புதன், 30 அக்டோபர், 2019

இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம்... சவுக்கு சங்கர்

savukkuonline : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களின் முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஆளுங்கட்சி பெற்ற பெரும் வெற்றி, இம்முடிவுகளை ஆராய வைக்கிறது.   தமிழகத்தை பொறுத்தவரை, இடைத் தேர்தல்கள் பணத்தால் வெல்லப்படுபவைதான் என்பது நாம் அறிந்ததே என்றாலும், இந்த இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணிக்கான வாக்கு வித்தியாசம் ஒரு உரத்த செய்தியை அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உணர்த்துகிறது.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை விட 31,813 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டியில், அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ஜெயலலிதா ஆர்கே.நகரில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட வெறும், 39,545 வாக்குகள் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

பிப்ரவரி 2017ல், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றபோது, எத்தனை நாட்களோ / எத்தனை மாதங்களோ என்றுதான் பரவலாக பேச்சு இருந்தது.   திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர், ஆட்சி ஓரிரு மாதங்களில் கலையும் என்று தொடர்ந்து பேசி வந்தனர்.   எடப்பாடி அப்போது மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தார்.  அவரின் ஆட்சியை கலைக்க அவர் கட்சியையே சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தி, கடும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் அத்தனை சவால்களையும் சமாளித்ததோடல்லாமல், பாராளுமன்றத் தேர்தலில், அதிமுக-பிஜேபி கூட்டணி படு தோல்வியை சந்தித்தாலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று, அரசியல் தனக்கு புதிதல்ல என்பதை நிரூபித்தார்.  பாராளுமன்றத் தேர்தலோடு,  18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் ஒன்றாக வந்தது.
எடப்பாடியின் கவனம், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மீது மட்டுமே இருந்தது.   யார் எம்.பியாக ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என்று அசிரத்தையாகவே இருந்தார்.  பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது, ஒரே நேரத்தில் தேமுதிக, திமுகவுடனும், அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது பொது வெளியில் அம்பலமானபோதும், தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்து 2 சதவிகிதத்துக்கு கீழே சென்று விட்டது என்று தெரிந்தபோதும், எடப்பாடி தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார். ஏனெனில், இடைத்தேர்தல் முடிவுகள் சில நூறு வாக்குகள் வேறுபாட்டில் முடிவு செய்யப்படும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி நன்கு உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.  சாதுர்யமான அவர் காய் நகர்த்தல்களின் பலனை, இடைத்தேர்தல்களில் அதிமுக பெற்ற 9 தொகுதிகளின் வெற்றி தெளிவாக்கியது.
முரண்டு பிடித்த பன்னீர்செல்வத்தை, பணிய வைத்து துணை முதல்வராக்கி, அவர் அதிகாரத்தை பறித்து, அவர் ஆதரவாளர்களை ஓரம் கட்டி, அவரை முடக்கியதாகட்டும், மாநிலங்களவை வேட்பாளர் தேர்வில் அவருக்கு எந்த பங்கும் இல்லாமல் பார்த்துக் கொண்டதாகட்டும், டிடிவி தினகரனின் அணியில் இருந்து, வரிசையாக கட்சியினரை விலக்கி, அவரை பலவீனமாக்கியதாகட்டும், பிஜேபியோடு நெருக்கமாக இருந்த பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி பிஜேபியிடம், தமிழ்நாட்டின் “பாஸ்” யார் என்பதை தமிழகத்துக்கே உரக்கச் சொல்லி விட்டார்.
திமுக தொடக்கம் முதலே மிதப்பில்தான் இருந்தது.   இந்த இடைத் தேர்தலை அவர்கள் ஒரு பெரிய சவாலாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி, திமுகவுக்கு கிடைத்த வாக்காகத்தான் திமுக தலைமை பார்த்தது.  குறிப்பாக ஸ்டாலின் அப்படியே பார்த்தார்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இத்தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில், “திமுகவுக்கு விக்கிரவாண்டியில் கிடைத்துள்ளது ஒரு அதிர்ச்சிகரமான தோல்வி.   2016 பொதுத் தேர்தலில், வெற்றி பெற்ற ஒரு தொகுதியில் திமுக இப்படி படு மோசமாக தோற்றிருப்பது அதிர்ச்சிகரமானதே.  நாங்குநேரியில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளிடையே நிலவிய ஒத்துழையாமையை அதிமுக வலுவாக பயன்படுத்திக் கொண்டது” என்றார்.
டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் இது குறித்து கருத்து கூறுகையில், “நாங்குநேரி மற்றும், விக்கிரவாண்டியில் திமுகவுக்கு கிடைத்துள்ள படுதோல்வி, திமுக தனது அரசியல் செயல்பாடுகளில் முழுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது.  திமுகவிடம் ஒரு திட்டமோ, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற உத்தியோ இல்லை.  உதயநிதியை அடுத்த தலைவராக காட்டுவதில் திமுக காட்டிய ஆர்வத்தில் பாதியை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காட்டியிருந்தால், இப்படி மோசமாக திமுக தோற்றிருக்காது.   2021க்குள், திமுக தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும்” என்றார்.
இவர் கூறுவது போல, உதயநிதியே திமுகவின் எதிர்காலம் என்ற சித்திரத்தை கட்டுவதில் ஸ்டாலினே முன்னிற்கிறார்.  உதயநிதி இளைஞர் அணித் தலைவராக பதவியேற்ற நாள் முதலாகத்தான் திமுகவில் இளைஞர் அணி என்ற ஒரு அணியே உருவானது போல ஒரு பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது.  எனக்கு அடுத்து உதயநிதிதான் என்பதை கட்சியில் மூத்தவர்களுக்கு உணர்த்தும் விதமாகவே, ஸ்டாலின் உதயநிதி பதவியேற்ற பிறகு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வழக்கம் போல அறிவாலயத்தில் நடத்தாமல், இளைஞர் அணித் தலைமையகமான அன்பகத்தில் நடத்தினார்.  இது கட்சியில் மூத்தவர்களுக்கு என்ன மாதிரியான செய்தியை உணர்த்தும் ?

மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியம் பேசுகையில், “உதயநிதியை தொடர்ந்து கட்சி முன்னிறுத்துவது ஒரு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்ற கருத்தை மறுக்க முடியாது.
2021ல் தேர்தலில் வெல்ல வேண்டுமானால், உள்ளாட்சித் தேர்தல்களில் வெல்ல வேண்டுமானால், திமுக கடுமையாக உழைக்க வேண்டும்.  ஆனால், மராட்டியத்தில் சரத்பவாரைப் போல ஸ்டாலின் கடுமையாக போராடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது” என்றார்.
உதயநிதியை முன்னிறுத்தும் முயற்சிகள் எந்த அளவுக்கு சென்றுள்ளன என்றால், தற்போது திமுகவின் மகளிர் அணியில் உள்ள 35 வயதுக்குட்பட்ட பெண்களை மகளிர் அணியிலிருந்து விலகி, உதயநிதி தலைமையில், “இளம்பெண்கள்” அணியில் இணைய வேண்டும் என்று ஒரு நகர்வு திமுகவில் முன்னெடுக்கப்படுகிறது என்று வரும் செய்திகள் திமுகவை ஸ்டாலின் தன் குடும்ப சொத்தாகவே பார்க்கிறாரோ என்று எண்ண வைக்கிறது.  உதயநிதி ஒரு மாபெரும் பேச்சாளரும் அல்ல.  பெரும் எழுத்தாளரும் அல்ல.  சினிமாவில் சூப்பர் ஸ்டாரும் அல்ல.  அவர் ஒரு தோல்வியடைந்த நடிகர்.  அவ்வளவே.  அதுவும், பெரும்பாலான படங்களை அவரே தயாரிக்காமல் இருந்திருந்தால் அவர் இத்தனை படங்களில் கூட நடித்திருக்க முடியாது.
அதிக எண்ணிக்கையில் உள்ள 18 வயது முதல் 35 வயது வரை உள்ள வாக்காளர்கள், ஒரு நாளும் உதயநிதியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.  திமுகவினரே மாற்றி வாக்களித்தாலும் வியப்பில்லை.
உள்ளூர் திமுக பிரமுகரான அந்நியூர் சிவாவை புறக்கணித்து, பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணியின் நண்பன் என்பதற்காகவும், உதயநிதி நற்பணி மன்றம் தொடங்கியவர் என்ற ஒரே காரணத்துக்காகவுமே, விக்கிரவாண்டியில் புகழேந்தியை வேட்பாளராக நிறுத்தியதன் பலன் தான் இந்த படு தோல்வி.
பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள், தமிழகத்தை குறி வைத்திருக்கும் நிலையில், அதை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது.    பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்டதை போல, 2021 தேர்தல் அத்தனை எளிதாக அமையப் போவதில்லை.  மாநில பிரச்சினைகள், மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி ஆகியவை ஒரு முக்கிய அம்சமாக சட்டப்பேரவை தேர்தலில் அமையும் என்பதையே ஹரியாணா மற்றும் மராட்டிய மாநில தேர்தல் முடிவுகள் விளக்குகின்றன.  பிஜேபி இந்த இரு மாநிலங்களிலும், தேர்தலுக்கு முதல் நாள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதையும், காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியதையும் வைத்து பிரச்சாரத்தை கையாண்டாலும், கடந்த தேர்தலை விட அது குறைவான இடங்களை பெற்றுள்ளது, மாநில தேர்தல்களை மக்கள் வேறு கோணத்தில் அணுகுகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.
அதனால், தமிழகத்தில் நிலவும், மோடி எதிர்ப்பு – பிஜேபி எதிர்ப்பு மட்டுமே பாராளுமன்றத் தேர்தலில் கைகொடுத்தது போல சட்டப்பேரவை தேர்தலில் கைகொடுக்காது என்பதை மற்ற எல்லோரையும் விட ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக கூட்டணி 2021 தேர்தலில் அப்படியே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.   ஸ்டாலின் குறைத்து மதிப்பிட்டதை போல, எடப்பாடி அனுபவம் இல்லாத அரசியல்வாதி இல்லை என்பதையும் ஸ்டாலின் உணர வேண்டும்.
2021 தேர்தல் மேலும் சில போட்டியாளர்களையும் தேர்தல் களத்துக்கு எடுத்து வரக் கூடும்.   ரஜினி போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஒதுக்கி விட முடியாது.  அப்படிப்பட்ட சூழலில், வெறும் சமூக வலைத்தளத்தில் எழுதும் திமுக கும்பலையும் – தன் மகனையும் மட்டுமே நம்பி 2021ல் ஸ்டாலின் களமிறங்குவாரேயென்றால், அவர் தோல்வியை சந்திக்கக் கூடும்.
ஜெயலலிதா இல்லாத அதிமுகவிடமும், ஸ்டாலின் ஒரு பொதுத் தேர்தலில் தோற்பாரேயானால், அது அவர் அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதும்.  சமூக வலைத்தளங்களையும், திமுக ஐ.டி. விங்கையும் மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், இப்போதிருந்தே ஸ்டாலின், திமுக போட்டியிடும் தொகுதிகளை தேர்ந்தெடுத்து பணியை தொடங்க வேண்டும்.  கூட்டணி கட்சிகளை அனுசரித்து, கூட்டணி 2021 வரை உடையாமல் பாதுகாக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்று ஸ்டாலின் நினைத்து மிதப்பில் இருப்பாரேயானால், காலம் அவருக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கும்.  அப்போது காலம் கடந்து போயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக