வியாழன், 24 அக்டோபர், 2019

கீழடி நகர நாகரிகத்துக்கு மேலும் ஒரு சாட்சி: வடிகால் அமைப்புகள் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்துக்கு மேலும் ஒரு சாட்சி: வடிகால்
அமைப்புகள் கண்டெடுப்பு- தொல்லியல் துறை தகவல்
(தினமணி 23.10.2019):

கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்துக்கு மேலும் ஒரு சாட்சி கண்டறியப்பட்டுள்ளது. சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட வடிகால் அமைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கீழடி அகழாய்வில் ஒரு குழியில் சிவப்பு வண்ணத்தில் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து நன்கு பொருத்திய நிலையில் காணப்பட்டன. ஒவ்வொரு குழாயும் 60 சென்டிமீட்டர் நீளமும், வாய்ப்பகுதி 20 சென்டிமீட்டர் விட்டமும் கொண்டுள்ளன. இரண்டு குழாய்களிலும் உள்ள 10 விளிம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து காணும் போது சுருள் வடிவக் குழாய் போன்று காணப்படுகிறது.
இந்தக் குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில் மூன்று துளைகள் இடப்பட்டுள்ளன. இந்தக் குழாய்களானது மிக கவனமாக ஒன்றுடன் ஒன்று நன்கு பொருத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்பான நீர் செல்வதற்கான வடிகால் குழாய் அமைப்பாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சுருள் வடிவிலான சுடுமண் குழாயின் கீழே பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்திய நிலையில் காணப்பட்டன. இந்த இரண்டு குழாய்களும் மேலும் கீழுமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே இவை தனித்தனி பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.


அகழாய்வுக் குழியின் இரண்டாம் கால்பகுதியில் திறந்தநிலையில் நீர்செல்லும் வகையில் 50 சென்டி மீட்டர் ஆழத்தில் வடிகால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டதில், செங்கல் கட்டுமானம் 11 அடுக்குகளுடன் 5.8 மீட்டர் நீளமும், 1.6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இது தண்ணீர் எளிதாக வெளியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட திறந்த நிலையிலான வடிகால் அமைப்பாக காணப்படுகிறது.இந்திய தொல்லியல் துறையின் இரண்டாம் கட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட செங்கல் கட்டுமானத்துடன் கூடிய திறந்தவெளி வடிகாலின் தொடர்ச்சியே இப்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் தொடர்ச்சி அடுத்தகட்ட அகழாய்வில் தெரியவரும்.
கீழடி அகழாய்வில் திறந்த நிலையிலான வடிகால் அமைப்பு, வடிகட்டியுடன் இணைத்து பீப்பாய் வடிவிலான சுடுமண் குழாய், பாதுகாப்பாக நீரை எடுத்துச் செல்லும் சுருள் வடிவிலான குழாய்கள் ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது சங்ககால மக்கள் நீர் மேலாண்மையில் எத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினர் என்பதைக் காட்டுகிறது. இவை முதிர்ச்சி அடைந்த சமூகத்தின் முன்னேறிய தொழில்நுட்ப வளர்ச்சி என்பதையும் சான்றுடன் விளக்குகிறது.
இத்தகைய சான்றுகளே வைகை நதிக் கரையில் அமைந்துள்ள கீழடியில் நகர நாகரிகம் சிறப்புற்று விளங்கியது என்பதற்கு மேலும் வலுவூட்டுவதாக உள்ளன என தொல்லியல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக