திங்கள், 7 அக்டோபர், 2019

சென்னையில் திபெத்தியர்கள் கைது!.. மோடி-ஜீ ஜின்பிங் சந்திப்பு

மோடி-ஜீ ஜின்பிங் சந்திப்பு: சென்னையில் திபெத்தியர்கள் கைது!மின்னம்பலம் : மோடி-சீன அதிபர் சந்திப்பை முன்னிட்டு சென்னை, விழுப்புரத்தில் 9 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா-சீனாவுக்கு இடையேயான முறைசாரா உச்சி மாநாடு வரும் 11ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. அதில், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே துவங்கப்பட்டுவிட்டது. மாமல்லபுரத்தில் இருந்த சாலையோரக் கடைகள் அகற்றப்பட்டன. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

இந்த நிலையில் மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய இளைஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் தங்கியிருந்த எழுத்தாளரும் திபெத்திய செயல்பாட்டாளருமான டென்சின் சுண்டே நேற்று (அக்டோபர் 6) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் கூறுகையில், “டென்சின் சுண்டே சுதந்திர திபெத் தொடர்பான ஆவணங்களையும் துண்டு பிரசுரங்களை வைத்திருந்தார். அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளோம். சீனாவுக்கு எதிராக அவர் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதால், சீன அதிபர் வருகையின்போது அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவே கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதேபோல கிழக்கு தாம்பரம் சேலையூரில் திபெத் கொடியுடன் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வாசகங்கள் எழுதுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் ஒரு பெண், 2 மாணவர்கள் உள்பட 8 திபெத்தியர்களை கைது செய்தனர். அனைவரையும் ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி தயானந்த் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக