சனி, 5 அக்டோபர், 2019

கைதாவாரா ராஜேஷ் லக்கானி?.. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை ..

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: கைதாவாரா ராஜேஷ் லக்கானி?மின்னம்பலம்: இந்திய அரசியல் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நேற்று அக்டோபர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி முன்னிலையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.
மக்கள் மன்றத்தின் முடிவுகள் அதிகார மன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கில், உண்மை இருப்பதாக கருதிய நீதிமன்றம் தன்னுடைய வளாகத்திலேயே மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவிட்டதை இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அனைத்து அரசியல் அமைப்பு ஆர்வலர்களும் உன்னிப்பாக உற்று நோக்கினர்.
நேற்று காலை 12 மணிக்கு தொடங்கிய தபால் ஓட்டு வாக்கு எண்ணிக்கையில் அப்பாவு -இன்பதுரை ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நடந்த விவகாரங்களை வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்றதையும் நேற்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் ராதாபுரம்: மறுவாக்கு எண்ணிக்கை முடிவு-சிரிப்பவர் யார்? என்ற தலைப்பில் விரிவாக வெளியிட்டிருக்கிறோம்.

இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிவிக்க உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23ஆம் தேதி வரை தடை விதித்திருக்கிறது.
21ஆம் தேதி விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதுவரை கிட்டத்தட்ட இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவராது.
தபால் ஓட்டுகள் நேற்று மாலை 5 மணி வரை எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ராதாபுரம் தொகுதியில் கடைசி ரவுண்டு வாக்குப் பெட்டிகளும் நேற்று மாலை 6.40 வரை உயர்நீதிமன்ற வளாகத்தில் எண்ணி முடிக்கப்பட்டன.உச்சநீதிமன்றம் முடிவுகளை வெளியிட தடை விதித்து இருப்பதால் வாக்கு எண்ணிக்கை முடிவினை ஒரு சீலிடப்பட்ட கவரில் வைத்து தேர்தல் கண்காணிப்பாளர் சரவணன் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
அப்போது தற்போதைய எம்.எல்.ஏ. இன்பதுரையிடம் திமுக வழக்கறிஞர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்த நிலையில், ‘உங்களுக்கு இது வழக்கு.. எனக்கு வாழ்க்கைண்ணே...’என்று இயல்பாக தன் மன ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இன்பதுரை.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் அப்பாவு வெற்றி பெற்றால் அரசியல் ரீதியாக மட்டுமல்ல அதிகாரிகள் ரீதியாகவும் பலத்த அதிர்வுகள் இருக்கும் என்று வழக்கறிஞர்கள் மத்தியில் பேச்சு இருக்கிறது.
ஒருவேளை இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படும் பட்சத்தில் ராதாபுரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் அப்போதைய மாநில தலைமை தேர்தல் ஆணையரான ராஜேஷ் லக்கானியும் சிறைக்கு செல்லும் சூழல் உருவாகும் என்கிறார்கள் வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர்.
நேர்மையான-வெளிப்படையான-தூய்மையான தேர்தலை நடத்த வேண்டிய கடமை தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் இருந்து வெற்றி பட்டியலை வெளியிடுவது வரை தேர்தல் ஆணையத்துக்கு தான் முழுக்க முழுக்க இருக்கிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஒரு வேட்பாளர் கூறும் புகார்களை மறுதலித்து இன்னொரு வேட்பாளருக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள் நடந்து கொள்ளும் பட்சத்தில் தேர்தல் வழக்கு தொடுக்கப்படுகிறது.
தேர்தல் வழக்குகளில் பெரும்பாலும் தீர்ப்புகள் உரிய காலகட்டத்திற்குள் அதாவது அந்த தேர்தலால் அடைய பெற்ற பதவி காலம் முடிவதற்குள் வந்துவிடுவதில்லை. ஆனால் இந்த வழக்கில் தேர்தல் தீர்ப்பளிக்கப்பட்டு அதன்பேரில் மறு வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்துவிட்டது.
2016 சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு எதிராக இந்த மறு வாக்கு எண்ணிக்கை முடிவு இருக்குமானால், இதற்கு அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் தமிழகத்தின் தலைமை தேர்தல் அலுவலரும் தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த குற்றத்துக்கு அவர்கள்தான் காரணமாக இருப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் அவர்களுக்கு உரிய தண்டனையை நிச்சயம் வாங்கி கொடுப்போம் என்கிறார்கள் பொதுநல ஆர்வலர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள்.
இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் இந்தத் தீர்ப்பும் வாக்கு எண்ணிக்கையும் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக