வெள்ளி, 11 அக்டோபர், 2019

குர்திஸ்தான் மீது துருக்கி ஏன் தாக்குதல் நடத்துகிறது? குர்திஸ்தான் .. போராட்டம்


யார் இந்த குர்திஷ்கள்? துருக்கி ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது?மாலைமலர் : போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது. துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்திஷ்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஷ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர்.
இவர்கள் ஒரு இன சிறுபான்மை குழு, சுமார் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை  இருப்பார்கள்  பெரும்பாலானவர்கள் சன்னி முஸ்லிம்கள். அவர்கள் ஒரு தனித்துவமான இனம், கலாச்சாரம் மற்றும் மொழியால் ஒன்றுபட்டுள்ளனர். குர்திஷ்தான் என்று அழைக்கப்படும் தனி நாடு உருவாக்குவதற்கு அவர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.


அரசுசாரா பிராந்தியமான மக்களுக்கு உத்தியோகபூர்வ தாயகமோ, நாடோ இல்லை. இவர்கள் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் மற்றும் அர்மீனியா ஆகிய ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர்.

ஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்த அமைப்பு பெரும் பங்கு வகித்தது. அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டியது ஒய்.பி.ஜி., அமைப்பு. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

சிரியாவில் நிலைமை இப்படி இருக்க துருக்கியில், குர்திஷ்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. மேலும் தனி தேசம் கேட்கும் குர்திஷ்கள் தங்கள் நாட்டிலும், தங்கள் நாட்டின் எல்லை அருகேயும் இருப்பதை துருக்கி விரும்பவில்லை.

துருக்கியில்  குர்திஷ்கள் தங்கள் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றனர், பெரும்பாலும் துருக்கியில் இவர்கள் "மவுண்டன் டர்க்ஸ்" என்று அழைக்கப்படுகிறார்கள், அங்கு அவர்கள் பாரம்பரிய குர்திஷ் ஆடைகளை அணியவோ அல்லது அவர்களின் மொழியைப் பேசவோ தடை செய்யப்பட்டுள்ளனர். 

துருக்கியில் குர்திஷ்கள் மிகப்பெரிய இன சிறுபான்மையினராக இருந்தாலும், சுமார் 20 சதவீத மக்கள் உள்ளனர், அவர்கள் துருக்கியில் ஒரு சிறுபான்மைக் குழுவாக அங்கீகரிக்கப்படவில்லை.

சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதல் மற்றும் துருக்கி அதிபர்

குர்திஷ்களின் தனி தேசத்தை விரும்பாத துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.

எல்லையோரம் உள்ள குர்திஷ் இனப் போராளிகளை தீர்த்தக்கட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

தங்கள் நாட்டு படைகளை  சிரியாவில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்த டிரம்ப், ஒருவேளை குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இருப்பினும் டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத துருக்கி அரசு, குர்திஷ் இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவில் சிரியாவின் ரஸ் அல் அயின் நகரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. டல் அப்யத் உள்பட 2  நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

துருக்கியின் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை ஒய்.பி.ஜி. போராளிகள் குழுக்களின் 181 முகாம்கள்  மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.

குர்திஷ் சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எஃப்) வியாழக்கிழமை, தல் ஹலாஃப் மையத்திலும், வடகிழக்கு சிரியாவின் ஸ்லுக் நகரத்திலும் "துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம்" மேற்கொண்ட தரை ஊடுருவல் முயற்சியைத் தடுத்து விட்டதாக கூறி உள்ளது. 

ஆபரேஷன் ' அமைதி வசந்தம் ' இரவில் விமானம் மற்றும் நிலம் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அடையப்பட்டன. திட்டமிட்டபடி செயல்பாடு வெற்றிகரமாக அமைந்தது என துருக்கி அரசு கூறியுள்ளது.

துருக்கியின் இராணுவ நடவடிக்கையின் முதல் நாளில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிய மக்கள் மற்றும் குர்திஷ் போராளி

மேலும், சிரியாவின் எல்லையை ஒட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் துருக்கி ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு எதிராக துருக்கி அரசு தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் சிறையில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்பிச்சென்று மீண்டும் தங்கள் பயங்கரவாத செயல்களை உலகில் அரங்கேற்றலாம். இந்தப் போரால், சிரியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 

துருக்கி நடவடிக்கையை இந்தியா, பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஈராக், மற்றும் பிரான்ஸ் கண்டித்துள்ளன.

நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை தனிப்பட்ட முறையில் கூடியது. ஆபரேஷன் ' அமைதி வசந்தம் '  என்ற பெயரில் குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  கவலை தெரிவித்து உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக