ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

காஷ்மீர் தேர்தல்: இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம்?

மின்னம்பலம் :
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் இந்தியா தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கடந்த வெள்ளிக்கிழமை(செப்டம்பர் 6) வாஷிங்டனில் இருந்து காஷ்மீர் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பரவலான தடுப்புக்காவல்கள் மற்றும் காஷ்மீரில் வசிப்பவர்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் நாங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறோம். சில பிராந்தியங்களில் இணையம் மற்றும் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக வரும் அறிக்கைகள் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும், "மனித உரிமைகளை மதிக்கவும், இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் போன்ற தகவல் தொடர்பு சேவைகளை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்கவும் இந்திய அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மாநில தலைவர்களுடனான அரசியல் ஈடுபாட்டை இந்திய அரசாங்கம் மீண்டும் தொடங்குவதற்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட தேர்தல்களை விரைவாகத் திட்டமிடுவதற்கும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை வெளியான ஒரு வார காலத்திற்கு முன், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் "காஷ்மீரில் வசிப்பவர்கள் மீதான தடுப்புக் காவல்கள், தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் பற்றிய அறிக்கைகளால் நாங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறோம். மனித உரிமைகளுக்கான மரியாதை, சட்ட நடைமுறைகளுக்கு இணங்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் அனைவரையும் உள்ளடக்கிய உரையாடலை தொடங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,”என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்நாட்டு நிலைமை குறித்து அமெரிக்கா மீண்டும் தனது கவலையை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ய தான் முன்வருவதாக கூறியிருக்கிறார். தொலைபேசியிலும் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் இது குறித்து கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்கள் நேற்று இரவு காஷ்மீர் குறித்து பேசினோம். பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரம் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறார். அவர்கள் பாகிஸ்தானுடன் பேசுவார்கள், அவர்களால் மிகச் சிறப்பாக ஏதாவது செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும் அவர்கள் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.
அச்சமயத்தில், காஷ்மீர் ஒரு இருதரப்பு பிரச்சினை என்றும், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் வேறு எந்த நாட்டையும் தொந்தரவு செய்ய இந்தியா விரும்பவில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிரம்ப் -மோடி சந்திப்பிற்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீருக்குள் இருக்கும் நிலைமையைக் குறிப்பிடும் வகையில் அமெரிக்க அதிகாரிகள் இரண்டு முறை அதிகாரபூர்வமாக கருத்துகளை வெளியிட்டிருக்கிறது.
அதே சமயம், காஷ்மீர் குறித்த நிலைப்பாட்டில் அதிபர் டிரம்ப்பின் கருத்துக்களும் அமெரிக்க வெளியுறவுத்துறை, அமெரிக்க தூதரக  செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்களும் முரணாக இருப்பதாகவும், ஆச்சர்யம் அளிப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக