வியாழன், 24 அக்டோபர், 2019

மகாராஷ்டிரம், ஹரியாணாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

mh  தினமணி :   மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு மாநிலங்களிலும் கடந்த 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் 61.13 சதவீதமும், 90 தொகுதிகளை உள்ளடக்கிய ஹரியாணாவில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் 269 மையங்களில் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றனர். மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. இதனால், அந்தக் கூட்டணி உற்சாகத்தில் உள்ளது. அதேசமயம், கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தாண்டி, தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உள்ளது.ஆளும் கூட்டணியில், பாஜக 164 இடங்களிலும், சிவசேனை 124 இடங்களிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சிக் கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 147, 121 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. 1,400 சுயேச்சைகள் உள்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இந்த மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 8.9 கோடியாகும்.
மூன்றடுக்கு பாதுகாப்பு: ஹரியாணாவில் தொகுதிவாரியாக 90 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, மாநில இணை தலைமைத் தேர்தல் அதிகாரி இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.
ஹரியாணாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் கட்சியிலிருந்து பிரிந்து உருவான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆகியவை இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டது. மத்திய அரசிலும், பஞ்சாபிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலிதளம், ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 105 பெண்கள் உள்பட மொத்தம் 1,169 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 
முதல்வர் மனோகர் லால் கட்டர், காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலா, இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் அபய் சிங் சௌதாலா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

51 பேரவை தொகுதிகளில்...
தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் உள்ள 51 பேரவைத் தொகுதிகளுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் வியாழக்கிழமை எண்ணப்பட உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 11, குஜராத்தில் 6, பிகார், கேரளத்தில் தலா 5, அஸ்ஸாம், பஞ்சாபில் தலா 4, சிக்கிமில் 3, தமிழகம், ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தானில் தலா 2,  அருணாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயம், தெலங்கானா ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 51 பேரவைத் தொகுதிகளில் கடந்த 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதேபோல், மகாராஷ்டிரத்தின் சதாரா மக்களவைத் தொகுதிக்கும், பிகாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி, 17 மாநிலங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக