வியாழன், 26 செப்டம்பர், 2019

திணித்ததை எல்லாம் திங்க இது வடநாடு இல்லை. தமிழ்நாடு!

டான் அசோக்:   அந்தக் காலத்து பார்ப்பனர்களைப் போல இந்தக் காலத்து
பார்ப்பனர்கள் புத்திசாலிகள் இல்லை. அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் புனிதமானது எனச் சொன்னார்கள். ஆனால் யாரையும் படிக்கவிடவில்லை. அதேபோல் பகவத் கீதையில் அது இருக்கிறது, இது இருக்கிறது, பகவத் கீதைதான் உலகின் மிகப்பெரிய தத்துவம் என்றெல்லாம் அளந்தார்கள். ஆனால் அதையும் யாரையும் படிக்கவிடவில்லை. ஏன்?
சமஸ்கிருதத்தை எல்லோரும் படித்தால் அதில் புனிதத்தன்மை எல்லாம் ஒன்றுமில்லை என்பது தெரிந்துவிடும். அதைப்படித்தாலும்கூட வாய் மணத்துக்கிடக்காது, காலையில் பல் துலக்கித்தான் ஆகவேண்டும் என்பது புரிந்துவிடும்.
கீதையை எல்லோரும் படித்தால் அதில் மனித இனத்தின் ஒற்றுமைக்கு, சகோதரத்துவத்துக்கு, சமூகநீதிக்கு, மனிதாபிமானத்துக்குத் தேவையான தத்துவமெல்லாம் எதுவுமே இல்லை என்பதும் அது வெறும் வர்ண பேத, சாதி பேத ஆண்-பெண் பேத, பாவ-புண்ணிய கர்மக் கதைகளைத் தலையில் கட்டும் நூல் என்பது புரிந்துவிடும். அதனால்தான் மறைத்துவைத்து ஒளித்துவைத்து பில்டப்பை மற்றும் சத்தமாகக் கொடுத்துவந்தார்கள். நம் முன்னோர்கள் "அப்படிங்களா சாமி. ஆகட்டும் சாமி," போட்டு வாழ்ந்தார்கள்.
திராவிட இயக்கத்தினர்தான் அதையெல்லாம் எடுத்துப் படித்து பொதுமக்களிடம் அதன் உண்மைத்தன்மையை கொண்டுபோனார்கள். கம்பரசம், ஆரியமாயை, கீதையின் மறுபக்கம், கடவுளர் கதைகள் என திராவிட இயக்கத்தின் நூல்கள்தான் இந்தக் கதைகளை எல்லாம் புட்டுப்புட்டு வைத்தது. அதைப் படித்தவர்கள், புரிந்தவர்கள் "இதுக்காடா இவ்ளோ பில்டப் கொடுத்தீங்க... அட அயோக்கிய ராஸ்கல்களா.." எனத் தெளிந்தார்கள், நிமிர்ந்தார்கள்.

இப்போதும்கூட நேரலை விவாதங்களில் சுபவீ, அருள்மொழி போன்றவர்கள் ராமாயணத்தைப் பற்றி, கீதையைப் பற்றி, புராணங்களைப் பற்றி புட்டுபுட்டு வைக்கும்போது பாஜக/RSS சங்கிகள் போலீசிடம் மாட்டிய வடிவேலு போல திருட்டுமுழி முழிப்பதைப் பார்க்கலாம்.
ஆக ஒரு தரப்பு மட்டுமே படித்து, தெளிந்து மற்றவர்களுக்கும் புரியவைத்துக் கொண்டிருந்த விஷயங்களை நேரடியாக மக்களிடமே கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இந்தக் கால RSS பார்ப்பனர்கள் இறங்கிவிட்டார்கள். அதாவது கட்டுச்சோத்தை கூட்டத்தில் அவிழ்க்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள். அதனால்தான் இவர்களுக்கு புத்திசாலித்தனம் மிகவும் கம்மி என்கிறேன்.
முன்பெல்லாம், அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு 'இந்தி' குறித்த விவாதம் சமூகதளங்களில் எழும்போதெல்லாம் அது ஏன் தேவையில்லாத ஆணி என்பதைப் புரியவைக்க மிகவும் கஷ்டப்படுவோம். ஒரு நாலு பேர் காட்டுக்கத்தலாக கத்திக்கொண்டிருப்போம்.
ஆனால் இன்று பாஜக வெறித்தனமாக இந்தியைத் திணிப்பதால் இந்தி ஏன் அவசியமில்லை என்கிற புரிதல் பட்டிதொட்டிவரைக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இதே நிலைதான் பகவத்கீதைக்கும் ஏற்படப்போகிறது. தேமே என ஓரமாகக் கிடந்த பர்னிச்சரை எடுத்து தமிழக இளைஞர்கள் கையில் கொடுத்துள்ளது பாஜக. தாறுமாறாக உடைபடப்போவது உறுதி. ஏனெனில் திணித்ததை எல்லாம் திங்க இது வடநாடு இல்லை. தமிழ்நாடு!
-டான் அசோக்
-செப்டம்பர் 26, 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக