செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி .. ஒரு தொகுதியை பாஜக கேட்கிறதாம் .. அதிமுக ஆலோசனை

தினகரன் : சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடந்து முடிந்தது. ஆனால் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை  அறிவிப்பதில் அதிமுகவில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜக ஒரு தொகுதியை கேட்பதால், இன்று சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு செய்யப்படுகிறது.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த  சனிக்கிழமை அறிவித்தார்.அதன்படி, இந்த இரண்டு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று (23ம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, அதிமுக, திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு  தாக்கல் செய்யலாம் என்று கடந்த சனிக்கிழமை அறிவித்தது.அதிமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்ய விரும்புகிறவர்கள், 22ம் தேதியும் (நேற்று முன்தினம்), 23ம் தேதியும் (நேற்று) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ₹25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்பமனு பெறலாம் என்று கட்சி  தலைமை அறிவித்தது.அதன்படி நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன், கே.ஆர்.பிரபாகரன் மற்றும் கணேஷ்ராஜா, நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்ளிட்ட 54 பேரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில்  போட்டியிட முன்னாள் எம்பி ஆர்.லட்சுமணன் உள்ளிட்ட 36 பேர் என மொத்தம் 90 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

அதேபோன்று, புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 10 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.நேற்று மாலை 3 மணியுடன் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கே, விருப்ப மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும்  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வளர்மதி மற்றும் அனைத்துலக எம்ஜிஆர்  மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மாவட்ட அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ராஜலட்சுமி மற்றும் அதிமுக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நேர்காணல் நடைபெற்றது.விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றபோது, அதிமுக கட்சியில் எவ்வளவு நாட்களாக இருக்கிறீர்கள், எந்தெந்த போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள், தொகுதியில் வெற்றிபெற எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பது  உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மேலும், தற்போது அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரண்டு கோஷ்டிகள்  உள்ளதால் தலா ஒரு தொகுதியை தங்கள் அணியினருக்கு பெற்றுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. நேர்காணல் முடிவடைந்ததும் நேற்று மாலையே அதிமுக வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த  அறிவிப்பும் கட்சி தலைமை வெளியிடவில்லை.

நேர்காணல் முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பரிசீலனையில் உள்ளது” என்றார்.“இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும்” என்று அதிமுக மூத்த  நிர்வாகி ஒருவர் கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக கட்சியே போட்டியிட விரும்புகிறது. ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜ, பாமக, தேமுதிக  ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன்படி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இதனால் பாஜ மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழகத்தில் காலூன்ற முடியாத  சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நாங்குநேரி தொகுதியில் பாஜ போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதுபற்றி பாஜ தலைமை அதிமுக தலைமையிடம் பேசியுள்ளது.  எப்படியாவது நாங்குநேரி தொகுதியில் அதிமுக ஆதரவுடன் பாஜ போட்டியிட்டு வெற்றிபெற திட்டம் போட்டுள்ளது. ஆனால், இதற்கு அதிமுக கட்சியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று  சென்னையில் கூட்டப்படுகிறது. பாஜவுக்கு நாங்குநேரி தொகுதியை விட்டுக்கொடுப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.நேர்காணல் முடிவடைந்ததும் நேற்று மாலையே அதிமுக வேட்பாளர்கள் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் கட்சி தலைமை வெளியிடவில்லை

90 பேரில் 12 பேரிடம் மட்டுமே நேர்காணல்
அதிமுக சார்பில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களிடம் நேற்று மாலை நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அதிமுக தலைமை  அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அதிமுக ஆட்சி மன்ற குழுவில் இடம்பெற்றிருந்த முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் நேர்காணல் நடத்தினர். ஆனால் விருப்பமனு செய்த 90 பேரையும்  அழைத்து நேர்காணல் நடத்தப்படவில்லை என்றும், குறிப்பிட்ட 12 பேரிடம் மட்டுமே நேர்காணல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து நேர்காணல் பங்கேற்க ஒருவர் கூறும்போது, “அதிமுக தலைமை எங்களை நேரில் அழைத்து நேர்காணல் நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்து பேசினர். மீதமுள்ள 78 பேருக்கும்  தமிழகத்தில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று கூறியுள்ளனர்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக