வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சிதம்பரத்தின் தனிச் செயலாளர் பெருமாள் அப்ரூவர்?.. அமித் ஷா முழு மூச்சில் சிதம்பரத்தை குறிவைத்து தொடர் சதிகள் ..?

மின்னம்பலம் : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து திகாரிலேயே வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அதன்படி ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது அவரை சுற்றியிருந்தவர்களை எல்லாம் விசாரணைக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளன சிபிஐயும், அமலாக்கத்துறையும். அவ்வகையில் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது கூடுதல் தனிச் செயலாளராக இருந்தவரும் இலக்கியவாதியுமான கே.வி.கே. பெருமாளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது என டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அமலாக்கத்துறையும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உட்படுத்த இருக்கிறது.

பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் ப.சிதம்பரம் வர்த்கத்துறை அமைச்சர் ஆனது முதல் 2010 வரை சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக சிதம்பரத்தின் நிழல் போல இருந்தவர் கே.வி.கே. பெருமாள். சிதம்பரத்தைப் பார்க்க வேண்டுமென்றால் பெருமாளைதான் முதலில் பார்க்க வேண்டும் என்பது சிவகங்கை முதல் டெல்லி வரை அப்போது எழுதப்படாத சட்டமாக இருந்தது. பெருமாள் டெல்லியில் இருந்து சென்னை வருகிறார் என்றால், அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு நான்கைந்து கார்கள் வந்து நிற்கும். சென்னையில் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கான பேர் காத்திருப்பார்கள். இப்படி சிதம்பரத்துக்கும் அவருக்குமான அலைநீளம் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. டெல்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர் கேவிகே பெருமாள்.
2010க்குப் பிறகு சிதம்பரத்துக்கும், பெருமாளுக்கும் இடையில் மெல்ல மெல்ல சில உரசல்கள் எழுந்தன. காரைக்குடியைச் சேர்ந்த சுந்தரத்துக்கு ஒரு நிலப்பிரச்சினையில் பெருமாள் உதவியிருக்கிறார். இது சிதம்பரத்துக்குத் தெரியவர, கடுமையாக கோபித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அதேநேரம் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பெருமாளை எடுத்தெறிந்து பேசியதால் சிதம்பரத்துடனான தொடர்பை பெருமாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் என்றும் சிதம்பரம் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
கேவிகே பெருமாளின் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்து அவரது நெருங்கிய நண்பர்கள் அவருக்கு போன் செய்தபோது கூட, “பழசையெல்லாம் கிளறாதீங்க...’ என்று சொல்லி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பற்றிய கசப்புகளை எல்லாம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பெருமாள்.
இப்படிப்பட்ட பெருமாளைத்தான் இப்போது சிபிஐயும், அமலாக்கத்துறையும் போட்டிபோட்டு விசாரணைக்கு அழைக்கின்றன.
சிதம்பரத்தோடு பெருமாள் இருந்த 2007-10 கால கட்டத்தில்தான் ஐ.என்.எக்ஸ் . மீடியா வழக்குக்கான மூலச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஏற்கனவே சிதம்பரத்தை சந்தித்தது பற்றி இந்திராணி சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ப.சிதம்பரத்தை இந்திராணி, எத்தனை முறை சந்தித்தார், எங்கெங்கே சந்திப்பு நடந்தது, எவ்வளவு நேரம் நடந்தது என்பது ஆகிய முழு விவரங்களும் கே.வி.கே. பெருமாளுக்குத் தெரியும். இந்த அடிப்படையில்தான் அவரை விசாரணைக்கு உட்படுத்தி, இந்திராணி- சிதம்பரம் சந்திப்புக்கான ஆதாரங்களை திரட்ட முடிவு செய்திருக்கிறது சிபிஐ. இதற்காக பெருமாளை அப்ரூவர் ஆக்குவதற்கும் சிபிஐ மிகக் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது என்கிறார்கள்.
பெருமாள் அப்ரூவர் ஆனால், சிதம்பர ரகசியங்கள் சிபிஐக்கு கிடைக்கும், அதை வைத்தே இந்த வழக்கு மேலும் வலுப்படும் என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக