ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?

dmkdmkdmknakkheeran.in - athanurchozhan : இடைத்தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்ற பிம்பம் அப்படியே இருக்கிறது. கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலின் போது நடைபெற்ற 22 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுக கைப்பற்றினாலும், 9 தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றி திமுக கூட்டணிக்கு தனது பலம் பறிபோய்விடவில்லை என்பதை நிரூபித்தது.
மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் கூட அதிகமான வாக்குகளைப் பெற்றே அதிமுக இந்த 9 பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது என்பது அந்தச் சமயத்திலேயே குறிப்பாக பேசப்பட்டது. அதாவது, ஆளுங்கட்சியின் இடைத்தேர்தல் வேலைப்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்றும், திமுகவினரின் சொதப்பலுக்கு கிடைத்த தோல்வி என்றும் விமர்சிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, நான்கு மாத இடைவெளியில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தனித்து நடைபெற்ற தேர்தலில் வெறும் 8 ஆயிரத்து சொச்சம் வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதாவது வெறும் நான்கு மாதங்களிலேயே இந்தச் சரிவு ஏற்பட்டது.

அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான மக்கள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றமே இந்தச் சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்தான், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குனேரி தொகுதியிலும், திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம் அடைந்ததால் காலியான விக்கிரவாண்டி தொகுதிக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை பார்ப்பது, இடைத்தேர்தல் நிலவரத்தை கணிக்க வசதியாக இருக்கும்.



2016 சட்டப்பேரவை தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 74,932 வாக்குகளையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட 57,617 வாக்குகளையும், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்ட சுரேஷ் அலி 14,203 வாக்குகளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜெயபாலன் 9,446 வாக்குகளையும், பாஜக சார்பில் தனித்து போட்டியிட்ட 6,609 வாக்குகளையும் பெற்றனர்.

அதாவது பொதுத்தேர்தலுடன் நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு இது. ஆனால், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதை கவனிக்க வேண்டும்.

அதுபோலவே, 2016 பேரவைப் பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 63,757 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 56,845 வாக்குகளையும், பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 41,428 வாக்குளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் 9,981 வாக்குகளையும் பெற்றனர். பாஜக தனித்து போட்டியிட்டு 1,291 வாக்குகளை மட்டுமே பெற்றது.
இதுவும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்பதையும், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்களவைப் பொதுத்தேர்தலின்போது உருவான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அப்படியே இருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணிக்கட்சிகளின் திமுக எதிர்ப்பு கடுமை மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால், திமுக கூட்டணியிலோ, மக்களவைத் தேர்தலின்போது இருந்த பாஜக, அதிமுக எதிர்ப்பின் கடுமை வெகுவாகக் குறைந்திருக்கிறது என்ற விமர்சனம் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் மத்தியிலேயே உருவாகி இருக்கிறது.



திமுகவின் பொருளாளரான துரைமுருகனே சமீபத்தில் தி ஹிண்டு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து பட்டும்படாமலும் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்கள் வழக்கமான இடைத்தேர்தல்கள்தான். இந்தத் தொகுதிகளின் முடிவுகளால் அதிமுக அரசு கவிழப்போவதில்லை. அதுபோல திமுக ஆட்சிக்கு வரப்போவதுமில்லை. எனவே, வழக்கமான இடைத்தேர்தலாகவே பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஆளுங்கட்சியோ, வேலூரில் திமுகவை திணறடித்ததுபோல, இந்த இரண்டு தொகுதிகளையும் திமுக அணியிடமிருந்து கைப்பற்றி, தனது வாக்கு வங்கியை நிரூபிக்கவும், கூட்டணியின் பலம் குறித்த வாக்காளர்களின் அவநம்பிக்கையை போக்கவும் உறுதியேற்றிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றைக் கைப்பற்றினாலும் அதிமுக அணிக்கு லாபம் என்பதால் முதல்வர் எடப்பாடி, தனது அமைச்சர்களை இரண்டு தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக அறிவித்திருக்கிறார்.

திமுகவும் தனது மாவட்டச் செயலாளர்களையும், தலைமைக்கழக நிர்வாகிகளையும் இரண்டு தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறது. ஆனாலும், இடைத்தேர்தல் வேலைகளில் அதிமுகவினரைப் போல திமுகவினர் பணப்பட்டுவாடாவிலோ, வாக்காளர்களை கவனிப்பதிலோ போதுமான கவனம் செலுத்த மாட்டார்கள் என்ற விமர்சனம் அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகளே என்பதால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பணத்தை இறக்கி வேலை செய்வார்களா என்பதும், அவர்களுக்காக திமுக பணத்தை இறக்கி வேலை செய்யுமா என்பதும் சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தத் தேர்தல் முடிவு தங்களுடைய பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு என்பதால், பணபலம் அதிகார பலம் ஆகியவற்றை ஆளுங்கட்சி முழுவீச்சில் பயன்படுத்தும் என்பது உறுதி. அதுமட்டுமின்றி, விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவும், தேமுதிகவும் பலமாக இருக்கும் நிலையில் அந்தத் தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்றுமா, பறிகொடுக்குமா என்று இப்போதே தொகுதியில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.


 நாங்குனேரியில், காங்கிரஸுக்கென்று நிரந்தர வாக்குகள் இருந்தாலும், அது எல்லாத் தேர்தல்களிலும் மொத்தமாக கிடைத்ததில்லை. வசந்தகுமார் போட்டியிடும் சமயத்தில் அவருடைய கவனிப்புகளே அவருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தனது ஆசைக்காக ராஜினாமா செய்த இந்தத் தொகுதியை எப்படியும் காங்கிரஸுக்கு கிடைக்கும் வகையில் அவர் இப்போதும் வேலை செய்வாரா என்பதைப் பொறுத்தே இந்தத் தொகுதியின் முடிவு இருக்கிறது. கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கு வித்தியாசத்தை நிறைவு செய்யும் வகையில் தேமுதிக, பாஜக வாக்குகளும், தினகரன் கட்சி, கமல் கட்சி வாக்குகளையும் அதிமுக அறுவடை செய்ய முடிந்தால், திமுக அணியின் பாடு திண்டாட்டம்தான் என்பதே கள எதார்த்தம்.

 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இரண்டு அணிகளும் இந்தத் தேர்தலை கருதுவதால் போட்டி கடுமையாகவே இருக்கும். எடப்பாடி தலைமைக்கும், ஸ்டாலின் தலைமைக்கும் இந்தத் தேர்தல்கள் சவாலாகவே இருக்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக