புதன், 18 செப்டம்பர், 2019

BBC ; யஷ்வந்த் சின்ஹா காஷ்மீரில் இருந்து சக்கர நாற்காலியில் திருப்பி அனுப்பப்பட்டார் வீடியோ


காஷ்மீரில் நிலைமைகள் அனைத்தும் இயல்பாக உள்ளதாக இந்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காஷ்மீருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், காஷ்மீர் விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். டெல்லிக்கு திரும்பிய அவரோடு பிபிசி இந்தி மொழி செய்தியாளர் சந்தீப் ராய் பேசினார். அவருக்கு நடந்தவை பற்றி அவரே விளக்கினார். அவரது வார்த்தையில்...
2016ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கு குழு ஒன்றை ஏற்படுத்தினோம். ஐந்து அல்லது ஆறு முறை அங்கு சென்றுள்ளோம். இதுவரை யாரும் எங்களை தடுத்ததில்லை.
காஷ்மீரில் எல்லாம் இயல்பாக இருக்கிறது என்று இந்திய அரசு கூறி வருகிறது. 44 நாட்கள் கடந்துவிட்டன. நாங்கள் அங்குள்ள நிலைமையை காண விரும்பினோம்.
நாங்கள் திட்டமிட்ட 36 மணிநேர பயணத்தில் இன்று காஷ்மீர் சென்று நண்பர்களை சந்தித்து விட்டு நாளை மாலை திரும்பிவர எண்ணியிருந்தோம்.
வாஜாஹாத் ஹபிபுல்லா முன்னதாக சென்றார். அதன் பிறகு சுசெவா பார்வி, பாரத் பூஷன், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) கபில் காக் மற்றும் நான் 3.25 மணிக்கு ஸ்ரீநகரை சென்றடைந்தோம்.

அங்கு துணை கண்காணிப்பாளர் பட்காமை நாங்கள் சந்தித்தோம். எல்லாரும் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், நான் திரும்பி செல்ல வேண்டுமெனவும் அவர் கூறினார்.
எந்த சட்டத்தின் கீழ் இதனை செய்கிறீர்கள் என்று கேட்டபோது, அவ்விடத்தைவிட்டு சென்ற அவரை இரண்டரை மணிநேரம் காணவில்லை. அதன் பின்னர் வந்த அவர் 144 பிரிவின் கீழ் இதனை செய்வதாக தெரிவித்தார். என்னால் நகரில் அமைதிக்கு பங்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுமார் 3 மணிநேரத்திற்கு பின்னர் ஆணையோடு அங்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர், என்னை டெல்லி திரும்பிபோக வேண்டுமென தெரிவித்தார்.
அறநெறி மற்றும் சட்டத்திற்கு முன்னால் இது சரியல்ல என்று நான் தெரிவித்தபோது, முழங்காலில் காயம் இருந்ததால், சக்கர நாற்காலியில் இருந்த என்னை வாருங்கள் அழைத்து சென்றார்கள்.
என்னை எழ விடாமல், தயாராக நின்றிருந்த விமானத்திற்கு அழைத்து சென்று டெல்லிக்கு திருப்பி அனுப்பிவிட்டர்கள் என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.
எல்லாம் இயல்பாக இருக்கிறது என்றால், அனைவரும் காஷ்மீரில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால், நாங்கள் அங்கு செல்வதை ஏன் தடுக்கிறீர்கள்? இதனை மக்களிடம் கொண்டு செல்வோம், அரசு கூறுவது தவறு என்று தெரிவிப்போம் என்று தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது, அங்கிருந்த சுற்றுலா துறையின் அலுவலகத்தில் விசாரித்தோம். சுற்றுலாவுக்கு யாரும் வருவதில்லை என்று அங்கிருந்தோர் தெரிவித்தனர் என்று சின்ஹா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக