வியாழன், 3 அக்டோபர், 2019

மாமல்லபுரம் மோடி ஜீ.ஜின்பிங் சந்திப்பு: பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி

மோடி ஜீ.ஜின்பிங் சந்திப்பு: பேனர் வைக்க அனுமதி!மின்னம்பலம் : பிரதமர் மோடி, சீன அதிபரை
வரவேற்று பேனர் வைக்கத்
தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பேனர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக பேனர் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்தது. சமீபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ சட்டவிரோத பேனரால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்த சென்னை உயர் நீதிமன்றம் விதிமுறைகளை கடுமையாக்கியது.
இந்தநிலையில் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகையையொட்டி விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு இன்று (அக்டோபர் 3) விசாரிப்பதாகத் தெரிவித்திருந்தது.
அதன்படி மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண், பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் மனு அளித்துள்ளது. விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களைத் தேர்வு செய்துள்ளோம் என்று கூறி அதற்கான மாதிரி வரைபடத்தையும் தாக்கல் செய்துள்ளார்.

விதியை மீறி பேனர் வைக்கக்கூடாது என கூறியது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே என தெரிவித்ததுடன் , அரசு சார்பில்தான் பேனர் வைக்கப்படுகிறது அரசியல் கட்சிகள் பேனர் வைக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக வழக்கறிஞர் வில்சன், “மோடி மற்றும் சீன அதிபர் வருகையை நாங்கள் எதிர்க்கவில்லை. பேனர் வைத்து வரவேற்பதைத்தான் எதிர்க்கிறோம். பேனர் வைக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அரசே அணுகுவது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும்” என்று வாதிட்டுள்ளார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சீன அதிபரை வரவேற்பதற்கு எங்களிடம் ஏன் அனுமதி கேட்கிறீர்கள்? டெல்லிக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு டிஜிட்டல் பேனர் அச்சகங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானதேசிகன், டெல்லிக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தந்தால் பேனர்கள் வைப்பது வழக்கம் தான். விமான நிலையத்தில் மட்டும் பேனர் வைக்க அனுமதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி, “தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைப்பது குறித்து அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். விதிகளைப் பின்பற்றி பேனர் வைக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்த நீதிபதிகள் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பேனர் வைக்க வேண்டும். ராட்சத மற்றும் கட்சி சார்ந்த பேனர்களை வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக