ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

இம்ரான் கான் : டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இல்லை!

வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்
மாலைமலர் : வழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல் வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ‘அல் ஜசீரா’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கிய பின்னர் இனிமேல் டெல்லியிடம் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இல்லை என இந்த பேட்டியின்போது இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்தார். பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்குமாறு சர்வதேச பொருளாதார நடவடிக்கை குழுவிடம் பரிந்துரைத்த இந்திய அரசு எங்கள் நாட்டை பொருளாதார ரீதியாக பேரழிவுக்குள்ளாக நினைக்கிறது எனவும் இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.


நான் போரை வெறுப்பவன். போரினால் பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது என்பதால், போரை எப்போதுமே விரும்பியதில்லை. அதனால்தான் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேச அரங்கிலும் பாகிஸ்தான் முன்வைத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பாகிஸ்தான் முதலில் போரை ஆரம்பிக்காது. போர் தொடங்கினால்,  இந்திய துணை கண்டத்தையும் தாண்டிச் சென்று அது பேரழிவாக அமைந்து விடும்.

போர் தொடங்கினால் வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுப்போக கூடும். ஆனால், அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகள் என்ற முறையில் அது அணு ஆயுதப் போரில்தான் போய் முடியும். இதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு  கடும் பின்விளைவுகள் ஏற்படும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் (கடவுள் காத்தருளட்டும்) வழக்கமான போர் முறையில் இந்தியாவிடம் தோற்றுப்போக கூடும். ஆனால், உனது விடுதலைக்காக சாகும்வரை போரிடு அல்லது சரணடைந்து விடு என்ற நிலைப்பாடு நாட்டுக்கு வந்து விட்டால் பாகிஸ்தானியர்கள் சாகும்வரை போரிடுவார்கள் என்பது எனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக