திங்கள், 7 அக்டோபர், 2019

இன்பதுரைக்கு அப்பாவு பதில்.. கெஜட் அதிகாரிகளே இல்லை!

கெஜட் அதிகாரிகளே இல்லை: இன்பதுரைக்கு அப்பாவு பதில்!மின்னம்பலம் : ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுகவின் இன்பதுரைக்கு, திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு பதிலளித்துள்ளார்.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக வெளியிடப்படவில்லை. ஆனால், மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றிபெற்றுவிட்டதாக ஸ்டாலின் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் மறைமுகமாகத் தெரிவித்தார். மேலும் இன்பதுரை, துன்பதுரையாக மாறிவிட்டதாகவும் விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று (அக்டோபர் 6) செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, “அப்பாவுக்கு விழுந்த 203 தபால் வாக்குகளில், பெருவாரியானவை ஒரே நடுநிலைப் பள்ளி ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்டவை.
சென்னை, கோவையில் வேலை பார்ப்பவர்களும், தேர்தல் பணிகளுக்காக வெளியூர்களுக்குச் சென்றிருப்பவர்களும் எப்படி ஒரே ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்றிருக்க முடியும். மேலும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கெஜட் பதிவு பெற்ற அதிகாரி அல்ல. அதனால் என்னுடைய கோரிக்கையை ஏற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த வாக்குகள் செல்லாதவை என்று கூறி தேர்தல் அதிகாரி நிராகரித்தார். நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு இதற்குப் பதிலளித்துள்ளார். நெல்லையில் நேற்று (செப்டம்பர் 6) பேட்டியளித்த அப்பாவு, “1996 அரசாணை 158இன்படி தமிழகத்தில் யாரும் கெஜட் பதிவுபெற்ற அதிகாரி கிடையாது. அதை அரசு நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக ஏ, பி, சி, டி என நான்கு பிரிவாகப் பணியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் 1996க்குப் பிறகு கெஜட் அதிகாரிகளே கிடையாது. ஆகவே, 4,000 ரூபாய்க்கு மேல் தர ஊதியம் பெறுபவர்கள் சான்றொப்பம் இட்டால் செல்லும் என்று நாங்கள் வாதம் வைத்தோம். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், தபால் வாக்குகள் செல்லத்தக்கவை என்று அறிவித்து மீண்டும் எண்ண உத்தரவிட்டது” என்று குறிப்பிட்டவர்,
“203 பேருக்கு ஒருவரே சான்றொப்பம் இட்டதாக தவறான தகவலை இன்பதுரை கூறுகிறார். அதில் பல ஆசிரியர்களும் சான்றொப்பம் இட்டிருக்கிறார்கள். நேற்று முன்தினம் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்பதுரையும், அவரது இரண்டு முகவர்களும் அங்கு இருந்தனர். அதோடு அவரது வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர்களும் இருந்தனர். தபால் வாக்குகளில் ஒருவர் மட்டுமல்லர், பலர் சான்றொப்பம் இட்டிருந்தனர்” என்று விளக்கம் அளித்தார். ஒன்றுக்கும் மேற்பட்டோர் சான்றொப்பம் இட்டிருந்தால், தனது வெற்றி தவறானதுதான் என்று கூறி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் இன்பதுரைக்கு அப்பாவு கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக