வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்திராணி போராவை சந்தித்ததே இல்லை: சிதம்பரம்

இந்திராணியை சந்தித்ததே இல்லை: சிதம்பரம்மின்னம்பலம் : இந்திராணி முகர்ஜியை ஒருபோதும் சந்தித்ததாக நினைவில் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதியிலிருந்து நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் மூலமாக தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நான்காவது நாளாக இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. அப்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல், இந்திராணி முகர்ஜியுடன் சிதம்பரத்தைத் தொடர்புபடுத்த சிபிஐயிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்தார்.
“இந்திராணி முகர்ஜியை எந்தவொரு இடத்திலும் சந்தித்ததாக என் நினைவுக்கே வரவில்லை. நிதியமைச்சராக இருப்பவரை தினமும் நூற்றுக்கணக்கானோர் சந்திப்பது வழக்கம். நீங்கள் வேண்டுமானால் நிதியமைச்சகத்தின் வருகைப் பதிவேட்டை சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம்” என சிதம்பரம் தரப்பு வாதத்தினை கபில் சிபல் முன்வைத்தார்.
இதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜியை சந்தித்த நாளின் வருகைப் பதிவேட்டை காணவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, வருகைப் பதிவேடு அழிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. ஆனால், ஹோட்டல் ஒபராயில் சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி சந்தித்ததற்கான கார் பார்க்கிங் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று குறிப்பிட்டார்.
சிதம்பரத்திற்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவித்த துஷார் மேத்தா, “சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்தால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. விசாரணைக்கு சிதம்பரம் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவரை வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்” என்றும் வாதிட்டார். மேலும், “ப.சிதம்பரம் அவரது குடும்பத்தினர் மூலம் ட்விட்டர் போன்ற சமூக ஊடகத்தை பயன்படுத்தி விசாரணையை பாதிக்க செய்கிறார். எனவே அவர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக