வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சிதம்பரம் மீது நடவடிக்கையா? இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!

சிதம்பரம் மீது நடவடிக்கையா?  இன்று காங்கிரஸ் அவசரக் கூட்டம்!மின்னம்பலம் : சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நேற்று( செப்டம்பர் 5) ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
ஏறத்தாழ இருபது பொதுச்செயலாளர்கள் மற்றும் அனைத்து மாநில பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு அறிக்கையை வாசித்தார். அந்த அறிக்கை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக இருந்தது.

அதன் பிறகு சிதம்பரத்தின் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி அதிகாரபூர்வ கருத்து எதையும் காங்கிரஸ் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் சிதம்பரத்தின் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
நீதிமன்றத்தின் மூலம் அவர் நிரபராதி என வெளியே வரும் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்க வேண்டும் என்று கட்சிக்குள் சிலர் தலைமையிடம் வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. இதையடுத்து இன்று டெல்லியில் நடக்க இருக்கும் இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சிக்குள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக