வியாழன், 17 அக்டோபர், 2019

பண மோசடி வழக்கில் ஜோதிமணியிடம் விசாரணை... இவர் கலைஞரின் மகள் செல்வியின் மருமகனாவார்

மின்னம்பலம் : பண மோசடி வழக்கில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் மூத்த மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஜாகீர் அகமத் தமான் என்பவர், சௌகார் பேட்டையைச் சேர்ந்த அழகு சாதனப் பொருள் வியாபாரி தினேஷை நேரில் தொடர்பு கொண்டு, தனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் கோடிக் கணக்கில் இருப்பதாகவும், 500 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளாக 80 லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் போதும். 20 சதவிகிதம் கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னை ஈசிஆர் சாலையிலுள்ள நீலாங்கரையில் ஒரு பங்களாவுக்கு 80 லட்சம் பணத்தோடு தினேஷ் சென்றார். அந்த வீட்டில் ஜோதிமணி, ஜாகீர் அகமத் தமான், முனியாண்டி, விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 5 பேர் இருந்ததாகவும், தினேஷிடமிருந்து பணத்தை பெற்று, அதை எண்ணிப் பார்ப்பதாக கூறி முனியாண்டி, விக்னேஷ், டேவிட் ஆகியோர் வீட்டின் பின்புற கதவு வழியாக 80 லட்சம் பணத்தோடு தப்பியோடிவிட்டதாகவும் தினேஷ் நீலாங்கரை போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, நீலாங்கரை காவல்துறையினர் ஜோதிமணி மற்றும் ஜாகீரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் இதுபோல் இவர்கள் ஏற்கனவே பலரிடம் மோசடி செய்திருக்கும் விவரங்கள் தெரியவந்திருக்கின்றன . இந்த விவரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவல்துறை மேலிடத்திலிருந்து கொண்டு சென்றுள்ளனர். முதல்வரும் இதில் விசாரணையை முடுக்கிவிடச் சொல்லி க்ரீன் சிக்னல் கொடுத்ததை அடுத்து, வழக்கை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சிக்கிய இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜோதிமணியின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரோடு குடும்பத்தார் சில காலமாகவே சுமுக உறவில் இல்லை, அதனால்தான் அவர் மீதான போலீஸ் நடவடிக்கையை கண்டுகொள்ளவில்லை என்று கோபாலபுர வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக