செவ்வாய், 8 அக்டோபர், 2019

திருச்சியை அதிரவைத்த ஜார்க்கண்ட் கும்பல்.. ` 200 ரூபாய் தினக் கூலி, கொள்ளையடிக்க புளூ பிரின்ட்!

lalitha jewellery
டைமண்ட் லாட்ஜ்;சி.ய.ஆனந்தகுமார் - என்.ஜி.மணிகண்டன் -வெங்கடேஷ்.ஆர் - விகடன் :
கைது செய்யப்பட்டுள்ள வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள வட மாநில இளைஞர்கள் திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில், கடந்த 2-ம் தேதி நடந்த கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நகைக்கடையின் உரிமையாளர், தமிழக டிஜிபி-யை சந்தித்து புகார் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தில் ஆஜரானார்கள். ஆனால், கொள்ளையர்கள் தங்களின் அடையாளத்தை மறைத்துக் கைவரிசை காட்டியதால், போலீஸார் சற்று தடுமாறிப்போனார்கள்.
இதையடுத்து, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவரும் வேளையில், திருச்சி ஐஜி அலுவலகத்துக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய ஜார்க்கண்ட் மாநில போலீஸார், `உங்கள் மாநிலத்தில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அபிஜூன் ஷேக், தற்போது கூட்டாளிகளுடன் உங்கள் ஊரில் தங்கியிருப்பதாக அவனது செல்போன் எண் மூலம் தெரிகிறது’ என்று கூற, திருச்சி போலீஸார் துரிதமாகக் களத்தில் இறங்கினர்.



அதன்பிறகு, ஜார்க்கண்ட் போலீஸார் கொடுத்த செல்போன் எண்ணை டிரேஸ் செய்ததில், அந்த எண் புதுக்கோட்டை புதியபேருந்து நிலையம் அருகேயுள்ள டைமண்ட் லாட்ஜ் அருகே இருப்பது தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில், புதுக்கோட்டை நகர போலீஸார் டைமண்ட் லாட்ஜில் ஆஜரானார்கள்.
அங்கு, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 6 வட மாநிலத்தவர் தங்கியிருப்பது தெரிந்தது. அவர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.


டைமண்ட் லாட்ஜ்
போலீஸாரின் தீவிர விசாரணையில், `எந்த வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும், 200 ரூபாய் தினக் கூலி’ எனக் கூறி அபிஜுன் ஷேக் என்பவர் அழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர். சாப்பாடு வாங்குவதற்காக அபிஜூன், அருகில் உள்ள கடைக்குச் சென்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, சாப்பாடு பொட்டலங்களுடன் லாட்ஜ் அறைக்குள் நுழைந்த அபிஜூன் ஷேக், போலீஸார் இருப்பதைப் பார்த்து பதறியபடி, தப்பிப்பதற்காகச் சுவர் ஏறிக் குதித்தார். அப்போது அவர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.



போலீஸாரிடம் அபிஜுன் ஷேக் அளித்த வாக்குமூலத்தில், “ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரிய நிறுவனங்களில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம். இதற்காக 200 ரூபாய் தினக்கூலி அடிப்படையில் ஐந்து இளைஞர்களை ஜார்க்கண்ட்டில் இருந்து தமிழகம் அழைத்துவந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.
இவர் ஏற்கெனவே, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடந்த மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஒரு வாரத்துக்கு முன்பாக புதுக்கோட்டை வந்த இந்தக் கும்பல், அப்பகுதியில் இருந்த அரசியல் பிரமுகர் நடத்திவரும் மிகப்பெரிய நகைக்கடையைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறது. கடந்த 2-ம் தேதி நள்ளிரவு, அந்த நகைக் கடையைக் கொள்ளையடிக்கவும் அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள வட மாநில இளைஞர்கள்
ஆனால், அதேநாள் அதிகாலை திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்துவிட்டதால், அவர்களால் கொள்ளையில் ஈடுபட முடியவில்லை எனவும் அபிஜுன் ஷேக் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார் என்கின்றனர்.


கைது செய்யப்பட்டுள்ள வட மாநில இளைஞர்கள்
அபிஜுன் ஷேக் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், மற்றவர்களை திருப்பூர் காங்கேயம் பகுதிக்கு அழைத்துச்சென்று அங்கு நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.



திருச்சியில் கைதுசெய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில இளைஞர்கள் ஷமீர் ஷேக், ஜியா உல் ஷேக், முகமது காலிக் ஷேக், ஷபிகுல் ஷேக், நசுருல் ஷேக் உள்ளிட்டோர்மீது கேரளா, டெல்லி, மும்பை, ஒடிசா, புவனேஸ்வர் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்தக் கும்பல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தங்கி, அந்தந்தப் பகுதிகளிலுள்ள நகைக்கடைகளைக் கொள்ளையடிப்பதற்காக நோட்டம் பார்த்ததும், காங்கேயத்தில் உள்ள நகைக்கடையைக் கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் போலீஸார் உறுதிசெய்தனர்.


அபிஜுன் ஷேக்
அபிஜுன் ஷேக்
அவர்களிடம் இருந்த கடப்பாரை, திருப்புளி, கத்தி, சுத்தியல், கயிறு மற்றும் மிளகாய்ப்பொடி பொட்டலங்கள், கொள்ளையடிப்பதற்கான புளூ பிரிண்ட் உள்ளிட்டவற்றைப் போலீஸார் கைப்பற்றினர். கைதான ஜார்க்கண்ட் மாநில இளைஞர்கள், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக