செவ்வாய், 22 அக்டோபர், 2019

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்!

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்!மின்னம்பலம் : இந்தியாவுடனான தபால் சேவையை இன்று முதல் நிறுத்தவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்காக நாடு முழுவதும் 28 வெளிநாட்டு தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு அஞ்சல் அனுப்புவதற்கும், அஞ்சலை பெறுவதற்கும் உள்ளன. தேசப் பிரிவினை, நடைபெற்ற மூன்று போர்கள், அதிகரிக்கும் பதட்டம் என இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் எத்தனையோ கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், தற்போது வரை நிற்காத ஒரே சேவை என்றால் அது தபால் சேவை மட்டுமே.

ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து எந்தவொரு தபாலையும் பெறுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொண்டது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு வரையறை சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் இம்முடிவை எடுத்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மூன்று தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று(அக்டோபர் 20) தெரிவித்தார். ஆனால், இதனை பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் இன்று திடீரென அறிவித்துள்ளது. இதற்கு மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தியாவுடன் தபால் சேவையை நிறுத்திக் கொள்வதாக இன்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது சர்வதேச தபால் சேவை மரபுகளுக்கு எதிரானது. எந்த ஒரு நோட்டீஸும் வழங்காமல் திடீரென தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பாகிஸ்தான் தான். அந்த நாடு மாறப்போவில்லை” என பாகிஸ்தானின் இம்முடிவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
டெல்லியின் அஞ்சல் சேவைகளுக்கான அஞ்சல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் ஆர்.வி. சவுத்ரி கூறும் போது, "இது அவர்களின்(பாகிஸ்தான்) தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு தலைப்பட்ச முடிவு. இதுபோன்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்தது இதுவே முதல் முறை. உத்தரவு எப்போது நீக்கப்படும் என்று எங்களுக்குத் தெரியவில்லை ”என்று கூறினார்.
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் தபால் போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக