வியாழன், 5 செப்டம்பர், 2019

BBC : ஆசிரியர் தினம்: சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அறிவுத் திருட்டில்.? .. ஒரு ஆய்வு !

இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் முன் இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர், ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியது மற்றும் தனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பிய நண்பர்கள் மற்றும் மாணவர்களிடம் அதை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் தாம் மிகவும் மகிழ்வேன் என்று அவர் கூறியதைத் தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்த 1962 முதல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது ஆகியவை பரவலாக அறியப்பட்ட தகவல்களே.
ஆனால், ராதாகிருஷ்ணன் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, அவர் மீது பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவரே அறிவுத் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தினார், அதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியவர் மீது தொடர்ந்த வழக்கு ஆகியவை அதே வீச்சில் விவாதிக்கப்படவோ, அறியப்படவோ இல்லை.

1929ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான 'மாடர்ன் ரிவ்யூ' எனும் இதழில் மீரட் கல்லூரியில் தத்துவவியல் பேராசிரியராக இருந்த ஜாடுநாத் சின்ஹா என்பவர், அப்போது கல்வி மற்றும் இலக்கிய வட்டாரங்களில் பெரும் மதிப்பையும் செல்வாக்கையும் பெற்றிருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.


கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1915ஆம் ஆண்டு இளங்கலை தத்துவவியல் பட்டம் பெற்ற சின்ஹா அதே ஆண்டில், பல்கலைக்கழகம் வழங்கும் மதிப்பு மிக்க பிலிப் சாமுவேல் ஸ்மித் பரிசு மற்றும் கிளிண்ட் நினைவுப் பரிசு ஆகியவற்றை பெற்றார். 1917ஆம் ஆண்டு முதுகலை தத்துவவியல் பட்டமும் பெற்றார் ஜாடுநாத் சின்ஹா.
1922 மற்றும் 1923 ஆகிய ஆண்டுகளில் கல்கத்தா பல்கலைக்கழத்தில் பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் திட்டத்துக்கு இரண்டு பாகங்களாக 'இந்தியன் சைக்காலஜி ஆஃப் பெர்செப்ஷன்' எனும் தலைப்பில் ஆய்வறிக்கையை தாம் சமர்ப்பித்து இருந்ததாகவும், அந்த ஆய்வறிக்கையின் மதிப்பீட்டாளர்களில் ஒருவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தாம் இயற்றிய இந்திய தத்துவவியல் எனும் நூலின் இரண்டாம் பாகத்தில் தனது ஆய்வறிக்கைகையில் எழுதியிருந்த சில பாகங்கள் திருடப்பட்டு, காப்புரிமை விதிகளை மீறி பயன்படுத்தி இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ராதாகிருஷ்ணனின் இந்த நூல் 1927இல் வெளியாகி இருந்தது. இதே நூலின் அலகுகள் 8 மற்றும் 9 ஆகியன 'த வேதாந்தா அக்கார்டிங் டு சம்காரா அண்ட் ராமானுஜா' எனும் தலைப்பில் வெளியானது.


இந்த நூல்களில் தாம் எழுதிய ஆய்வறிக்கையின் அலகுகள் 1 முதல் 8 வரை உள்ள வெவ்வேறு வாசகங்ககள் இடம் பெற்றுள்ளதாக சின்ஹா குற்றம் சாட்டியிருந்தார்.
மீரட் கல்லூரியின் சஞ்சிகையில் தமது ஆய்வறிக்கையின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகள் 1924 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் வெளியாகி இருந்ததை தமது குற்றச்சாட்டுக்கு ஆதரவான சாட்சியமாக முன்வைத்தார் சின்ஹா.
மாடர்ன் ரிவ்யூ இதழின் அடுத்த மூன்று மாதங்களுக்கான பதிப்பில் (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் 1929) சின்ஹா எழுதிய கடிதங்கள், அதற்கு ராதாகிருஷ்ணன் எழுதிய கடுமையான பதில்கள் ஆகியன வெளியாகின.


பிப்ரவரி மாத இதழில் வெளியான தனது பதிலில் தம்மை மாடர்ன் ரிவ்யூ இதழின் ஆசிரியர் ராமானந்த சட்டோபாத்யாய் தம்மை அச்சுறுத்துவதாக எழுதி இருந்ததும் வெளியிடப்பட்டது.

வழக்கும் எதிர் வழக்கும்

1929 ஆகஸ்டு மாதம் பேராசிரியர் ஜாடுநாத் சின்ஹா 20,000 ரூபாய் இழப்பீடு கேட்டு சர்வபள்ளி ராதகிருஷ்ணனுக்கு எதிராக வழக்கு ஒன்றை கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
அடுத்த மாதமே ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு கேட்டு ஜாடுநாத் சின்ஹா மற்றும் சட்டோபாத்யாய் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்தார் ராதாகிருஷ்ணன். அப்போது ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்று சில கோடி ரூபாய் மதிப்புக்கு நிகரானது.

வழக்கு நடந்துகொண்டே இருந்ததே ஒழிய, யாரும் யாருக்குமே இழப்பீடு கொடுக்கவில்லை. 1933இல் நீதிமன்றத்துக்கு வெளியே விவகாரத்தை முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டார் சின்ஹா.
ஏற்கனவே செல்வாக்கு மிக்க நபராக இருந்த ராதாகிருஷ்ணன், அப்போது ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார். ஆனால், சின்ஹா ஒரு பேராசிரியர் மட்டுமே. சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைவிட அதிகாரம், பணபலம் ஆகிய இரண்டிலுமே குறைந்தவர்.


தமக்கு ஆதரவாக சாட்சிகளை அவரால் நீதிமன்றத்துக்கு அழைத்து வர அவரால் முடியாமல் போனதற்கு இதுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
அப்போதைய கல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட்ட ஆணை மூலம் அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
ஆனால், எந்த அடிப்படையில் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜாடுநாத் சின்ஹா ஆகியோர் சமரசம் செய்துகொண்டனர் அல்லது சட்ட நடவடிக்கையை மேலும் தொடராமல் இருக்க ஒப்புக்கொண்டனர் என்ற தகவலை இருவருமே வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக