ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

ராஜினாமாக்கள் உணர்த்தும் செய்தி

savukkuonline.com : > இது ராஜினாமாக்களின் கதை மட்டும் இல்லை. இந்த நாட்டின் தற்போதைய நிலை. அரசாங்க உயர்பதவியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவது ஒன்றும் புதிதல்ல. அது எந்த செய்தித்தாள்களிலும் இடம்பெறுவதுமில்லை. ஆனால் தற்போது உயர்பதவிகளில் இருப்பவர்கள் பதவி விலகுவதாய் சொல்வதும் அதற்காக அவர்கள் சொல்கிற காரணங்களுமே அதைத் தலைப்பு செய்தியாக்குகிறது,
கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வெளிவந்த இரண்டு இராஜினாமா செய்திகள் மனசாட்சியுள்ள பொதுமக்களை அசைத்துப் பார்த்தன. மங்களூரின் துணை கமிஷனர் (மாவட்ட ஆட்சியர்) சசிகாந்த் செந்தில் தனது ஐஏஎஸ் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். அந்த அதிர்வு அடங்குவதற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தன்னுடைய பதவி விலகலை அறிவித்தார்.
ஒரு காலத்தில்  பலம் கொண்டிருந்த நமது ஜனநாயக அமைப்பிற்கு மோசமான அழிவு நேர்ந்து கொண்டிருப்பதைத் தான் இரண்டு பதவிவிலகல்களும் நமக்குச் சொல்கின்றன.

சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்தவர். திருச்சி மண்டல பொறியியல்  கல்லூரியில் படித்தவர். ஐஏஎஸ் தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடமும், இந்திய அளவில் ஒன்பதாவது இடமும் அவருக்குக் கிடைத்திருந்தன. மிகத் திறமையான அதிகாரி என்றே பெயர் வாங்கியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் சட்டவிரோதமான இரும்புத் தாதுக் கொள்ளை சர்வசாதரணமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு உதவி கமிஷனராக செந்தில் பொறுப்பேற்றிருந்தபோது தனது குழுவுடன் சட்டவிரோதமான கடத்தல் லாரிகளைக் கைப்பற்றியிருக்கிறார்.
அந்த லாரிகள் அனைத்தும் ரெட்டி சகோதரர்களுடையவை. மாங்களூரில் துணை கமிஷனராக இருந்து ராஜினாமா செய்வதற்கு முன்பும் மணல் கடத்தல் கும்பலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.
கர்நாடாகாவின் முக்கிய நதியாக இருப்பது நேத்ராவதி. மங்களூர் மாவட்டம் முழுமைக்கும் நீர் ஆதாரம், விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இந்த நதியை நம்பியே இருக்கிறது. பெரும்பாலும் விவசாயிகளைக் கொண்டுள்ள மாவட்டம் இது. இந்த நதியில் மணல் அள்ளுவதற்கான அனுமதி உண்டு. ஆனால் மணல் அள்ளுவது என்பது மணல் கொள்ளையாக மாறிய பின் அதன் விளைவு மோசமானதாக இருந்தது. செந்திலும், தெற்கு கர்நாடகா  காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் மணல் கொள்ளைக்காரர்களின் அக்கிரமங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. நேத்ராவதி நதிக்கரை மட்டுமல்லாமல் கடற்கரையோரப் பகுதியும் தப்பிப் பிழைத்தத்தாகவே நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதோடு மட்டுமல்லாமல், மணற்கொள்ளைகாரக் கும்பலின் சொத்துகளையும் பறிமுதல் செய்ததன் மூலம் அவர்களின் ஸ்தம்பிக்க வைத்ததும் செந்திலின் நடவடிக்கையினாலேயே நடந்திருக்கிறது.
2019 மே மாதம் செந்தில் இணையதளம் மற்றும் ஆப் (www.dksandbazaar.com) ஒன்றினையும் அறிமுகம் செய்திருந்தார் செந்தில். இன்று வரை அந்த இணையதளம் முறையான மணல் வர்த்தகம் மற்றும் பங்கீட்டிற்கான உதாரணமாக இருக்கிறது. மணல் அள்ளுவதின் வெளிப்படைத்தன்மையும் சட்ட விரோத மணற்கொள்ளையையும் இந்த இணையதளம் மூலம் தடுக்க முடிந்திருக்கிறது. CRZ எனப்படுகிற கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் அனைத்தும் இந்த இணையம் வழியாக மட்டுமே விற்கப்படுகிறது. இந்த நிர்வாகரீதியான நடவடிக்கையினால் இங்கிருந்து அள்ளப்படும் மணல் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் உடுப்பி மாவட்ட நிர்வாகமும் இந்த இணைய சேவையைத் தொடங்கியது.
இப்படி பல்வேறு சிக்கலான பிரச்சனைகளிலும் செந்தில் தனது புதுமையான அணுகுமுறையால் தீர்வு கண்டிருக்கிறார் என்கிறார்கள் அவருடன் பணியாற்றியவர்கள்.
சசிகாந்த் செந்திலின் ராஜினாமா குறித்து அவர் தெரிவித்தக் கருத்தாக டெக்கான் ஹெரால்ட் வெளியிட்டது, “எனக்கு மாநில அரசிடமிருந்தோ, உள்ளூர் எம்எல்ஏக்களிடமிருந்தோ எந்த அழுத்தமும் தரப்படவில்லை. சித்தாந்தரீதியிலான சில முடிவுகளே எனது ராஜினாமாவுக்கு காரணம். இந்த நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது உடன்பாடின்மையைக் காட்டவே ராஜினாமா செய்தேன். எனக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன. அதன்படியே வாழ்கிறேன். இந்நாட்டில் நடக்கும் சில மாற்றங்கள் எனது கொள்கைக்கு எதிரானதாக இருந்தன. என்னால் அதை சகித்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இந்தப் பொறுப்பில் நான் தொடர்ந்தேன் என்றால், இத்தனை வருடங்களாக நான் கடைப்பிடித்து வந்த எனது கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படுபவனாக ஆவேன்” என்று கூறியிருந்தார்.
தி ஹிந்து இதழுக்கு அளித்த நேர்காணலிலும் கூட இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார். “நாட்டில் ஏற்பட்டு வரும் பல மோசமான மாற்றங்கள் என்னை சில காலங்களாகவே தொந்தரவுக்கு உட்படுத்தியிருந்தன. இந்த நாட்டின் அரசியலமைப்பின் ஆன்மாவை நிலைநிறுத்தவே நாங்கள் இந்தப் பொறுப்புக்கு வருகிறோம். ஆனால் அந்த நோக்கம் சிதைக்கபடும்போது இந்த அமைப்பில் இருந்து கொண்டே எங்களது எதிர்ப்பையோ, கருத்தையோ வெளியிட இயலாது. அதானாலேயே இந்த முடிவை எடுத்தேன்” என்றிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றுமொரு ஐஏஎஸ் அதிகாரியும் ராஜினாமா செய்திருந்தார். அவரின் கருத்தும் செந்திலின் கருத்தோடு உடன்பட்டு செய்யப்பட்ட ராஜினாமாவாக இருந்தது.
2012 வருட ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். தனனுடைய ராஜினாமாவுக்கு அவரும் பாஜகவின் செயல்பாடுகளையே சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை அணுகுமுறையை அவர் எதிர்த்திருந்தார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கண்ணன் கோபிநாதன் கூறியதாவது, “அரசியலமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எந்த வலுவான எதிர்ப்பும் இல்லை என்பது என்னை வேதனையடையச் செய்தது. யாருமே அரசைக் கேள்விக் கேட்கவில்லை. நாம் அனைவருமே, இந்த மோசமான நடவடிக்கைகளின் பங்காளிகளாகவும், அரசின் ஒரு பகுதியாகவும் ஆக்கப்பட்டோம்.  இந்த சரித்திர நிகழ்வுக்கு நாங்களும் உடந்தை என்பதான உணர்வு ஏற்படுத்தப்பட்டது. அமைப்புகள் வீழ்கையில்,  தனி நபர்கள்தான் உறுதியுடன் எதிர்த்தெழ வேண்டும், வேறு வழியே இல்லை”.

கண்ணன் கோபிநாதன்
கண்ணன் கோபிநாத்தின் கருத்தை வலு சேர்க்கும் வகையில் The News Minuteக்கு அளித்த செந்திலின் நேர்காணல் அமைந்திருந்தது.
“நீங்கள் பகுத்தறிவுடன் ஒரு விவாதத்தை எடுத்து வைக்கையில் அதை எதிர்ப்பதற்கு அதி தீவிர தேசியவாதம் முன்வைக்கப்படுகிறது. இது ஃபாசிச செயல்பாடுகளில் ஒன்று. ஒரு விவாதம் தொடங்கும்போதே அதை முறியடிக்க  ‘தேச விரோதி’ என்று நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். தேசத்துக்கு உங்களது நன்றிக்கடன் இதுதானா என்கிற கேள்வி நம் முன் வைக்கப்படுகிறது. இவர்கள் இப்படியானதொரு மாபெரும் கட்டமைப்பைக் கொண்டு வருகிறார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்கவில்லை என்றால், ‘ஏன் சிலர் மட்டும் விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள்’ என்பதை மக்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். ஊடகங்களும், நிறுவனம் சாரா பத்திரிகைகளும், அதிகாரிகளுமே இதை விவாதத்துக்கு உட்படுத்த முடியும்.”
“நமது நாடு நமது அரசியலமைப்பின் விழுமியங்களின் மீது  கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது கொள்கைகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவை யாவும் அரசியலமைப்பின் ஆன்மாவை மீறியதாக இருந்து விடக்கூடாது. அரசியலமைப்பின் விழுமியங்களுக்கு உட்பட்டே தான் நாம்  நமது கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். ஒரு கொள்கை சட்டபூர்வமானதாக இருக்கலாம்.  ஆனால் அது, நமது அரசியல் சாசனத்தின் ஆன்மாவுக்கு எதிரானதாக இருந்தால், அது தவறான கொள்கையே” என்று கூறியிருந்தார் சசிகாந்த் செந்தில்.

சசிகாந்த் செந்தில்
“ஒவ்வொரு இளம் அதிகாரியும் பொறுப்பை ஏற்கிறபோது ஜனநாயகமான, மதச்சார்பற்ற சூழலில் பணி செய்கிறோம் என்கிற நம்பிக்கையில் தான் பணியைத் தொடங்குகிறார்கள். அந்த சூழல் விஷத்தன்மையாகும்போது அது அவர்களுக்கு எவ்வளவு சிக்கலானதாக மற்றும் என்பது புரிந்து கொள்ளகூடியதே. ஆனால் இந்த இரண்டு இளம் அதிகாரிகளும் அவர்களின் பணியில் தொடர்ந்திருந்தால் இந்த சமூகத்துக்கு அவர்கள் எவ்வளவோ செய்திருக்க முடியும்” என இரண்டு இளம் அதிகாரிகளின் ராஜினாமா குறித்து மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன் ‘சவுக்கு’க்கு கருத்து தெரிவித்தார்.
அரசியல் வேறு, நிர்வாகம் வேறு. நிர்வாகத்தில் கறைபடிந்த அரசியல் நுழையும்போது அதன் பாதிப்பு நிச்சயம் மக்களுக்கானது தான். முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசின் கொள்கை, அதன் முடிவுகள் போன்றவை நிர்வாகத்தில் உள்ளவர்களை நிம்மதியிழக்கச் செய்கின்றன என்பது ஆபத்தின் அறிகுறி. ராஜினாமா செய்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் நேரடியான எந்த அரசியல் ரீதியிலான அழுத்தமும் தங்களுக்குத் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இருவருமே தங்களது பணிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்களால் எதிர்த்தும் போராடியும் செய்தாக வேண்டிய பணிகளை செய்திருக்கிறார்கள். ஆனால் அரசின் ஒரு அங்கமாக இருக்கும் நிர்வாகத் துறையில் இருந்து கொண்டு அரசு செய்கிற அத்தனை நியாயமற்ற செயல்களுக்கும் எந்த எதிர்க்கருத்தும் சொல்ல முடியாத  நிலையில் இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை அழுத்தமாய் சொல்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்தும், ஊடகத்திலிருந்தும் எதிர்க்குரல் வெளிவராமல் இருப்பதற்கு 24 மணிநேரமும் வேலை செய்யும் மத்திய அரசு தன் வேர் அழுகிக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கிறது.
ஒரு நாடு இயங்குவதென்பது வெறும் அரசியல் செயல்பாடுகளால் மட்டுமல்ல, நிர்வாகத்திறன் கொண்ட அதிகாரிகளின் செயல்பாடுகளினாலும் தான். அதைத் தொலைத்துவிட்டு ‘மக்களுக்காக நாங்கள்’ என்று சொல்வது எத்தனை போலித்தனம்!!!
அதிர்சியூட்டக்கூடிய மற்றுமொரு ராஜினாமாவாக அமைந்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான தஹில் ரமாணியுடையது. மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி தஹில் ரமாணி பணியிடமாற்றப்பட்டதன் எதிரொலியே இந்த ராஜினாமா என்பது உயர்நீதிமன்ற வளாகத்தில் உலாவும் வதந்தியாக இருக்கிறது. பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாகவும், வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுமாகவே இருக்கிறது. மேகலாயா  உயர்நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்வதில் மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆணையம் உறுதியாக இருக்கவில்லை, அதன் அறிக்கையில் “பணியிட மாற்றம் தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற நீதிபதி ரமணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூடுமந்திரக் கூட்டம் போல இயங்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு எதற்காக நீதிபதி ரமணியை பணியிட மாறுதல் செய்கிறது என்பதற்கு எந்தக் காரணத்தையும் வெளியிடவில்லை. இத்தனைக்கும் நீதிபதி ரமணி அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஒய்வு பெற இருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் குழு ஒன்று நீதிபதி ரமணியின் பணியிட மாற்றலை இரத்து செய்யும்படி ஒ உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பியது. “இப்போது அவரை சிறு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்வதென்பது ஒருவித தண்டனை மற்றும் சிறுமைப்படுத்தும் செயலன்றி வேறொன்றுமில்லை. இதனை நிர்வாக ரீதியிலான கொள்கை முடிவு என்கிற ரீதியில் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் இந்த முடிவினை ஒவ்வொரு அங்கத்திலும் செயல்படுத்த வேண்டியிருக்கும். பணிமூப்பு கொண்ட ஒருவரை சிறிய உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வதென்பது முரணானதாக உள்ளது. ஒவ்வொரு பணியிட மாறுதலும் நியாயத்தின் அம்சத்துடனேயே அமைய வேண்டும். ஆனால் இதிலோ எந்தவித விதிமுறைகளும் நீதிபதிகளின் பணியிட மாறுதலில் கடைப்பிடிக்க[ப்படவில்லை என்பது கவனம் கொள்ள வைக்கிறது” என்று கூறுகிறது அந்த கடிதம்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் சென்னைக்கு அடிக்கடி வந்து போனதின் பின்னணியில் இந்த பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது என்று நம்பத்தகுந்த ஒருவர் தெரிவித்த தகவல்.  அவர் மேலும் தெரிவித்ததாவது, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு பெண் வழக்கறிஞரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய அந்த உச்சநீதிமன்ற நீதிபதி விரும்பியதாகவும், அதை ஒப்புக் கொள்ள, தலைமை நீதிபதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.   எப்போதெல்லாம் அந்த உச்சநீதிமன்ற நீதிபதி சென்னைக்கு வருகை தருகிறாரோ அப்போதெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நேரில் மரியாதை செலுத்தவேண்டும் என எதிர்பார்த்திருக்கிறார். இதனை நீதிபதி தகில் ரமாணி செய்யவில்லை என்பது தெரிகிறது. ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தனிப்பட்ட காரணத்துக்காக வருகை தருகிறார் எனில் அவரை சந்திக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்ற காரணத்தால் நீதிபதி ரமாணி மரியாதை நிமித்தமான சந்திப்பினைத் தவிர்த்திருந்தார். இதுவும் கூட நீதிபதி ரமாணியை தண்டனை போன்று மேகலாயாவுக்கு மாற்றுவதற்கான காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அமைந்திருக்கிறது.
நமது நாட்டின் மிகச் சிறிய உயர்நீதிமன்றங்களில் ஒன்று மேகலாயா உயர்நீதிமன்றம். இந்த நீதிமன்றத்திந் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் மூன்று மட்டுமே. ஒட்டுமொத்த உயர்நீதிமன்றத்திலும் உள்ள நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை ஜூலை 2019 ஆண்டு வரை 767 மட்டுமே.  ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75.  4 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தலைமை நீதிபதி தகில் ரமாணி, தலைமை நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தை திறம்படவே நடத்திக் கொண்டிருந்தார்.  சாதகமான தீர்ப்புகளை பெறும் பொருட்டு, வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுப்பதும், சாதகமான நீதிபதி முன்பு வழக்குகளை எடுத்துச் செல்வதும், சென்னை உயர்நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது.   ஒரு நீதிபதி வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றாலோ, ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்ட நீதிபதியிடம் அந்த வழக்கை நடத்த விரும்பவில்லை என்றாலோ, அடுத்து அந்த வழக்கு எந்த நீதிபதியிடம் செல்ல வேண்டும் என்பதை, ஒரு அட்டவணையாகவே ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் வெளியிடும் முறையை நீதிபதி தகில் ரமாணி செயல்படுத்தினார்.
அதே போல, ஒரு நீதிபதி, ஒரு பிரிவிலிருந்து, வேறு பிரிவுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப் படுகையில், சில நீதிபதிகள், “சில வழக்குகளை”  அவர்களே தொடர்ந்து விசாரிப்பதாக உத்தரவிடுவார்கள்.   இதற்கான உத்தரவுக்கு பெயர் “Part-Heard”.  சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீதிபதியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். இந்த முறையையும் முடிவுக்கு கொண்டு வந்தார் நீதிபதி தகில் ரமாணி.
தேவையில்லாமல் வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையுமே சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார். எவரேனும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஏதேனும் தெரிவிக்க வேண்டுமெனில் எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் குறை சொல்ல முடியாத வகையில் பணியாற்றியும் கூட இந்த மூடுமந்திர  உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு அவரை மேகாலயாவுக்கு பணியிட மாறுதல் உத்தரவு அளித்திருக்கிறது.
நீதிபதி ரமாணி தனது ராஜினாமா கடிதத்தை இந்தியத் தலைமை நீதிபதி, இந்திய ஜனாதிபதி இருவருக்கும் அனுப்பியயுள்ளதை என்பது அவர் கடந்த வியாழனன்று நீதிபதிகளுடனான விருந்தில் உறுதி செய்திருந்தார்.
இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த தலைமை நீதிபதியும் ராஜினாமா செய்வதென்பது நமது ஜனநாயகத்தின் வேர் சிதிலமடையத் தொடங்கியிருப்பதின் அறிகுறியே. அது மேலும் மேலும் உலுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
இந்த ராஜினாமாக்கள் குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் திரு ஆர்.மணி அவர்கள், “நம்மை சுற்றி இருளும், அவநம்பிக்கையும் சூழ்ந்திருக்கும் ஒரு நிலையில், இந்த அதிகாரிகளின் பதவி விலகல், ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.  நான் இதை ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றாக பார்க்கிறேன்.

ஆர்.மணி
அதே நேரத்தில், இந்த ஆட்சியின் தன்மை மற்றும், எதிர்குரல்களை நசுக்கும் அதன் போக்கு ஆகியவற்றை வைத்து பார்க்கையில், இந்த ஆட்சி இதை எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தனது காலுக்கு கீழே ஒரு புல் முளைப்பதை கூட அனுமதிக்காத இந்த அரசாங்கம், இத்தகைய எதிர்குரல்கள் வலுவாக எழுவதை எப்படி கையாளப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி” என்றார் ஆர்.மணி.

“வஞ்சகமான காலகட்டத்தில் உண்மை பேசுவதே புரட்சிகரமான செயல் தான்” என்றார் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வேல்.
இந்தியாவில் இது வஞ்சகர்களின் காலம். உண்மையைப் பேசித்தான் ஆக வேண்டும் என்று முடிவெடுப்பதே புரட்சிகரமான செயல் தான். இதற்கு ஒருவர் தனது உயரிய பதவியை விட்டுத் தர வேண்டியிருக்கிறது.
இந்தியாவில், மனசாட்சி உள்ள ஒருவரும், இந்த பாசிச போக்குக்கும், பாசிச சக்திகளுக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்பதை இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.
“மோசமான நபர்கள் செய்யும், அடக்குமுறைகளையும், கொடுங்கோன்மைகளையும் விட, அதைக் கண்டும் காணாமலும் நல்லவர்கள் அமைதியாக இருப்பதே துர்பாக்கியமானது” என்றார் மார்ட்டின் லூதர் கிங்.
இந்நெருக்கடியான நேரத்தில், கலகக் குரல் எழுப்பியிருக்கும், இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், வாழ்த்துக்களும், வணக்கங்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக