திங்கள், 23 செப்டம்பர், 2019

புத்தர் சிலைகள் திருமால் சிலைகளாகிய வரலாறு .. . Budhdha become Vishnu (Ex. Sri Rangam)..

Selva Sel :உண்மையைச் ஆராய்ச்சியின் மூலம் சொல்ல எனக்கு பிடிக்கும்
புத்தரை தோல்வியின் பயத்தில் கடவுளாக ஏற்று ,வைணவக் கடவுள் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாக மாற்றிய இந்து மத பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)
8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்
தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது
மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் பல நாளிது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக் காலத்தில் நடை முறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டது. 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இது நிற்க.
பௌத்த மதக் கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றனவென்று சொன்னோம். அவை எவை என்பதை இங்கு ஆராய்வோம். இக்காலத்தில் இந்துக்கள் அவை பௌத்தமதக் கொள்கைகள் என்பதை முழுவதும் மறந்துவிட்டார்கள். இந்து மதத்தில் காணப்படும் பௌத்த மதக் கொள்கைகளாவன:

1. புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்டது.

இந்து மதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட போதிலும், அந்த மதத்தை உண்டாக்கிய புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக்கொண்டுவிட்டது. ஏன் ஒப்புக்கொண்டது?
புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பௌத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்!
இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா, அல்லது ஐயனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர் உள்ளன. இப்பெயர்கள் நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பௌத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றிவிட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளையார்) கோயிலாகவும் மாற்றிவிட்டார்கள். துடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதி சத்துவர், புத்தராக மாயாதேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பௌத்தமதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயருடைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றபப்ட்டன. பழைய சைவசமயத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவசமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட தென்றும் சைவப் பெரியார் உயர் திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டுக் கருதத்தக்கது. (தொடர்புரை 3 காண்க.)
2. பௌத்தச் சிறுதெய்வங்களை இந்துமதம் ஏற்றுக் கொண்டது.
மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக்காலத்தில் பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக்கொண்டு, இவைகளுக்குக் காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்கள் சூட்டிக் கிராமதேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் வீடுபேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பௌத்தரின் தாராதெவியம்மன் கோயில் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். அவ்வாறே, ஆங்காங்குத் திரௌபதையம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக் காலத்தில் தாராதேவியாலயங்களாக இருந்தன என்றும் கூறுவர். (மணிமேகலை, சம்பாபதி முதலிய பௌத்தத் தெய்வங்களைப் பற்றிய தொடர்புரை 4 காண்க.)
3. வேள்வியில் உயிர்கொலை நீக்கியது.
யாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும்பாவமென்பது பௌத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிட வேண்டுமென்பது வைதிகப் பிராமண மதக் கொள்கையாக இருந்தது. கடைசியாக, வைதீக பிராமண மதம் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து, பௌத்தமதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக் கொண்டது. அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டு வந்ததையும் நிறுத்திச் 'சைவ' உணவை உண்ணும்படி செய்ததும் பௌத்தமதம் தான். வைதீக மதத்தார் மாமிசம் உண்பதையும் யாகங்களில் உயிர்கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பௌத்த மதத்திற்குமட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரியதாகும்.
4. அரசமரத்தைத் தொழுதல்.
'போதி' என்னும் அரசமரம் பௌத்தர்களுக்குப் புனிதமானது. ஏனென்றால், அரசமரத்தடியில் இருந்து தியானஞ் செய்த போது புத்தருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. ஆகையால், பௌத்தர்கள் அரச மரத்தைப் புத்தரைப் போலவே போற்றி வணங்குவர். புத்தரைக் கூறும்போது 'மருள் அறுத்த பெரும் போதி மாதவன்' என்றும், 'பவளச் செஞ்சுடர் மரகதப் பாசடை, பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதியந் திருநிழற் புனிதன்' என்றும் 'பாசடைப் போதிப் பேரருள வாமன்' என்றும், ' வாடாப் போதி மரகதப் பாசடை மரநிழல் அமர்ந்தோன்' என்றும், அரசமரத்துடன் அவரைத் தொடர்பு படுத்தியே நூல்கள் கூறுகின்றன. பௌத்தரைப் 'போதியர்' (அரசமரத்தை தொழுவோர்) என்று தேவாரம் கூறுகின்றது. சங்ககாலத்திலிருந்த ஒரு பௌத்தப் புலவருக்கு 'இளம்போதியார்' என்னும் பெயர் இருந்ததும் ஈண்டு நினைவு கூரற்பாலது. அன்றியும் 'புத்தர் மேல் பக்திக்குக் காரணமான போதி விருட்சம் நின்னால் (பௌத்தரால்) புத்தனோபாதி (புத்த சம்பந்தமானது) என்று தொழப்பட்டவாறு போல, எனவும் ' புத்த பத்தி நிமித்தமாகப் போதிவிருட்சம் தொழுமாறு போல்' எனவும் வருகின்ற நீலகேசி உரைப்பகுதிகளாலும் பௌத்தர் அரசமரத்தைத் தொழுதுவந்த செய்தி அறியப்படும். இந்துமதம் பௌத்த மதத்தை அழித்துவிட்ட தெனினும், பௌத்தமதக் கொள்கையாகிய அரசமர வணக்கம் ஒழிக்கப்படாமல், இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. அரசமரத்தை வலம் வந்து வணங்குகின்ற இக்காலத்து இந்துக்கள், இந்த வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பதை அறியார். ஆனால், இவ்வணக்கத்தை உண்டாக்கியது பௌத்தர் என்பது மறுக்க முடியாத உண்மை.
5. மடங்கள் ஏற்படுத்தியது.
சைவ, வைணவ, ஸ்மார்த்த மதத்தினர் மடங்களை அமைத்து, அவற்றில் தத்தம் மதத் தலைவர்கள் இருந்து சமயத் தொண்டாற்ற ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இவைகளுக்கு 'மடம்' என்றும் 'சிம்மாசனம்' என்றும், 'பீடம்' என்றும் பெயர்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையங்கள் பௌத்தரின் பள்ளிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பௌத்த மதத்தின் உயிர் நாடியாயிருந்தது சங்கம். சங்கம் என்பது பௌத்த துறவிகளின் கூட்டம். இந்தத் துறவிகள் ஊர்தோறும் விகாரை அல்லது மடங்களை அமைத்து, அவற்றில் தங்கி நாட்டுமக்களுக்கு மத போதனை செய்து தங்கள் சமயத்தைப் பரவச் செய்து வந்தார்கள். இந்த நிலையங்களை முதல் முதல் உண்டாக்கிய பெருமை புத்த தேவருக்கே உரியது. புத்தர் இந்த நிலையங்களை உண்டாக்குவதற்கு முன்னே, துறவிகளும் சமயத் தலைவர்களும் காடுகள், மரச்சோலைகள் முதலிய இடங்களில் வசித்துவந்தனர். பின்னர், பௌத்த மடங்களைப் பின்பற்றி ஏனைய சமயத்தவரும் மடங்கள் அமைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர்.
6. அத்வைதம் உண்டானது.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கரா சாரியரால் உண்டாக்கப்பட்ட 'மாயாவாத மதம்' என்றும், 'ஏகான்மவாத மதம்' என்றும் சொல்லப்படுகின்ற 'அத்வைத மதத்தின்' அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிற்சிறந்த ஆன்றோர் கூறுகின்றார்கள். அத்வைத மதத்தை உண்டாக்கிய ஆதி சங்கராசாரியார் பௌத்தகுரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்று சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று சங்கராசாரியாரின் குரு கோவிந்தபாதர் என்றும், கோவிந்தபாதரின் குரு கௌடபாதர் என்னும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்தமதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூனியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடியினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்று மாயாவாதக் கருத்தினைப் பெற்றுக் கொண்டார் என்றும் மற்றுஞ் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியிற் புகவேண்டுவதில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்தமதத்தினின்று பெற்றுக்கொண்டார் என்பதுமட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆசாரியருள் தலைசிறந்தவரும், ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தவருமான இராமாநுசர், சங்கராசாரியாரின் அத்வைத மதத்தைப் 'பிரசன்ன பௌத்தம்' அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மாத்வாசாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் 'பிரசன்ன பௌத்தம்' என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்தர காண்டத்திலும் சங்கராசாரியாரின் மாயாவாத மதம் பிரச்சன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.
7. அன்னப்பறவையின் அவதாரம்.
பௌதர்களுக்குரிய புத்தஜாதகக் கதைகள் புத்தருடைய பழம் பிறப்புக்களைக் கூறுகின்றன. அக் கதைகளில் ஹம்சஜாதகமும் ஒன்று. அஃதாவது புத்தர் பெருமான், அன்னப்பறவையாகப் பிறந்து அரசனுக்கும் மக்களுக்கும் அறநெறி உரைத்தார் என்று கூறப்படுகிறது. இக்கதை, ஹம்சஜாதகம், சுல்ல (சிறிய) ஹம்சஜாதகம், மகா (பெரிய) ஹம்சஜாதகம் என்னும் மூன்று கதைகளில் கூறப்படுகிறது. புத்தரைத் திருமாலின் அவதாரமாக ஏற்றுக்கொண்ட வைணவர்கள், இந்த ஹம்ச ஜாதகக் கதையையும் எற்றுக்கொண்டார்கள். அஃதாவது புத்தரைப் போலவே திருமால் அன்னப்பறவையாகப் பிறந்து அறமுரைத்தார் என்று வைணவர்கள் கூறினார்கள்.
திருமங்கை ஆழ்வார் மட்டும் இந்தக் கதையைத் தம் பாசுரங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் ஏனைய ஆழ்வார்கள் இக்கதையைக் கூறவில்லை. திருமங்கை ஆழ்வார் கூறுகிற அன்னப் பறவை அவதாரம் பற்றிய செய்யுட்களாவன:
"துள்ளிமண்ணும் விண்ணோடும்
தோன்றாத இருளாய் மூடியநாள்
அன்னமாகி அருமறைகள்
அருளிச்செய்த அமலன்"
(5-பத்து. 1-திரு. 6)
"அன்னமாய் அன்று அக்கருமறை பயந்தான்
அரங்கமா நகர் அமர்ந்தானே."
(5-பத்து. 7-திரு. 3)
"முன்னுலகங்களேழும் இருள் மண்டியுண்ண
முதலோடு வீடுமறியாது
என்னிதி? வந்தென்ன இமையோர்திகைப்ப
எழில் வேதமின்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாயிருந்து அங்கற நூலுரைத்த
அதுநம்மை யாளும் அரசே"
(11-பத்து. 4-திரு. 8)
"மின்னுமாமழை தவழும் மேகவண்ணா
விண்ணவர்தம் பெருமானே! அருளாயென்று
அன்னமாய் முனிவரோடு அமரரேத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை"
(திருநெடுந்தாண்டகம் - 30)
இன்னும் இடங்களில் திருமாலின் ஹம்சஜாதகத்தை திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். விரிவஞ்சி இத்துடன் விடுகிறோம். இதனால், புத்தரைத் திருமாலின் அவதாரமாக வைணவர்கள் எற்றுக்கொண்டது போலவே, புத்தரின் அன்னப்பறவைப் பிறப்பையும் திருமாலின் ஹம்ச அவதாரமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது.
மேலே காட்டிய ஏழு கொள்கைகளும் பௌத்தமதத்தைச் சார்ந்தவை என்பதும் அக் கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டன. இதனின்று நாம் அறியக்கிடப்பது யாது? இந்துமதம் பௌத்த மதத்தை அழிந்துவிட்டது; ஆனால் பௌத்தமதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றளவும் கையாண்டு வருகின்றது என்பதே. பௌத்தமதம் தோல்வியுற்றது; ஆனால், அதன் கொள்கை வெற்றிபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக