செவ்வாய், 15 அக்டோபர், 2019

குடும்பத்தை கெஞ்ச வைத்த போலீஸ்: அதிரடி டிரான்ஸ்ஃபர்!

குடும்பத்தை கெஞ்ச வைத்த போலீஸ்: அதிரடி டிரான்ஸ்ஃபர்! மின்னம்பலம் : கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி, சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி அருகே சிதம்பரம் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவலர் சார்லஸ் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புவனகிரி பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரிக்க ஆரம்பித்தனர். ‘இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர்தான் வரணும். நீங்கள் ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்’ என்று காவலர்கள் கேட்டதற்கு ‘என்ன சார் அநியாயமா இருக்கு. எங்க குழந்தைகளை நாங்கள் எங்க விட்டுட்டு வர முடியும்’ என்று பதிலுக்குக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் ‘அது உங்க பிரச்னை. இரண்டு பேருக்கு மேல் வரக் கூடாது. அதுதான் சட்டம்’ என்று கூறி அதன் பின்னர் தான் ஹெல்மெட் எங்கே? லைசென்ஸ் எடு, ஆர்.சி புக் கொடு என்று கேட்க ஆரம்பித்தனர்.

அதற்கு அந்த நபர் ஹெல்மெட் அணிந்து தான் வந்தேன் என்று கூறி வாகனம் ஓட்டுவதற்குரிய ஆவணங்களின் ஜெராக்ஸ் பேப்பரைக் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார், ஒரிஜினல் தான் வேண்டும் என்று கூறினதும், ‘சார், நான் புவனகிரியில் இருந்து வருகிறேன். அதான் ஜெராக்ஸ் வைத்திருக்கேன்ல’எனக் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தன் பெற்றோரிடம் போலீசார் அதட்டும் தொனியில் கேள்வி கேட்பதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது எட்டு வயது மகள் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டார்.
பைக்கில் கணவர் குழந்தைகளுடன் வந்த பெண்ணும் பலமுறை ‘சாரி சார் நாங்க குழந்தைகளுடன் வந்துள்ளோம். இந்த முறை விட்டு விடுங்க’ எனக் கெஞ்சிக் கேட்டும் போலீசார் வாக்குவாதம் செய்யும் சம்பவத்தின் வீடியோ ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த சம்பவம் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியது. பைக்கில் வந்த நபர் ஹெல்மெட், வண்டிக்கான ஆவணங்களின் நகல் என எல்லாவற்றையும் கொடுத்தும், சிறு குழந்தைகளுடன் வந்ததற்காக இரண்டு பேருக்கு மேல் ஏன் வந்தீர்கள் எனக்கூறி போலீஸார் அபராதம் விதித்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோரை கடலூர் ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளை தீவிரமாக சோதனை செய்வதோடு, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் சாலை விதிமீறல்களும் விபத்துக்களும் பெருமளவில் குறைந்துள்ளது.
ஆனாலும் சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளிடையே பல சந்தேகங்கள் நிலவி வருகிறது. இருசக்கர வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமானதுதான். இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதே விதியாக உள்ளது. ஆனாலும் சிறு குழந்தைகளுடன் பைக்கில் வருவதைப் பெரும்பாலும் காவலர்கள் குற்றமாகக்கருதுவது இல்லை.
மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் 129-வது பிரிவின் படி, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் பயணிப்பவர்களும், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் சீக்கியர்களுக்கும், 2007-ம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்திய விதிகளின் படி, தலைப்பாகை அணியும் ‘மெய்வழிச்சாலை’ பிரிவைச் சேரந்தவர்களுக்கும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 4 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உரிய பாதுகாப்புடன் அவர்கள் பயணிக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது.
ஓட்டுநர் உரிம ஆவணங்களைப் பொறுத்தவரை, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், வாகன ஓட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதே சுற்றறிக்கையில், டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்துப் பயன்படுத்தலாம் என்றும் கொடுக்கப்பட்டிருந்தது. இதை தமிழக அரசும் நடைமுறைப்படுத்தியது. அதன் படி அரசால் வெளியிடப்பட்ட டிஜிலாக்கர் போன்ற செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், டிஜிட்டல் ஆவணங்களைப் பல இடங்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இது குறித்த விழிப்புணர்வு இன்றும் வாகன ஓட்டிகளிடம் பரவலாக இல்லை.
வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் சிலரும் மோட்டார் வாகனச் சட்டம் 1988 குறித்தும் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் குறித்தும் பொதுமக்களுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கத் தவறுகின்றனர். சமூக அக்கறையுடனும் பொதுமக்களின் நலனின் அக்கறை கொண்டும் பல காவலர்கள் அல்லும் பகலும் வேலை செய்யும் போது, சிலர் இவ்வாறு மனிதாபிமானமற்று செயல்பட்டு களங்கத்தையும் ஏற்படுத்துகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக