திங்கள், 23 செப்டம்பர், 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் : போட்டியிட விரும்பும் பிரபலங்கள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் : போட்டியிட விரும்பும் பிரபலங்கள்dailythanthi.com : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பல பிரபலங்கள் தங்கள் கட்சியிடம் விருப்பமனு அளித்து உள்ளனர். சென்னை நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க.வினர் சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் போட்டி போட்டு விருப்ப மனு வழங்கி வருகிறார்கள். அதுபோல், திமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் விருப்பமனு வாங்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி  தொகுதிக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.


அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்ற பேச்சும் பரவலாக அடிபடுகிறது.

பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் எப்படியும் இந்த தொகுதியை தங்கள் வசம் ஆக்கி விடலாம் என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டி களத்தில் இறங்கி  உள்ளனர்.

விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கள்ளக்குறிச்சி எம்.பி பொன்.கவுதம சிகாமணி விருப்பமனு அளித்து உள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட  முன்னாள் எம்பியும், அதிமுகவின் வழக்கறிஞர் அணிச் செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனுதாக்கல் செய்து உள்ளார்.

எம்பி தான் ஆக முடியவில்லை எம்எல்ஏவாவாது ஆகிவிடலாம் என்று மனோஜ் பாண்டியன் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். அதுவும் நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிவிட்டதால் இடைத்தேர்தலில் அதிமுக எளிதில் வெல்லும் என்பதால் எப்படியாவது வேட்பாளராகிவிட வேண்டும் என்பது மனோஜ் பாண்டியனின் எண்ணமாக உள்ளது.

இது போல் அதிமுக  நட்சத்திரபேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான  பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் போட்டியிட மூத்த தலைவர் குமரி ஆனந்தன் விருப்பமனு அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக