ஞாயிறு, 6 அக்டோபர், 2019

சிதம்பரம் வழக்கு: பிரதமருக்கு 71 அதிகாரிகள் கடிதம்!

சிதம்பரம் வழக்கு: பிரதமருக்கு  71 அதிகாரிகள் கடிதம்!2007ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது கைது தொடர்பாக ட்விட்டரில் சிதம்பரம், “என்னிடம் மக்கள் கேட்கிறார்கள். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தைப் பரிசீலித்து உங்களுக்குப் பரிந்துரை செய்த பல அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. பிறகு ஏன் உங்களை மட்டும் கைது செய்திருக்கிறார்கள். நீங்கள் கடைசியாக கையொப்பம் இட்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவா உங்களைக் கைது செய்திருக்கிறார்கள்” என்பதாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன விவகாரத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி நிதி ஆயோக் முன்னாள் சிஇஓ சிந்து ஸ்ரீ குல்லார், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை முன்னாள் செயலாளர் அனுப் கே.பூஜாரி, நிதித்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த பிரபோத் சக்சேனா, பொருளாதார விவகாரத் துறையில் செயலராக இருந்த ரபிந்திர பிரசாத் ஆகியோரை விசாரணை செய்ய சிபிஐக்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் நான்கு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை கவலையளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 71 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று (அக்டோபர் 5) கடிதம் எழுதியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள், விடாமுயற்சியுடன் உள்ள மற்றும் நேர்மையான அதிகாரிகளை முக்கிய முடிவுகள் எடுக்க வைப்பதிலிருந்து தடுக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தை அமைச்சரவை செயலாளராக இருந்த கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், பஞ்சாப் டிஜிபி ஜூலியோ ரிபேரியோ உள்ளிட்ட 71 ஓய்வுபெற்ற அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
கடிதத்தில், “குறுகிய அரசியல் லாபத்துக்காக ஓய்வுபெற்ற சில அதிகாரிகள் மட்டும் குறிவைக்கப்படுகின்றனர். அரசியல் ரீதியாக ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தங்களது பணியில் நேர்மையாகவும் சிறப்பாகவும் செயல்படும் அதிகாரிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடைக்காது என்ற அரசு ஊழியர்களின் எண்ணத்தை உறுதிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளவர்கள்...
நேர்மை மற்றும் விடாமுயற்சியுடைய அதிகாரிகள் அன்றைய அரசின் கொள்கை முடிவுகளைத்தான் அமல்படுத்தியிருப்பார்கள். வேறேந்த தவறுகளும் செய்யாத அந்த அதிகாரிகளைக் குறிவைத்து தண்டனை அளிப்பது, பணியில் உள்ள அதிகாரிகளை நம்பிக்கையிழக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், “முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு திட்டத்தை ஆராய்வதற்கும், செயல்படுத்துவதற்கும் அதிகாரிகள் அதிக காலம் எடுத்துக்கொள்வதில் ஆச்சரியம் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த முடிவுகளை மறுஆய்வு செய்யும்போது, அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். நீதியின் நலன்களுக்காக இந்த பிரச்சினைக்கு முன்கூட்டியே தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம்” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக