புதன், 9 அக்டோபர், 2019

கீழடி 3500 ஆண்டு எழுத்து பானைகள் வருவாய் துறையிடம் ஒப்படைப்பு.

archeological sites foundnakkheeran.in - பகத்சிங் : கீழடி அகழாய்வில் தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து கொள்வதுடன் 2600 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு பானைகளில் தமிழ் எழுத்துகளும் இருப்பதை கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள  மங்களநாடு - மாத்தூர் ராமசாமிபுரம் - தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் வில்வன்னி ஆற்றங்கரையில்  173 ஏக்கர் பரப்பளவுள்ள அம்பலத்திடலில் என்னும் இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் முதுமக்கள் தாழிகள், புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து கிராம மக்களிடம் சொல்ல அதில் சிலர் விளையாட்டாக தோண்டி கருப்பு சிவப்பு பானைகள், குடுவைகள், கின்னங்கள் கண்டெடுக்கப்பட்டது.
அவற்றை பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் சித்த மருத்துவர் மதியழகன் பாதுகாத்து வந்தார். அப்போதே தொல்லியல் துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டும் செய்தி தாள்களில் செய்திகள் வெளியாகி அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.


இந்த நிலையில் தான் கடந்த 2016 ம் ஆண்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் நடத்திய ஆய்வில் அங்கே சிதறிக் கிடந்த பானை ஓடுகளில் எழுத்து காலத்திற்கு முந்தைய குறியீடுகள் இருப்பதையும், வன்னி மரங்கள் அதிகம் இருப்பதால் போர் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களாக இருக்கும் என்பதையும் ஆய்வின் முடிவில் கூறினார்கள்.

இந்த நிலையில் தான் மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் அம்பலத்திடலை அகழாய்வு செய்து தமிழர்களின் நாகரீக வாழ்க்கையை உலகிற்கு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் மீண்டும் ஒரு ஆய்வுக்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்ட ஆய்வாளர் மங்கனூர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் மேலப்பனையூர் கரு.ராசேந்திரன்,  கஸ்தூரிரங்கன், நாணயவியல் கழகம் எஸ்.டி.பசீர் அலி மற்றும் பலர் கள ஆய்வு செய்த போது அங்கே பழமையான செங்கல் கட்டுமானம், சுண்ணாம்பு கலவையுடன் முதுமக்கள் தாழிகள் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதையும் பழங்கற்கால கற்கோடரி கிடப்பதையும் கண்டறிந்தனர்.

கற்கோடரியை அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபுவிடம் ஒப்படைத்ததுடன் இந்த கற்கோடரி இரும்பு காலத்திற்கு முந்தையது அதாவது சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் கூறினார்கள்.

அம்பலத்திடலுக்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்துறையினர் முழுமையாக ஆய்வு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறை அனுமதியுடன் ஒரு வாரத்தில் சோதனைக்காக அகழாய்வு செய்யப்படும் என்று கூறினார்கள். இந்த நிலையில் தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த குறியீடுகளுடன் கூடிய கருப்பு சிவப்பு மண் பானைகள், கின்னத்தை மங்களநாடு கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், மறமடக்கி கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோரிடம் சித்தமருத்துவர் மதியழகன், மகாராஜா ஆகியோர் ஒப்படைத்தனர்.  இதன் பிறகாவது தமிழ்நாடு தொல்லியல் துறையும், மத்திய தொல்லியல் துறையும் அம்பலத்திடலை அகழாய்வு செய்து தமிழர்களின் வரலாற்றை வெளிக் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக