திங்கள், 16 செப்டம்பர், 2019

அமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில்: மோடி-டிரம்ப்

மின்னம்பலம் பிரதமர் மோடியின் ஹுஸ்டன்
அமெரிக்காவில் இந்தியர்கள் நடத்தும் நிகழ்ச்சியில்: மோடி-டிரம்ப்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பதை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக இன்று உறுதி செய்துள்ளது.
வரும் செப்டம்பர் 21ஆம் தேதி, ஏழு நாள் அரசுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். ஐ.நா பொதுச் சபையில் பங்கேற்பது, பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பது, தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் விருதைப் பெறுவது, ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
செப்டம்பர் 22ஆம் தேதி, ஹுஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். 'ஹவ்டி மோடி' அதாவது ஆங்கிலத்தில் 'ஹவ் ஆர் யு மோடி' என்பதன் சுருக்கமாக ஹவ்டி மோடி என்று இந்நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சில நாட்கள் முன் அமெரிக்காவில் இந்நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பதாகைகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் மேடிஸன் சதுக்கத்தி்ல் நடந்த கூட்டத்தில் கூட இந்த அளவுக்கு இந்தியர்கள் பங்கேற்கவில்லை. இந்தியர்களுடன் சேர்ந்து இந்த முறை அமெரிக்காவின் 60 முக்கிய எம்.பி.க்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள், வர்த்தக தலைவர்கள், செனட் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக இன்று(செப்டம்பர் 16) அதிகாரபூர்வமான அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி ஹர்ஷ் வரதன் சிருங்கலா, இரு தலைவர்களும் ஒரே மேடையில் சந்திக்க இருப்பது இருவரிடையே உள்ள நெருக்கமான தனிப்பட்ட நட்பையும் இருநாடுகளுக்கு இடையிலான இணக்கமான சூழலையும் வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார். தனித்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த எதிர்பாராத சந்திப்பு இருநாடுகளுக்கும் பலவித பயன்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; செப்டம்பர் 22 ஆம் தேதி, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹூஸ்டன், டெக்சாஸ், மற்றும் ஓஹியோவின் வாபகோனெட்டா ஆகிய மாகாணங்களுக்குச் சென்று அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முக்கியமான கூட்டாண்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுவார். ஹூஸ்டனில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு நிகழ்வில் அதிபர் டிரம்ப் பங்கேற்பார். உலகின் மிகப்பழையான நட்பு நாடு, மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை மீண்டும் வலியுறுத்த இது சிறந்த வாய்ப்பு. அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் இந்த சந்திப்பின் மூலம் எரிசக்தி, மற்றும் வர்த்தக உறவு அடுத்த கட்டத்துக்கு செல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க எம்.பிக்கள் கவலை தெரிவித்துள்ள நிலையிலும், காஷ்மீர் மீது இந்தியா தனது கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், மோடி - டிரம்ப் சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட விழாக்களிலேயே ஹூஸ்டனில் நடைபெறும் ஹவ்டி, மோடி மிகப்பெரிய விழாவாக அமையும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக