வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஸ்டாலின் உத்தரவு : திமுக நிகழ்சிகளுக்கு பேனர் வைக்க கூடாது .. வைத்தால் நான் கலந்து கொள்ளமாட்டேன்

திமுக நிகழ்ச்சிகளில் பேனர் கூடாது : ஸ்டாலின் உத்தரவு!மின்னம்பலம் ": திமுக நிகழ்ச்சிகளில் பேனர்
வைக்கக் கூடாது என்று ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பேனரால் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தை தொடர்ந்து பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சுபஸ்ரீ உயிரிழப்பைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. அப்போது, சட்ட விரோத பேனர் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு திமுக தலைவர் கூட ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருக்கிறார் என்று திமுக வழக்கறிஞர் கண்ணதாசனிடம் கேள்வி எழுப்பியதுடன் அவ்வாறு ஒரு வேலை தெரிவித்திருந்தாலும் அதை ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.
அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியினருக்குச் சட்டவிரோதமாகப் பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் திமுக நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கக் கூடாது. விளம்பரத்துக்காக அனுமதி பெற்று ஓன்று இரண்டு பேனர்கள் பாதுகாப்புடன் வைக்கலாம். பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளமாட்டேன். இதையும் மீறி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக