரத்திலேயே தோண்டப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பின் காரைக்காலில் இருந்து ரிக் இயந்திரங்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு, அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு, ஐஐடி குழு, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற சிலர் என்று அக்டோபர் 26 பகல் இரவு, அக்டோபர் 27 பகல் இரவு, அக்டோபர் 28 பகல் இரவு என்று நான்கு பகல் இரவுகள் போய்விட்டன. ஆனால் குழந்தையை மீட்க முடியவில்லை.
நான்காம் நாள் இரவு
28 ஆம் தேதி இரவு குழிக்குள் இருந்து துர்நாற்றம் அடிப்பதாக சொல்லப்பட்டு அதன் பின் அன்று நள்ளிரவு கடந்து அதிகால வருவாய் பேரிடர் ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.தான் சுஜித் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார் என்ற தகவலை அறிவிக்கிறார்.
இந்த மீட்புப் பணிகளில் நடைபெற்ற சிக்கல் என்ன, அரசு ஏன் இதை இவ்வளவு நீட்டித்தது, குழந்தை மரணம் அடைந்த தகவலை அறிவிப்பதை அரசு அவமானமாகக் கருதியதா என்ற எண்ணற்ற கேள்விகள் இந்த நான்குநாட்கள் மீட்புப் பணிகளில் இருந்து எழுந்துள்ளன. .
சம்பவம் நடந்த மறுநாளே மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் நோட்டமிட்டனர். என்ன நடக்கிறது என்பதை அவர்களும் மத்திய அரசுக்குத் தெரிவிக்கத் தொடங்கினர்.’
ஏர்லாக்கும் இல்லையென்றால்...
25 ஆம் தேதி இரவு 8.30 மணி வரை குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்க முடிந்தது. அதன் பிறகு குழந்தையின் குரலைக் கேட்க முடியவிலை. அதுவும் பக்கத்தில் குழி தோண்டிய அதிர்வில் குழந்தையின் தலையில் மண் சரிந்து 88 அடி ஆழத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. மறுநாளே குழந்தை சுஜித் மூச்சுத் திணறல், உணவின்மை,. தண்ணீர் இன்மை போன்றவற்றால் இறந்து போயிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வளவு ஆழத்தில் இருந்து துர்நாற்றம் வரவேண்டுமென்றால் எப்படியும் குழந்தை இறந்து 48 மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.
இதன் பிறகுதான் 28 ஆம் தேதி இரவே சுஜீத்தின் குடும்பத்தினரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசுத் தரப்பினர், “அம்மா... மனதை தேத்திக்கங்க. நமக்குக் கடவுள் கொடுத்தது அவ்வளவுதான். குழந்தையை காப்பாத்த முடியலை. குழந்தையோட உடம்பு இப்ப ரொம்ப ஆழத்துக்கு போயிடுச்சு. இப்ப நீங்க சரினு சொன்னா அந்த ஏர்லாக் மூலமாக வெளியே எடுத்தோம்னா என்னாகும்னு தெரியலை. குழந்தையோட சிரிச்சு விளையாடின முகமே ஞாபகத்துக்கு வராம போயிடும். அந்த சங்கடம் உங்களுக்கு வேணாம். நீங்க சரின்னு சொன்னீங்கன்னா ஏர்லாக் மூலமா இப்ப எடுத்துடுவோம். வேற வழியில்லை. குழிக்குள்ளேர்ந்து நாற்றம் வர ஆரம்பிச்சிடுச்சும்மா” என்று சொல்லி குழந்தையின் தாய் கலாமேரி, தந்தை பிரிட்டோ ஆரோக்கிய தாஸ் ஆகியோரிடம் வீட்டுக்குள் அமர்ந்து பேசியுள்ளனர்.
மனப்போராட்டம்
அமைச்சர்களுக்கும் கடுமையான மனப் போராட்டம்,. குடும்பத்தினருக்கும் கடுமையான மனப் போராட்டம். இரவு 12 மணிக்குப் பேசி என்னமாவது பண்ணுங்க. என் சாமி எனக்கு இல்லேனு ஆயிருச்சு என்று கதறித் தீர்த்திருக்கிறார் தாய் கலாமேரி.
அவர்களுக்கு அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட ஒரே ஒரு வேண்டுகோள் இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம். உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் அரசு செய்யும் என்பதுதான்.
இதன் பிறகுதான் 2 மணிக்கு ஊடகக் கேமரா மேன்களையும், நிருபர்களையும் அழைத்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ‘ இரவு 9.30 மணி 10 மணி வாக்கில் குழிக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அங்கேயே இருப்பவர்கள் தெரிவித்தனர். பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர் மூலம் குழந்தையின் உடல் சிதைந்து போனது உறுதி செய்யப்பட்டது. உடலை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.
ஊடகத்தினருக்கு வேண்டுகோள்
பின்பு ஊடகக்காரர்களிடம் இத்துடன் லைவ்வை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சில நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது நிலைமையின் உருக்கத்தை உணர்ந்த அவர்களால் அதற்கு மேல் வாதாட முடியவில்லை.
ஏற்கனவே மழை பொழிந்ததால் குழிக்கு மேல் போடப்பட்ட ஒரு ஷெட், குழியை நோக்கி நெருக்கமாக போர்த்தப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு மேல் ஏர்லாக் மூலம் மேலே எடுத்தனர். அப்போதுதான் குழந்தையின் கை பகுதியை மட்டுமே மேலே வந்து அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதை உடனே குழியின் வாசலிலேயே கறுப்புப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டனர். அதன் பின் மணப்பாறை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. காலை சூரியன் உதிப்பதற்குள் அந்த இரு குழிகளும் மூடப்பட்டுவிட்டன. நான்கு நாட்களுக்கு முன் துள்ளித் திரிந்த சுஜித்தின் கை பகுதி மட்டுமே சவப்பெட்டிக்குள் வைக்கபட்டு நடுக்காட்டுப் பட்டிக்குள் கொண்டுவரப்பட்டான்.
மத்திய பேரிடர் ஆணையமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நடந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
டீப் அனலைஸ் செய்யாதீர்கள்-ராதாகிருஷ்ணன்
போர், விபத்து, பேரிடர் போன்றவற்றில் இறந்தவர்களுக்கான மரியாதையை தரவேண்டும் என்று விதிகளில் இருப்பதால்தான் சுஜித்தின் உடலை காட்சிப் படுத்த முடியவில்லை என்று வருவாய் பேரிடர் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இதை மிகவும் அனலைஸ் செய்யாதீர்கள் என்றும் அவர் பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற சமயங்களில் மண்ணியல் நிபுணர்கள், மருத்துவர்கள், பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்திருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படவில்லை. மேலும் மாநில அரசு சுஜீத்தை காப்பாற்றவில்லை என்றால் அது ஏதோ இமேஜ் பிரச்சினை போல கருதியது. சுஜீத்தின் இறப்பு பற்றி முன்னரே தெரிந்திருக்குமென்றால் அதை அவர்களின் குடும்பத்தினரிடம் முறைப்படி தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது என்கிறார்கள் நடுக்காட்டுப்பட்டியில் நான்கு நாட்களாக முகாமிட்ட பத்திரிகையாளர்கள்.பிரேதப் பரிசோதனை*
பொதுவாகவே பிரேதப் பரிசோதனையின் போது மூளை, கல்லீரல், கொழுப்புத் திசு, நுரையீரல், கை அல்லது கால் நகங்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்படிப் பார்த்தால் சுஜீத்தின் பிரேதப் பரிசோதனக்கு கை தசைகளும், நகங்களும் மட்டுமே கிடைத்திருக்கக் கூடும். அதை வைத்துதான் பிரேதப் பரிசோதனை நடந்திருக்க வேண்டும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை கவனித்து வரும் மருத்துவர்கள்.
கோயில் கோரிக்கையின் பின்னால்...
சுஜீத்தின் கை மட்டும்தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. உடல் முழுதும் குழுக்குள் போய்விட்டது என்று அவனது அம்மாவிடம் மீட்புக் குழுவினர் சொல்லிச் சொல்லி சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் அந்த குழிக்கு மேல் சுஜீத்துக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் அந்தப் பிஞ்சின் தாய் கலாமேரி.
இந்த மீட்புப் போராட்டத்தில் தான் தோற்றதாக அரசு கருதியிருக்கக் கூடும். உடலைக் கூட மீட்க முடியவில்லையே என்ற அரசியல் ஆயுதங்களுக்கு இரையாக வேண்டாம் என்று கருதியிருக்கக் கூடும். அறிவியலால் முடியாதது அரசு இயந்திரத்தால் முடியாதுதான்.
அந்த ஆழ்துளைக் கிணற்றின் மேல் சுஜீத்துக்கு கட்டப்படும் கோயிலில் சுஜீத்தோடு சேர்ந்து உண்மைகளும் உறங்கிக் கொண்டிருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக