புதன், 2 அக்டோபர், 2019

ஹைதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் படுகொலை .. வீட்டில் வீடியோ


vikatan = பிரேம் குமார் எஸ்.கே : . ஹைதரபாத் நகரில் வசித்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.சுரேஷ், இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி இந்தியா வங்கி ஊழியர். சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைதராபாத் நகரில் பணியாற்றி வந்துள்ளார். 2005-ம் ஆண்டு மனைவி இந்திராவுக்கு வந்த பணியிட மாற்றம் காரணமாக, அவர் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மகன் அமெரிக்காவிலும் மகள் டெல்லியிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் நேற்று பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக அவரது அலுவலக நண்பர்கள் சுரேஷை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனாலும், தொடர்புகொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இந்தத் தகவலை சென்னையில் இருக்கும் அவரின் மனைவிக்குத் தெரிவிக்கிறார்கள். மனைவி இந்திராவாலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே, தனது உறவினர்கள் சிலரின் உதவியுடன் ஹைதராபாத் விரைந்துள்ளார்.

பின்னர், போலீஸாரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது ரத்த காயத்துடன் சுரேஷ் சடலமாகக் கிடந்தார். சுரேஷின் சடலத்தைக் கைப்பற்றிய காவலர்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``தலையில் கனமான பொருள் கொண்டு தாக்கியதற்கான தடயம் இருக்கிறது. சுரேஷின் மரணத்துக்கு அதுதான் காரணமாக இருக்கும் என நினைக்கிறோம். மற்ற தகவல்களை உடற்கூறாய்வு முடிவுகள் வந்தால்தான் சொல்ல முடியும். அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.
ஹைதராபாத் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக