வியாழன், 17 அக்டோபர், 2019

கே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி

trichy Indian Bank Auctioning Dmk ex minister Kn nehru family Assetstamil.oneindia.com - ArsathKan : திருச்சி: முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய தலைவருமான கே.என்.நேருவின் சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளது இந்தியன் வங்கி.
திருச்சி கண்டோன்மென்ட் இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2002-ம் ஆண்டு கே.என்.நேருவின் குடும்பத்தினர் கடன் பெற்றுள்ளனர். நேருவின் தந்தை பெயரில் செயல்படும் ஜி.நாராயணன் அறக்கட்டளை நிறுவனத்திற்காக நேருவின் தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ரூ.109 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
இதற்கான அடமானமாக மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட தாயனூர் கிராமத்தில் உள்ள 80 ஏக்கர் நிலம் உள்ளிட்ட கட்டிடங்களின் பத்திரங்கள் வங்கியில் வைக்கப்பட்டன.
கடன் தொகையை கட்டச்சொல்லி வங்கியில் இருந்து பலமுறை அறிவுறுத்தப்பட்டும், பணம் செலுத்தத் தவறியதால் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி நேரு குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்களை சுவாதீனம் எடுத்துக்கொண்டது இந்தியன் வங்கி. இந்நிலையில், அந்த நிலம் மற்றும் கட்டிடங்களை முழுமையாக விற்பனை செய்ய உள்ளதாகவும் இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் அந்தச் சொத்துக்களின் தற்போதைய மதிப்பு 116 கோடி ரூபாய் என்றும், அதை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் நவம்பர் 11-ம் தேதி காலை மின்னணு ஏலம் மூலம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்ம அமைச்சருக்கே இந்த நிலையா(திருச்சி திமுகவினர் நேருவை அமைச்சர் என்றுதான் இன்றும் அழைக்கிறார்கள்) என அவரின் ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனைடையே நேரு வழக்கம் போல் உற்சாகமாக தான் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். கடந்த ஒரு வாரகாலமாக விக்ரவாண்டி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அவர், திருச்சி மறை மாவட்ட பிஷப் மறைவு செய்தி கேட்டு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று திருச்சி வந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக