ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

"டிராகன் பழத்தின் மருத்துவ குணம்" மக்கள் அதிகம் அறிந்திராத அரிய பழம்


Rubasangary Veerasingam Gnanasangary : வணக்கம் நண்பர்களே.
எழுதுவதற்குப் பல நூறு விடயங்கள் இருந்தும் எதை முதலில் எழுதுவது என்று ஜோசித்துக் கொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவர் தனது
முகப்புத்தகத்தில் Dragon fruit பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். ஆகவே அதையே முதலில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.முதலில் ஒரு அன்பான எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிறேன். தயவு செய்து மருந்து என்று நினைத்து டிராகன் பழத்தை அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடத் தேவையில்லை. “டிராகன் பழத்தின் மருத்துவ குணம்” என்று நூற்றுக் கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. உண்மையில் அவர்கள் ஒருவரையொருவர் காப்பி அடித்து எழுதுகிறார்களே ஒழிய அவர்கள் ஒன்றும் துறைசார் வல்லுனர்கள் இல்லை. வியாபாரத்தை பெருக்குவதற்காக மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். இந்த பழம் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான் ஆனால் பொருத்தம் இல்லாத விலை. ஆன்டி ஆக்சிடன்டுகள் நாம் வழக்கமாக சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உண்டு, அதற்காக டிராகன் பழத்தை தேடி அலைய வேண்டியதில்லை. டிராகன் பழம் ஊதிப் பெருப்பித்த விலையில் விற்பனை செய்யப் படுவதற்கான ஒரு காரணம் இதனது அழகுத் தோற்றமுமே. ஆதலால் இந்த பழங்களுக்கு உயர்தர ஹோட்டல்களில் அதிக கிராக்கி உண்டு. புதிதாக அறிமுகமான பழப் பயிர் என்பதால் தேவைக்கு ஏற்ற வழங்கல் இல்லை.

கள்ளி (cactus) இனத்தை சேர்ந்த இந்த டிராகன் பழ செடி படரும் இனம் ஆகும். சிலர் அழகுக்காக வீடுகளில் வைத்திருக்கும் Night-blooming cereus கூட கள்ளி இனம்தான். இவை இரண்டினதும் பூக்களுமே ஒரே மாதிரியாக இருக்கும். இரெண்டுமே இரவில்தான் பூக்கும். பிளிப்பீன்ஸில் டிராகன் பழத்தை Saniata என்று அழைப்பார்கள். அதன் அர்த்தங்கள் “ஒளியும் செல்வமும்” (light and wealth) மற்றும் விதியின் புதிய அம்சங்களை வெளிக்கொண்டு வருதல் மற்றும் அதிஸ்டத்தையும் குறிக்கும். இந்தச் செடி 16ஆம் நூற்றாண்டிலேயே பிளிப்பீன்சுக்கு அறிமுகப் படுத்தப் பட்டுவிட்டது. இதன் பூவீகம் மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகும். இது வர்த்தக ரீதியாக பயிருடும் வழக்கம் வரும் முன்னர் அழகுக்காகவும் அதிஸ்டம் என்று கருதியும் வளர்த்து வந்துள்ளார்கள்.
பெரியளவில் நிழல் அற்ற டிராகன் பழ செடியை நாம் நமது வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பது மிகவும் பொருத்தமானது. மிகவும் அழகாக நத்தாருக்கு அலங்காரம் பண்ணியதைப் போன்று இருக்கும். வெப்பவலயங்களில் சிறப்பாக வளரும். கொஞ்சம் அமிலத் தன்மையுடைய நீர் தேங்கும் தன்மையற்ற மண் சிறந்தது. நீர் தேங்கும் பகுதியாயின், நிலமட்டத்தில் இருந்து உயர்த்த மரப்பலகைகளில் மூன்று அடிக்கு மூன்று அடி சதுரப் பெட்டி அடித்து மண் நிரப்பி நாற்று நடமுடியும். களிமன்னாயின் மணலும் நன்றாக மக்கிய தொழு உரமும் சேர்த்தால் போதும். அழகான கூந்தல் போன்ற குடை அமைப்பை உருவாக்க சீமெந்தில் ஆன தூண்களை அண்டி நான்கு பக்கமும் நடுதல் வேண்டும். வேலிகளில் ஒற்றை நான்றாகவும் நடுகை செய்ய முடியும். நாற்று எடுத்தலில் இருந்து மீழ்நடுகை மற்றும் அறுவடை வரை புரிந்து கொள்வதற்காக கீழே Youtube வீடியோ இணைப்பு ஒன்றும் தந்துள்ளேன். அது ஆங்கிலத்தில் இருந்தாலும் பார்த்தாலே புரியும்படிதான் உள்ளது.
வர்த்த நோக்கோடு பயிரிட விரும்புபவர்களுக்கும் டிராகன் பழ சாகுபடி சிறந்தது. நீண்டகாலப் பயன் இருந்தாலும் இதனுடைய விலை மதிப்பு எப்போதுமே தொடரும் என்று நினைத்து பேராசை படக்கூடாது. நிச்சயமாக ஊடுபயிராக வளர்க்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக