திங்கள், 7 அக்டோபர், 2019

வள்ளலார் சத்திய ஞான சபையில் பார்ப்பனர்கள் பூணூலை நீக்கி ஜாதி அடையாளத்தை விட்டே வழிபட அனுமதி உள்ளது


வள்ளலார் காட்டிய வழிகாட்டுதலின்படி ஜோதி வழிபாடே நிகழுதல் வேண்டும். பிராமணர் ஒருவர் வழிபட விரும்பினாலும்கூட அவர் தனது பூணூலை நீக்கி, தன் சாதியடையாளத்தைக் கைவிட்டே வழிபடவேண்டும். ஆனால் மனுதாரர் சபையின் கிழக்குப் பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி சமயச் சடங்குகளையும் மேற்கொண்டுள்ளார். திருநீறு விநியோகித்துள்ளனர்.
chandrukeetru.com : வடலூர் சத்தியஞான சபை வழக்கு 2007-2010 (நீதியரசர் சந்துருவின் தீர்ப்பு) ;படித்துப் பாருங்களேன்...
நீதிமன்ற வழக்குகள் என்பன அவை உரிமையியல் வழக்காக இருந்தாலும், குற்றவியல் வழக்காக இருந்தாலும் பெரும்பாலும் தனிமனிதரைச் சார்ந்தவை யாகவே இருக்கும். இதனால் இவ்வழக்குகளின் மீது வழங்கப்படும் தீர்ப்புகளை வெறும் செய்தியாக மட்டுமே பெரும்பாலோர் படிப்பர்.
தம் சட்ட அறிவுக்குத் துணைபுரியும் என்றும் வேறு வழக்கில் மேற்கோள்காட்ட உதவும் என்றும் கருதினால் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றை வரி பிறழாது படிப்பர்.
ஆனால் இவ்வெல்லையைத் தாண்டி சமூக வரலாற்றாவணமாக நீதிமன்றத் தீர்ப்புகள் சில அமைந்துவிடுவதுண்டு. வரலாற்றாய்வாளர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் படித்து விவாதிக்கும் தகுதியை இவை பெற்றிருக்கும். இத்தீர்ப்பின் வாசிப்புத்தளம் இதனால் விரிவடைந்துவிடும்.
இத்தகையத் தீர்ப்புகளில் தீர்ப்பு வழங்கியவரின் சட்ட அறிவு மட்டுமன்றி, அவரது உலகக் கண் ணோட்டமும் சார்புநிலையும்கூட வெளிப்படும். அத்துடன் சில வரலாற்றுண்மைகளையும் சமூகச் சிக்கல்களையும் இவை வெளிப்படுத்தி நிற்கும். இத்தன்மை வாய்ந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்றை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.
வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (1823-1874) வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையை மையமாகக் கொண்டது இத்தீர்ப்பு. இத்தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் சந்துரு.
வழக்கின் பின்புலம்
வழிபாட்டிற்காக உருவம் எதுவும் நிறுவப்படாத சத்தியஞான சபையில் சிவலிங்கம் ஒன்றை சபாபதி சிவாச்சாரியார் என்பவர் 2006இல் நிறுவினார். ‘பிரதோசம்’ அன்று அதற்கு வழிபாடு நிகழ்த்திப் பிரசாதங்களும் திருநீறும் வழங்கினார். அவரது இச்செயல் இச்சபையை நிறுவிய வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று, அவரைப் பின்பற்றுவோர் சிலர் இந்து அறநிலையத் துறையிடம் முறையீடு செய்தனர். இம்முறையீடே இவ்வழக்கின் தொடக்கமாக அமைந்தது.
விசாரணை
13.07.2006இல் இதுதொடர்பான விசாரணையை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டது. இவ் விசாரணையை இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையர் நடத்தினார். இவ்விசாரணையில் மேற்கூறிய சிவாச்சாரியார் கலந்து கொள்ளவில்லை.
இராமனாதபுரம் மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் 22.08.2006இல் நடந்த விசாரணையில் கலந்துகொண்டு அறிக்கை அளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:
18.07.1872இல் வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் படி பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட, எழுபத்தி யிரண்டு வயதுக்கு மேற்பட்ட எவரும் சத்தியஞான சபையைத் தூய்மைப்படுத்தி விளக்கு ஏற்றலாம்.
18.09.2006 அன்று உதவி ஆணையரும் சத்திய ஞான சபையின் நிர்வாக அதிகாரியும் மனு அளித்தனர். சமயம் சார்ந்த வழிபாடு நடத்தி வள்ளலாரின் அடை யாளத்தைச் சிதைக்கக் கூடாது என்று இருவரும் தம் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதே நாளில் மேற்படி சிவாச்சாரியார் தமது வழக்கறிஞர் வாயிலாக மனுவொன்றை அளித்தார். இம்மனுவில் 25.01.1872ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தைப்பூசத் திருவிழா நடைபெற்றதாகவும், தம்முடைய தாத்தாவிடம் கண்ணாடி ஒன்றையும், விளக்கு ஒன்றையும் வள்ளலார் வழங்கியதாகவும், அன்றிலிருந்து தற்போதைய பூசைமுறை தொடங்கிய தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தம் மனுவுடன் ஆறு ஆவணங்களையும் இணைத்திருந்தார்.
முதல் ஆவணத்தில் வள்ளலாரின் கையப்பம் இருந்தது. 11.02.1941இல் நடந்த திருவிழா அழைப்பிதழ் இரண்டாவது ஆவணமாகவும், 01.02.1942இல் நடந்த திருவிழாவின் அழைப்பிதழ் மூன்றாவது ஆவணமாகவும் இடம்பெற்றிருந்தன. நான்கு மற்றும் அய்ந்தாவது ஆவணங்கள் தைப்பூசத் திருவிழா தொடர்பான ஆவணங்களாகும். அறங்காவலர்கள் பட்டியலாக ஆறாவது ஆவணம் அமைந்திருந்தது.
நிகழ்வின்போது நிர்வாக அதிகாரியாக இருந்த சங்கர நாராணயன் சத்தியஞான சபை அறக் கட்டளையின் தலைவர் வி.எம்.சண்முகம் மற்றும் இதர அறங்காவலர்களான அருட்பா அண்ணாமலை, எம்.ஏ.ராஜன், கணக்காளர் பி.ஞானப்பிரகாசம் ஆகியோர் இணை ஆணையரிடம் மனுச்செய்தனர். இம்மனுவில் பின்வரும் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.
வள்ளலார் காட்டிய வழிகாட்டுதலின்படி ஜோதி வழிபாடே நிகழுதல் வேண்டும்.
பிராமணர் ஒருவர் வழிபட விரும்பினாலும்கூட அவர் தனது பூணூலை நீக்கி, தன் சாதியடையாளத்தைக் கைவிட்டே வழிபடவேண்டும். ஆனால் மனுதாரர் சபையின் கிழக்குப் பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி சமயச் சடங்குகளையும் மேற்கொண்டுள்ளார். திருநீறு விநியோகித்துள்ளனர். இதை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்களும் துண்டறிக்கைகளும் விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இம்மனுக்களில் இடம்பெற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் இவ்வழக்கில் பின்வரும் வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்று இணை ஆணையர் முடிவு செய்தார். அவர் எழுப்பிய மூன்று வினாக்கள் வருமாறு:
1.            சத்தியஞான சபை தொடங்கிய 25.01.1872 லிருந்து யார் சடங்குகளைத் தொடங்கியது?
2.            உருவ வழிபாடு எப்போது தொடங்கியது? எப்போது சிவலிங்கம் நிறுவப்பட்டது.
3.            இச்சடங்குகள் வள்ளலார் வகுத்த விதிமுறை களுக்கு உட்பட்டனவா?
இவ்வினாக்களுக்கான விடைகளாக தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
சபாபதி சிவாச்சாரியார் வழங்கியுள்ள ஆவணத்தில் நாள், திங்கள், ஆண்டு எதுவும் இல்லை. இதில் இடம் பெற்றுள்ள சபாபதி சிவாச்சாரியார் வள்ளலார் ஆகியோரின் கையப்பங்கள் அடையாளம் காணப் படவில்லை. இதன் நம்பகத்தன்மை நிலைநாட்டப் படவில்லை.
சபாபதி சிவாச்சாரியார் 13.11.1903வரை அறங் காவலராக இருந்ததாகவும், அவரது உடல் நலக் குறைவுக்குப் பின்னர் அவரது மகனும் மருமகளும் அறங்காவலர்களாக இருந்து தைப்பூசத் திருவிழாவின் போது சைவ சமயம் சார்ந்த சடங்குகளை மேற்கொண் டிருந்தனர் என்ற வாதத்திற்குச் சான்றுகளில்லை. மேலும் சபாபதி சிவாச்சாரியார் மரபினர் அறங்காவலர்களாகத் தொடர்ந்து இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட வில்லை. அத்துடன் அறங்காவலர்களே பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்படவில்லை.
25.01.1872இல் சத்தியஞான சபை நிறுவப்பட்ட பின்னர் 18.07.1872இல் வழிபாட்டு முறைகள் வகுக்கப் பட்டன. ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின் பற்றப்படவில்லை. தற்போதைய லிங்க வழிபாடு மிக அண்மைக்காலத்திலேயே தொடங்கியுள்ளது. இது வள்ளலார் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது.
இணை ஆணையரின் வழிகாட்டுதல்
மேற்கூறிய அறிக்கைகளையும் ஆவணங்களையும் மட்டுமே சான்றுகளாகக் கொள்ளாது, 18.07.1872
அன்று சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவியபோது, வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் சாரத்தைப் பட்டியலிட்டு இவையே இச்சபையின் செயல் பாட்டுக்கான வழிகாட்டி என்று இணை ஆணையர் சுட்டிக்காட்டினார். அவை வருமாறு:
1.            சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
2.            பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்டோரும், எழுபத்தியிரண்டு ஆண்டுகட்கு மேற்பட்டோரும் சத்தியஞான சபையில் வழிபாட்டை நடத்த வேண்டும்.
3.            உள்ளமும் உடலும் தூய்மையானவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
4.            நீராடிய பின்னர் தம் பாதங்களை ஆடையால் மறைத்துக்கொண்டு தகரத்தாலும் கண்ணாடி யாலும் செய்யப்பட்ட பெட்டியில் இருக்கும் ஜோதியை அறையில் இருந்து எடுத்துவந்து மேடையில் வைக்க வேண்டும்.
5.            தம் பாதத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு ஒருமுறை கருவறையில் நுழைந்து, கண்ணாடி விளக் கையும் மற்ற இடங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
6.            இதைத்தவிர வேறு எதையும் அங்கு மேற் கொள்ளக்கூடாது.
7.            ஞானசபையின் திறவுகோல் நிரந்தரமாக ஒருவரிடமே இருக்கக்கூடாது. பணிமுடிந்ததும் திறவுகோலைப் பெட்டியன்றில் வைத்துப் பூட்டி பின் அறையையும் பூட்டி அத்திறவு கோலை அப்பகுதியைப் பாதுகாக்கும் காவலரிடமோ, நிர்வாக அதிகாரியிடமோ கொடுத்துவிட வேண்டும்.
8.            சத்தியஞான சபையில் ஓசையின்மை உறுதி யாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.
9.            எண்ணெய் ஊற்றி எரியும் ஜோதியை தகரத்தாலும் கண்ணாடியாலும் செய்யப் பட்ட பெட்டியில் வைத்துக் காட்ட வேண்டும்.
10.          ஜோதியைக் காட்டும்போது மக்கள் இரைச்சலின்றி ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற மந்திரத்தைக் கூற வேண்டும்.
11.          வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியன வற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்.
12.          சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும்.
இவ்விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை ஆராய்ந்து சிவாச்சாரியார் மேற்கொண்ட வழிபாட்டு முறையைத் தடை செய்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.
மறுஆய்வு மனு
இணை ஆணையரின் இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை இந்து அறநிலையத் துறையின் ஆணையரிடம் சிவாச்சாரியார் அளித்தார்.
இவற்றில் பின்வரும் வாதங்களை அவர் முன்வைத்தார்.
1.            தாம் நிறுவிய சத்தியஞான சபையை சிவாலய மாகவே வள்ளலார் கருதினார்.
2.            சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகள் நிகழ்ந்தன.
3.            மனுதாரரின் (சிவாச்சாரியாரின்) முன் னோர்கள் சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகளை நடத்தி வைத்தனர்.
இவ்விவாதங்களை நிலைநாட்டப் பின்வரும் அய்ந்து சான்றுகளை அவர் முன்வைத்தார்.
1.            வள்ளலார் தாம் எழுதும் கடிதங்களை ‘உ’ ‘சிவமயம்’ என்று தொடங்கி, சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்று கையெழுத் திடுவார்.
2.            சத்தியஞான சபையென்பது சிதம்பரம் சித்திர சபையின் மற்றொரு பகுதியாகும்.
3.            தமது ஆறாம் திருமுறையில் சிவன், சிவ வழிபாடு, சித்திர சபை ஆகியன குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
4.            சிவலிங்கம், தூபதீபம், கண்ணாடி ஆகிய பூசைப்பொருட்களை சபாபதி சிவாச்சாரி என்பவரிடம் (வாதியின் முன்னோர்) ஒப்படைத்தார்.
5.            சத்தியஞான சபை தொடங்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட சடங்குகளும், பூசை முறை களும் இன்றுவரை பின்பற்றப்படுகின்றன.
சபாபதி சிவாச்சாரியாரின் இம்மனுவை எதிர்த்து இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகிலுள்ள புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் எதிர்வாதங்கள் சிலவற்றை முன்வைத்தார். அவற்றுள் முக்கியமான சில செய்திகள் வருமாறு:
சத்தியஞான சபையைத் தெய்வ நிலையமாக வள்ளலார் உருவாக்கினார். தைப்பூசம் தொடர்பான துண்டறிக்கைகள் மனுதாரரின் முன்னோரால் தன்னிச்சையாக அச்சடிக்கப்பட்டவை. சத்தியஞான சபையானது சைவ ஆகம விதிமுறையிலான வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டுமென்று வள்ளலார் விரும்பியிருந்தால் அதை சிவன் கோவிலாக நிறுவி யிருப்பார். சைவ ஆகம நெறிப்படி கோவில் ஒன்று நிறுவப்பட்டால், சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியன இருக்க வேண்டும். சிவனுக்கு எதிராக நந்தி நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் இல்லாமல் சத்தியஞான சபையை அவர் நிறுவியுள்ளார். சிவலிங்கம் ஒன்றை அங்கு நிறுவி உருவ வழிபாட்டை அவர் நிகழ்த்தியதற்கு வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.
வள்ளலார் உயிரோடு இருந்தபோது ஆறாம் திருமுறை அச்சிடப்படவில்லை என்பதினாலேயே அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வில்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. 1885இல் வெளியான முதல் பதிப்பில் தொடங்கி, 1896, 1924, 1931-32 ஆண்டுகளில் ஆறாம் திருமுறை நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இவற்றில் அருட்பெருஞ்ஜோதி அகவல் இடம்பெற்றுள்ளது. சபாபதி சிவாச்சாரியாரின் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தும் இணை ஆணையரின் தீர்ப்பை உறுதிசெய்தும், இந்து அற நிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார்.
உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரின் தீர்ப்பையும், அதை உறுதிசெய்து இந்து அறநிலையத் துறையின் ஆணையர் வழங்கிய தீர்ப்பையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சபாபதி சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதியரசர் சந்துரு மனுதாரர் முன்வைத்த விவாதங்களை ஏற்றுக்கொள்ளாது அவரது மனுவைத் தள்ளுபடி செய்து 24.03.2010இல் தீர்ப்பு வழங்கினார்.
அவரது தீர்ப்பு வள்ளலாரின் சிந்தனைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை போல் அமைந்துள்ளது.
தீர்ப்பின் தொடக்கத்தில் வள்ளலாரைக் குறித்த சிறு அறிமுகத்தைச் செய்துள்ளார்.
Vallalar‘கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரம்ஆ சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டைஇட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே’
‘ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே’
என்ற வள்ளலாரின் பாடல்களுடன் அறிமுகம் தொடங்குகிறது. சமயம், சாதி, ஆகமம், வேதம் என்பனவற்றை அவர் ஏற்றுக்கொள்ளாததை வெளிப் படுத்தும் வழிமுறையாக,
‘சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்
 உணர்த்திய அருட்பெருஞ்சோதி’
‘ஆகமுடி மேல் ஆரண முடிமேல்
 ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி’
‘சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
 அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி’
என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை எடுத்துக் காட்டுகிறார்.
1866ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாநிலத்தில் நிகழ்ந்த கொடிய பஞ்சமும், அப்பஞ்சத்தால் மக்கள் பட்டினியால் வாடியது கண்டு வள்ளலார் பதைபதைத்ததும் தீர்ப்பில் இடம்பெறுகின்றன. இப்பதைபதைப்பு,
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’
என்ற பாடலாக வெளிப்பட்டதைச் சுட்டிக்காட்டி விட்டு, இதுவெறும் புலம்பலாக நின்றுவிடவில்லை என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். 1867ஆம் ஆண்டில் கஞ்சித் தொட்டியன்றை வடலூரில் அமைத்ததையும், அங்குள்ள அடுப்பில் அவர் ஏற்றிய நெருப்பு இன்றுவரை அணையாது தொடர்வதையும், ஏழைகளுக்கு உணவளித்தலை உயரிய குணமாக அவர் கருதியதையும் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளின் அவல நிலையைப் பொறுக்காது இறைவனை நோக்கி,
‘வாழைஅடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யான் உனக்கு
மகன் அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக்
 கொடுத்தருள் இப்பொழுதே’
என்று வேண்டுவதையும், ‘கருணை இலா ஆட்சி
கடுகி ஒழிக அருள்நியந்த நன்மார்க்கர் ஆள்க’ என்று கூறுவதையும் அவர் நினைவூட்டுகிறார். ஏனைய மடங்கள், ஆதினங்களைப் போன்று வாரிசையோ, இளைய பீடத்தையோ உருவாக்காத தன்மையையும் எடுத்துரைக்கிறார்.
தீர்ப்பின் தொடக்கத்தில் இடம்பெறும் இப்பகுதிகள் வள்ளலாரைக் குறித்த சரியான சித்திரத்தை வழங்குகின்றன.
* * *
வள்ளலாரின் உண்மையான இயல்பை வெளிப் படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட சான்றுகளையும், விவாதங்களையும் தம் தீர்ப்பில் எடுத்தாள்கிறார். அடுத்து வள்ளலாரின் கருத்துக்களின் சாரத்தை வெளிப்படுத்தும் தன்மைகொண்ட பின்வரும் திரு அருட்பா பாடல்களை மேற்கோளாகக் காட்டுகிறார். வள்ளலாரின் சமய நெறிமுறைகள் குறித்தும் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார்.
உருவ வழிபாட்டை ஏற்காமையும், ஜோதி என்ற பெயரில் நெருப்பை வழிபடுவதும் வள்ளலாரின் கருத்தாக இருந்துள்ளது. நிறுவன சமயம் எதற்கும் அவர் இடமளிக்கவில்லை. மனிதகுலத்திற்கு முழுமையான இடத்தை அவர் வழங்கியுள்ளார். சாதி அடிப்படை யிலான பாகுபாட்டிற்கு அவர் இடமளிக்கவில்லை.
‘எச்சம யங்களும்பொய்ச்சம யமென்றீர்
இச்சம யம்இங்கு வாரீர்
மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்’
‘சதுமறை யாகம சாத்திர மெல்லாஞ்
சந்தைப் படிப்புநஞ் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்திற் சாகா
வித்தையைக் கற்றன னுத்தர மெனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தன னென்றும்
பொன்றாமை வேண்டிடி லென்றோழி நீதன்
அதுவிது வென்னாம லாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து’
‘சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே’
‘செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
தேவரும் முனிவரும் பிறரும்
இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
எந்தைநின் திருவருள் திறத்தை
எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
என்தரத் தியலுவ தேயோ
ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே’
உருவமில்லாத வழிபாடும், நிறுவன சமய
மறுப்பும் வள்ளலாருக்கு எதிரிகளை உருவாக்கின. அவருக்கு எதிரான பரப்புரையை அவரது எதிரிகள் மேற்கொண்டனர். அவரது பாடல்கள் ‘திரு
அருட்பா’ என்றழைக்கப்படுவதை எதிர்த்து, ‘மருட்பா’ என்றழைத்தனர். இதுதொடர்பாக ஆறுமுக நாவலர் கடலூர் நீதிமன்றத்தில் 1869இல் வழக்குத் தொடுத்தார். இறுதியில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.
தீர்ப்பின் இறுதியில் சிந்தனைக்குரிய கருத்து ஒன்றையும் நீதியரசர் சந்துரு முன்வைத்துள்ளார். புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத்தாகும். இதற்குச் சான்றாக,
‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
* * *
‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா
நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா’
என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன் வைக்கிறார். முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆராய வேண்டிய ஆய்வுப்பொருள் இது.
* * *
இவ்வழக்கு வேறொரு சிந்தனையையும் தூண்டுகிறது. சபாபதி சிவாச்சாரியார் சிவலிங்கத்தை வள்ளலாரின் சத்தியஞான சபையில் நிறுவி, சைவ ஆகம விதிமுறைப்படி வழிபாடு நிகழ்த்தத் தொடங்கியதுதான் இவ்வழக்கின் அடிப்படைக்காரணம். இன்று கிராமப்புற நாட்டார் தெய்வங்கள் ஆதிக்க வகுப்பினரால் ஆகம விதிக்குள் கொண்டு வரப்படுகின்றன. அம்மன்கள் அம்பாள்களாக்கப்படுகின்றனர். நாட்டார் தெய்வக் கோவில்களுக்குள் சிவனும், விஷ்ணுவும், முருகனும் அத்துமீறி நுழைந்து, அச்சாமிகளின் அசைவ உணவுப் படையலைத் தடுக்கின்றனர். ஆகம விதிகளின்றி நிறுவப்பட்ட இக்கோவில்களில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நிகழ்கிறதே! இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் என்ன? நீதியரசர் சந்துரு இதற்கு வழிகாட்டினால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக