ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

நிர்மலா சீதாராமன் : வங்கிகள் இணைப்பால் ஒருவர்கூட வேலை இழக்க மாட்டார்கள்...


வங்கிகள் இணைப்பால் ஒருவர்கூட வேலை இழக்க மாட்டார்கள் - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
மாலைமலர் :  மத்திய அரசுக்கு சொந்தமான 10 பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைக்கும் நடவடிக்கையால் பணியாளர்களில் ஒருவர்கூட வேலை இழக்க மாட்டார்கள் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். சென்னை: இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பொருளாதார மந்தநிலையை எதிர் கொள்ள பல்வேறு புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு சமீபத்தில் ஒருங்கிணைத்துள்ளது. அதன்படி இதுவரை இருந்த 27 வங்கிகளின் எண்ணிக்கை இனி 12 வங்கிகளாக குறைக்கப்படும்.


வங்கிகளை இணைத்திருப்பது மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இந்த சீர்திருத்தம் மூலம் இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிக்க செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப 12 பொதுத்துறை வங்கிகளுக்கும் போதுமான அளவுக்கு மூலதன நிதி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அந்த நிதியை இந்த நிதியாண்டியிலேயே பொதுமக்களுக்கு வழங்க 12 வங்கிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளை ஒன்றிணைப்பதால் ஊழியர்களின் வேலை திறன் மேம்படும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுதவிர வங்கிகளின் செலவுகள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி பணியாளர்கள் போராட்டம்

ஆனால் வங்கிகளை இணைப்பதற்கு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆட்குறைப்பு செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இதையடுத்து, வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று (சனிக்கிழமை) நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட முக்கிய நகரங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையால் பணியாளர்களில் ஒருவர்கூட வேலை இழக்க மாட்டார்கள் என உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆள்குறைப்பு மற்றும் பணியாளர்கள் நீக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்களும், உருவாக்கப்படும் அச்ச உணர்வும் தவறானது எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக