வியாழன், 5 செப்டம்பர், 2019

காஷ்மீரிகள் பேசக் காத்திருக்கிறார்கள்!

மின்ன்னம்பலம் : எப்படி இருக்கிறது ‘இந்திய’ காஷ்மீர்? - 2
 முகேஷ் சுப்ரமணியம்
செப்டம்பர் 11, 1958ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) இயற்றப்பட்டது. அமைதிக்குறைவான பகுதிகள் என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் ஆயுதமேந்திய படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது.
முதன்முதலாக இச்சட்டம் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இன்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் யாரையும் சோதனையிடவும் பொருட்களைக் கைப்பற்றவும் முடியும். ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம் அவரைப் பாதுகாக்கும்.

இச்சட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 1989ஆம் ஆண்டு நிகழ்ந்த காஷ்மீர் கிளர்ச்சிக்குப் பின் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் ஆதிக்கம் காஷ்மீர் நிலத்தில் அதிகரித்தபடியே இருக்கின்றது. இந்திய ராணுவம் காஷ்மீரிகளை உடலளவில் மட்டும் அச்சுறுத்தவில்லை. உளவியல் ரீதியாகவும் அவர்கள் மீது தனது அச்சுறுத்தலை தொடர்ந்து வந்திருக்கிறது.
1991 ஆம் ஆண்டு தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் கப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த குனன் போஷ்போரா என்ற இரட்டை கிராமங்களுக்குள் நுழைந்த ராணுவம் அங்குள்ள பெண்களை வன்புணர்வு செய்தது. முதல் தகவல் அறிக்கையில் 23 பெண்களை ராணுவம் வன்புணர்வு செய்தது என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஐநா மனித உரிமைகள் ஆணையம் 100 பேருக்கும் மேல் கூட்டு வல்லுறவால் பாதிப்படைந்தனர் என தகவல் அளித்தது. மேலும், இது திட்டமிடப்பட்ட உளவியல் யுத்தம் எனவும் அந்த ஆணையம் கூறியது. இந்த உளவியல் யுத்தத்தை இந்திய ராணுவம் பல்வேறு விரும்பத்தகாத வகையில் தொடர்ந்து வருவது இன்னும் கொடுமை.

காஷ்மீரில் 4000க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சட்டத்தின்படி பாதுகாப்பு படைகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை வைக்கமுடியும்.
இதற்கிடையே, சாதாரண மக்களின் வீடுகளில் நடத்தப்பட்ட நள்ளிரவு சோதனைகளின்போது கொடூரமாக தாக்கப்படுவதாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் பலரும் கூறுவதை கேட்க முடிகிறது.
சிறப்பு வரைவு நீக்கப்பட்ட பின்பு, காஷ்மீரிகள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அச்சம் கொள்கின்றனர். ராணுவம் அவர்களின் ஆழ்மனதில் ஏற்படுத்திய நடுக்கம் நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டது. எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) நடத்திய ஆய்வில், காஷ்மீரின் வயது வந்தோரில் 45 சதவீதம் பேர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 93 சதவிகிதம் பேர் வன்முறை அல்லது தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக மாற்றம் செய்யப்பட்ட பின்பு, அந்நிய முதலீடுகளை நுழைக்க பெரும் திட்டங்களை இந்திய அரசு முன்னெடுத்து வருகின்றது. காஷ்மீரை பொருளாதார முதலீடு செய்யும் சந்தையாக மட்டும் மாற்றினால் காஷ்மீர் முன்னேறுமா? காஷ்மீரிகளின் தற்போதைய தேவை வேலை வாய்ப்பை விடவும், அமைதி மட்டுமே.
(கட்டுரையின் அடுத்த பகுதி நாளை காலை 7 மணி பதிப்பில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக